பயனர்:Jakini Theva/கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி முன்தோற்றம்

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி
படிமம்:முருகானந்தா கல்லூரி சின்னம்.jpg
அமைவிடம்
கிளிநொச்சி , இலங்கை
தகவல்
வகைஅரசுப் பள்ளி 1AB
தொடக்கம்1939
அதிபர்திரு.ச.புண்ணியமூர்த்தி
தரங்கள்1–13
பால்ஆண், பெண்
மாணவர்கள்650 வரை
மொழிதமிழ்,ஆங்கிலம்
இணையம்

கிளிநொச்சி மாவட்டத்தில் மருத நிலச் சோலையாய் விவசாயப் பாட்டாளி மக்களின் சுவர்க்க பூமியாக முரசுமோட்டை என்னும் முத்தான கிராமம் மிளிர்கின்றது.இதன் அழகினை மேன்மேலும் அழகு சேர்க்கும் கலைக்கூடமாக பள்ளிப்பிள்ளைகளின் அறிவு பசி தீர்த்து,தன்னை அண்டி வருவோரை அரவணைக்கும் அன்னையாக முருகானந்தா கல்லூரி முருகுடனே தலைநிமிர்ந்து நிற்கின்றது . வெள்ளாடைக்குள்புகுந்து வலம் வரும் பள்ளிப் பிள்ளைகளும்,இப் பிள்ளைகளின் பிஞ்சு நெஞ்சத்துள் பிரகாசிக்கும் அறிவு ஊற்றுக்களும் இக் கல்லூரியின்  பெருமைகளை பறைசாற்றி நிற்கின்றன .

பாடசாலைக்கீதம்[தொகு]

          முருகானந்தா கல்லூரி-வளர்கவே வளர்கவே 
          முரசுமோட்டைப் பதியிற்கல்வி வரமருளும் எங்கள் அன்னை 
                                                    (முருகானந்தா கல்லூரி )
          பெருமானந்த கல்விதனை 
          பொழிந்திடவே எமக்கு ஊட்டி 
          அருளானந்த பக்தி தந்தே
          அறிவு ஆற்றல் நல்கும் அன்னை  
                                                    (முருகானந்தா கல்லூரி )
          செந்தமிழும் ஆங்கிலமும் 
          செழுங்கலைகள் விவசாயம் 
          விந்தை மிகு விஞ்ஞானம் 
          விளங்கும் கணித வர்த்தகமும் 
          புந்தி மகிழ் உடலியலும் 
          பொருளாதாரப் புவியியலும் 
          தந்து மனையியல் சமய 
          ஞானமூட்டும் எங்கள் அன்னை 
                                                    (முருகானந்தா கல்லூரி ) 
          நல்லதிபர் ஆசிரியர் 
          நமக்கு ஞானம் நல்கிடுவர் 
          சொல்லும் செயல் மனத்தாலே 
          சொரிந்தன்பாய்ப் பணிந்திடுவோம் 
          வல்லவராய் வாழவைத்து 
          வளங்கள் யாவும் நல்கும் அன்னை 
          வல்ல முருகானந்தா கல்லூரி வளர்கவே வளர்கவே
                                                     (முருகானந்தா கல்லூரி)

மகுட வாசகம்[தொகு]

தூரநோக்கு[தொகு]

மாறிவரும் உலக மாற்றங்களுக்கேற்ப சவால்களை எதிர்கொள்ளும் மாணவ சமுதாயத்தை உருவாக்குவோம் .

நோக்கக்கூற்று[தொகு]

மாணவர்களது ஆற்றல்,திறன்கள் மற்றும் முன்னேற்றம் என்பவற்றை ஏற்படுத்த பெற்றோர்களின்,ஆசிரியர்களின் சமூகத்தின் பங்களிப்புடன் மாறிவரும் உலகை வெற்றி கொள்ளும் மாணவர்களை உருவாக்குதல்.

அதிபர்கள் விபரம்[தொகு]

  1. திரு.ம.முருகேசு
  2. திரு.ச.வேலுப்பிள்ளை
  3. திரு.ச.சரவணமுத்து
  4. திரு.க.கந்தையா
  5. திரு.ர.சுப்பிரமணியம்
  6. திரு.அ.அந்தோனிப்பிள்ளை
  7. திரு.செ.வல்லிபுரம்
  8. திரு.ச.வேலாயுதம்
  9. திரு.க.காரளப்பிள்ளை
  10. திரு.க.சந்திரபாலன்
  11. திரு.வி.சோமலிங்கம்
  12. திரு.செ.துரைராசா
  13. திரு.க.இராஜேந்திரம்
  14. திரு.யே.அந்தோனிப்பிள்ளை
  15. திரு.ம.பத்மநாதன்
  16. திரு.வி.இராஜகுலசிங்கம்
  17. திரு.ம.மதுரநாயகம்
  18. திரு.லோ.மனுவல்
  19. திரு.ம.இதயசிவதாஸ்
  20. திரு.தி.வரதன்
  21. திரு.ச.புண்ணியமூர்த்தி


பாடசாலை அமைவிடம்[தொகு]

இலங்கையின் வடமாகாணத்தில் வன்னியின் நெற்களஞ்சியமென புகழ்சூடக்கூடிய கிளிநொச்சியின் அழகிய கிராமமான முரசுமோட்டையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அமைந்து காணப்படுகின்றது .

படிமம்:Zxcv.png
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அமைவிடம் 123

வரலாறு[தொகு]

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மஹிந்தோதய ஆய்வுகூடம்
             வளம் கொளிக்கும் வன்னி நிலப்பரப்பில் கண்டாவளைப் பிரதேச செயலக பிரிவிலே மூவரசர் ஆண்ட பெருமையுடையதாக கூறப்படுவது முரசுமோட்டை என்னும் அழகிய கிராமமாகும்.இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்பு யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான இடங்களில் பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஆங்காங்கே பல கல்லூரிகள் அமைக்கப்பட்டன.கிராமப் புறங்களில் இத்தகைய பாடசாலைகள் அமைந்தவை மிக மிகச் சொற்பமே.இக் குறைபாடுகளைத் தீர்ப்பதற்காக இந்துபோட் என்னும் இந்துஅமைப்பு பாடசாலைகளை நிறுவி சகல மாணவர்களும் கல்வி கற்க வாய்ப்பளித்தது.  
             இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி முரசுமோட்டையில் அக்காலத்தில் வாழ்ந்த அமரர் கணபதிப்பிள்ளை பொன்னையா என்பவர் தனது கிராமத்திலும் இவ்வாறான பாடசாலை ஒன்று வேண்டும் என எண்ணி தனது காணியில் முருகானந்தா பாடசாலையை அமைக்க உதவினார்.இதன் காரணமாகவே 1939ம் ஆண்டு தைத்திங்கள் 16ம் நாளிலே இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது முதலில் ஒரு கொட்டகை மாத்திரமே அமைக்கப்பட்டது. இதற்கு அமரர்.மயில்வாகனம் முருகேசு என்பவரே தலைமை ஆசிரியராக இருந்தார்.ஆரம்பகால ஆசிரியரான இவரது பெயரையும் ஆனந்தமாக உறைகின்ற முருகப்பெருமானது பெயரையும் கொண்டு இது முருகானந்தா வித்தியாசாலை என அழைக்கப்பட்டது.இதன் பின்னர் யாழ்ப்பாணத் திருநெல்வேலி  சைவ வித்தியா விருத்திச் சங்கம் இப்பாடசாலையை பொறுப்பெடுத்துக் கொண்டது.அப்போதும் அமரர் மயில்வாகனம் முருகேசு அவர்களே தலைமை ஆசிரியராக இருந்து 7 பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்துக் கொண்டிருந்தார். 
           பின்னர் 1950ம் ஆண்டு 65 பிள்ளைகளைக் கொண்டு இயங்கிய இப் பாடசாலையில் இடப்பற்றாக்குறை காரணமாக இன்னுமொரு கொட்டகை அமைக்கப்பட்டது. அப்போது இரண்டு ஆசிரியர்கள் கல்வி கற்பித்தனர்.மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது.1955இல் இம் மாணவர்களது இடப் பற்றாக்குறையை நீக்குவதற்காக முரசுமோட்டை பழையகமத்தைச் சேர்ந்த திரு.சி.கு.இராசையா அவர்களால் இன்னுமொரு கொட்டகை அமைக்கப்பட்டது.
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி ஆசிரியர்கள்
       இவ்வாறு  வளர்ச்சியடைந்த பாடசாலையில் 1960 களில் க.பொ.த  சாதாரண தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது.சாதாரண தரத்தில் மாணவர்கள் அதிகமானோர் சிறந்த பெறுபேறுகளை பெற்றமையால் உயர்தர வகுப்பை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1963இல் இப்பாடசாலை அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்டது.1965இல் குறித்த கட்டடங்கள் கல்லினால் கட்டப்பட்டு  ஓடு போடப்பட்டது.1968இல் இவ் வித்தியாசாலை முருகானந்தா மகா வித்தியாலயம் எனத் தரமுயர்த்தப்பட்டது. 
              
             தொடர்ந்தும் இப்பாடசாலையின் குடிநீர்ப் பற்றாக்குறையை நீக்குவதற்காக இரண்டு கிணறுகள் வெட்டப்பட்டன.பாடசாலைத் தோட்டம்,நெற்செய்கை என்பவற்றின் வளர்ச்சிக்கு அயராது உழைத்த விவசாய  பாட ஆசிரியை திருமதி.தவமணி சிவபாலச்சந்திரன் அவர்களது சேவையை நாம் இவ்விடத்தில் நினைவு கூறவேண்டும். பாடசாலையின் வருமானத்தின் பெரும் பங்கினை நெற்செய்கையால் பெற்றுக் கொடுத்த பெருமை இவருக்கே உரியது. விவசாயத் தேவைக்கு வழங்கப்பட்ட 5 ஏக்கர் காணியில் 3 ஏக்கர்  விவசாயத்திற்குப் பயன்படுத்தி 2 ஏக்கர்  விளையாட்டு மைதானமாகப் பாவிக்கப்பட்டது.பாடசாலை வளர்ச்சியிலே அதிக அக்கறை கொண்டு அல்லும் பகலும் அயராது உழைத்த விஞ்ஞான  பாட ஆசிரியர் அமரர் கந்தசாமி மகேந்திரன் அவர்களையும் நாம் இங்கு நினைவு கூற வேண்டும். 
        இவ்வாறு பல துறைகளிலும்  பலவாறு முன்னேற்றம் கண்டு வரும் இப் பாடசாலையின் க.பொ.த சாதாரண தரப் பெறுபேறுகள் அதிகரித்து வந்தமையின் காரணத்தால் 1980ல் அதிபராக கடமையாற்றிய திரு.ஏ.சோமலிங்கம் அவர்களும் பாடசாலை அபிவிருத்தி சங்கமும் கொண்ட விடாமுயற்சியால் க.பொ.த உயர்தர கலைப்பிரிவு இதே ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.இக்காலப்பகுதியில் மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் எனக் கருதிய அதிபர் திரு.க.ம.பத்மநாதன் அவர்கள் கொண்ட விடமுயற்சியால் பாடசாலைக்கு முன்புறமாகவுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான பெருந்தெருக்கள் திணைக்களத்தின் காணியை மைதானமாக்குவதற்கு அப்போதைய அரசாங்க அதிபர் திரு.க.பொன்னம்பலம் அவர்களால் அனுமதி வழங்கப்பட்டது.இவரது காலப்பகுதியில் எமது பாடசாலையின் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞானப்பிரிவு ஆரம்பிக்கப்பட்டமை பெருமைக்குரியதொன்றாகும் .
கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவத்தலைவர்கள்
            எமது பாடசாலை வளர்ச்சியின் வரலாற்றிலேயே முக்கியமாக  குறிப்பிடவேண்டிய ஒருவர் அமரர் சேமன்  செல்லையா அவர்கள் .ஒரு நாடு முன்னேற வேண்டுமாயின்,அந்  நாட்டின் கல்வி முன்னேற வேண்டும் என்ற கருத்தை தனது மனதிலே பதித்த பெரியார்  இவர் .முரசுமோட்டை  கிராமத்தின் கல்வி வளர்ச்சியிலே எவர் எடுத்த முயற்சிகள் அளவற்றவை .தனது சொந்த பணத்தினை செலவளித்தது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக தனது பொன்னான நேரத்தையும் செலவளித்து பாடசாலைக்காக வழக்காடி படசாலைக்கு காணியை பெற்றுகொடுத்த பெருமை இவரையே சாரும்.பாடசாலைக்குரிய கட்டடங்களை புனரைமைப்பு செய்த போதும் அதற்கு தேவையான சீமெந்தை தனது சொந்த வாகனத்தில் ஏற்றி தந்ததோடு வித்தியாலய வளவை செப்பனிடும் போதும் மதில் கட்டும் போதும் நிதியுதவி,வாகனஉதவிகள் போன்ற உதவிகள்  புரிந்து பாடசாலையின்    வளர்ச்சிக்கு  ஆக்கமும் ஊக்கமும் தந்த பெருமைக்குரியவராக  இவர் விளங்கியமை  குறிப்பிடவேண்டியதாகும் .
          இவ்வாறு பல்வேறு வகையிலும் தனது வளர்ச்சியில்  மேன்மை கொண்டு சிறப்பாக இயங்கி கொண்டிருந்த இப் பாடசாலையானது நாட்டு சூழ்நிலை காரணமாக 1996 யூலை 26ம் திகதி முரசுமோட்டையிலுருந்து இடம்பெயர்ந்து தருமபுரம் மகா வித்தியாலத்தோடு இணைந்து மாமரநிழலிலும்,பரிலூக்கா ஆலய முன்றலிலும்இயங்கி கொண்டுருந்தது.அப்போதைய அதிபர் திரு.வீ .இராஐகுலசிங்கம் அவர்கள் மாணவர்களது இடர்களை நீக்க வேண்டும் எனக் கருதி கிளி/தருமபுரம் இல 1அ.த.க பாடசாலை வளவில் ஒரு பகுதியில் இப்பாடசாலையும் இயங்க அப் பாடசாலை அதிபர் திருமதி வேல்முருகு அவர்களிடம் அனுமதி பெற்றுச் செயற்படுத்தினார் .இவ்வாறு பல இடப்பெயர்வுகள்,துன்பங்கள்,வேதனைகள் என்பவற்றைச் சந்தித்த வேளையிலும் கூட 15.01.1999 இல் தனது 60வது அகவையினை  பூர்த்தி செய்து வைரவிழாவை கொண்டாடி மலர்  ஒன்றினையும் வெளியிட்டது.
         எமது கல்லூரி வளர்ச்சியின்  படிக்கற்களாக 1980ம் ஆண்டு க.பொ.த உயர்தர கலைப்[பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையும் 1982ம் ஆண்டு க.பொ.த வர்த்தக  பிரிவு ஆரம்பிக்கபபட்டமையும் 1992ம் ஆண்டு க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுக்கான அனுமதி கிடைத்தமையும்  1995ம் ஆண்டு கணித விஞ்ஞான பிரிவு ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கவையாகும் .
கலையரங்கம்
           கல்வி, விளையாட்டு, இணைப்பாடவிதான செயற்பாடுகள் போன்ற பல்வேறு நிலைகளிலும் வெற்றி கண்டு  வளர்ச்சி நிலையை அடைந்துள்ள இப் பாடசாலையானது 2002 ம் ஆண்டிலே க.பொ.த உயர்தர கணித விஞ்ஞானப்பிரிவிலே மூன்று மாணவர்கள் 3A  பெறுபேற்றை  பெற்று  கிளிநொச்சி மாவட்டத்தில் முதல் மூன்று நிலைகளையும் பெரு சாதனை படைத்துள்ளமை பாடசாலையின்  வரலாற்று பெருமையை படம் போட்டு காட்டுகின்றது.
          இவ்வாறு ஒவ்வொரு  வளர்ச்சி பாதையிலும்  வெற்றியை கண்டு களித்து கொண்டிருக்கும் வேளையிலே 2008-2009 ஆண்டு காலப்பகுதியில்  நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வினால் பல்வேறு  இன்னல்களையும் அனுபவித்து தாங்கொணத்தயரங்களால் மாணவர்கள், ஆசிரியர்கள், ஊர்மக்கள் அனைவருமே சிதறுண்டு  இடம்பெயர, எமது பாடசாலையும் இடம்பெயர்ந்து, பின்னர் வவுனியா கல்வியியற் கல்லுரியில் தனது செயற்பாடுகளை  மேற்கொண்டது 
                   பின்னர் மீள்குடியேற்றம் இடம்பெற்றபோது 22.04.2010இல் மீண்டும் தனது சொந்த இடத்திலே கால்பதித்தது .இதே நாளிலேயே அதிபர் திரு தில்லையம்பலம் வரதன்  அவர்கள் 20வது  அதிபராக எமது பாடசாலையை  பொறுப்பெடுத்து கொண்டார்.அக்காலத்திலே 40 மாணவர்களும் 15 ஆசிரியர்களும் மாத்திரமே  பாடசாலையில் இணைந்து  கொண்டனர் .ஆரம்ப பாடசாலையின் கட்டடத்தில் தரம் 1-13 வரையான வகுப்புகளில் குறைந்தளவிலான மாணவர்கள் கல்வி பயின்றனர் .மீள ஆரம்பித்த போது எமது பாடசாலையின் கட்டடங்கள்  இடிந்த நிலையிலும்,அயலில் விட்டு சென்ற தளபாடங்களை திரட்டியே வகுப்புகள் நடைபெற்றன .இப் பிரதேசத்தை சேர்ந்த பெற்றோர்கள்,பழைய மாணவர்கள்.நலன் விரும்பிகள்  ஆகியோரின் உதவியுடன் 2010 யூன் மாதம் பெரியளவிலான சிரமதானப்பணி மேற்கொள்ளப்பட்டது.இதன் பிரகாரம் இடைநிலை  பாடசாலை வளாகத்தில் செயற்பாடுகள் யாவும் ஆரம்பிக்கப்பட்து .இதன் பின்னர் மாணவர் தொகை படிப்படியாக அதிகரித்தது.
வெள்ளிக்கிழமை பிரார்த்தனை இடம்
                                   இக்காலப்பகுதியில் பாடசாலைக்கான ஒழுக்கக்கோவையொன்று  தயாரிக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கதாகும் .2010 ஆகஸ்ட் மாதம் எமது மாவட்டத்தின்  வலய கல்வி பணிப்பாளராக கடைமையாற்றிய உயர் திரு தம்பிராசா குருகுலராஜா அவர்களின் கோரிக்கையால் கல்வி அமைச்சின் அதிகாரிகள்  எமது பாடசாலைக்கு வருகை தந்து "இசுறு " திட்டத்தின் கீழ் உள்வாங்கியமை எமது பாடசாலை வளர்ச்சியின் அடுத்த கட்டம் எனலாம்.இதனை  தொடர்ந்து  1000 இடைநிலைப் பாடசாலைப்  அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளீர்க்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதே .
                           இத் திட்டத்தின் முதற் படியாக ஆரம்ப பிரிவும் இடைநிலைப்பிரிவும் பிரிக்கப்பட்டு தனித்தனியாக 01.01.2011 ல்  இயங்க ஆரம்பித்தது .இத் திட்டத்தின் கீழ் எமது கல்லூரிக்கு மூன்று மாடி கட்டிடம், மகிந்தோதய ஆய்வுகூடம் என்பன கிடைக்கப்பெற்றன.கொய்கா திட்டத்தின் கீழ் கண்டாவளை கோட்டப் பாடசாலைகளுக்கான விடுதிகள் எமது காணியில் அமைக்கப்பட்டு பூர்த்தியாக்கப்பட்டுள்ளன .2013ம் ஆண்டு பாடசாலை வளர்ச்சியில்  முருகானந்த கல்லூரி குறிப்பிடத்தக்க வளர்ச்சியை  எட்டியது எனலாம்.இதற்கு காரணகர்த்தாக திரு.தி.வரதன் அவர் விளங்கியுள்ளார்.இவருக்கு நமது பாடசாலை சார்பாக நாம் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளோம் .
                                                                               2014ம் ஆண்டு 21வது அதிபராக ச.புண்ணியமூர்த்தி  அவர்கள் பொறுப்பெடுத்து கொண்டார் .இன்று புதிய அழகிய தோற்றத்துடன் கிளிநொச்சி வலயத்தின் முன்னணி பாடசாலைகளில் ஒன்றாக எமது கல்லூரி சாதனை படைத்து தலை நிமிர்ந்து நிற்கின்றது. கல்வியை மட்டுமே நோக்கமாக கொண்டியங்கும் பாடசாலைகள் மத்தியில்   கல்வியினையும்விளையாட்டு,சமுகநாட்டம்,ஆளுமைவளர்ச்சி,மாணவர்களை தன்னம்பிக்கை உடையவர்களாயும்,நல்ல பண்புள்ளவர்களாயும் முருகானந்தா கல்லூரி வளர்த்து வந்துள்ளது.இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற் போல் இக் கல்லூரியின் வளர்ச்சிக்காக தம்மையே அர்ப்பணித்து கடமையாற்றி வரும் அறிவு மிக்க அதிபர்கள்,ஆசிரியர்கள் எப்பொழுதும் போற்றப்படவேண்டியவர்கள் .இவ்  வகையில் தற்போது கடமையாற்றிவரும் ச.புண்ணியமூர்த்தி அவர்களையும் தொடர்ச்சியான வளர்ச்சி பாதையில் வழிநடத்தி செல்லுமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன் .முருகானந்தா  கல்லூரி நீடூழி சிறப்புடன் என்றென்றும் நிலைத்திருக்க வாழ்த்துகின்றேன்.
         முருகானந்தா கல்லூரியின் 2013 கலைப்பிரிவு மாணவி என்ற ரீதியில் இக் கட்டுரை வடிப்பதில் நான் பெருமகிழ்ச்சியடைகின்றேன். இத் தொகுப்பானது எமது கல்லூரியின் பெருமைதனையும்,புகழையும் வெளிஉலகிற்க்கு கொண்டு வரும் என நம்புகின்றேன் .
                                       முருகானந்தாவே முழுமதியாய் நீ வாழ்க .


உசாத்துணை[தொகு]

  1. கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி பவளவிழா மலர்
  2. முருகானந்தா கல்லூரி உயர்தர மாணவ முரசு சஞ்சிகை

வெளி இணைப்புகள்[தொகு]