காரவாலி சறுக்குத் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரவாலி சறுக்குத் தவளை
ஆண் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
யூ. காரவாலி
இருசொற் பெயரீடு
யூப்லிக்டிசு காரவாலி
பிரித்தி மற்றும் பலர், 2016[1]

யூப்லிக்டிசு காரவாலி (Euphlyctis karaavali) என்பது காரவாலி சறுக்குத் தவளை என்றும் அறியப்படுவது டைகுரோகுளோசிடே குடும்பத்தினைச் சார்ந்த தவளைச் சிற்றினமாகும். இது கர்நாடகாவில் தென்மேற்கு கடற்கரையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[2]

விளக்கம்[தொகு]

காரவாலி சறுக்குத் தவளை ஆண் தவளை 55 முதல் 69 மி.மீ. நீளமுடையது; பெண் தவளையானது ஆண் தவளையினை விட மிக நீளமானது. பெண் தவளையின் நீளம் 106 மி.மீ. வரை இருக்கும். முதுகு மற்றும் வயிற்றுப் பகுதியிலிருந்து பார்க்கும் போது மூக்கு மழுப்பலாகக் கீழ் தாடைக்கும் அப்பால் நீண்டு காணப்படும். கரண்டி போல நாக்கு காணப்படும். செவிப்பறை தனித்தன்மை வாய்ந்தது. கண்ணின் பின்புறம் இருந்து முன்கை வரை ஒரு மேற்-செவிப்பறை மடிப்பு காணப்படும். தலையானது நீளத்தை விட அகலமாகக் காணப்படும். முதுகுத் தோல் துகள்களுடன் காணப்படும். வயது வந்த ஆண்களில் விரலில் திருமண திண்டு காணப்படும். இரண்டு குரல் பைகள் ஆழ்ந்த ஊதா நிறத்தில் காணப்படும். கால் விரல்களுக்கிடையே விரல் இடைச் சவ்வு காணப்படும். வயிற்றுப் பகுதி பழுப்பு நிறத்துடன், அடிவயிற்றுப் பகுதியில் அடர் வண்ணத்தில் காணப்படும்.[1]

பாலின வேறுபாடு[தொகு]

ஆண் தவளை கலவி திட்டுடன், கீழ் தாடையில் ஒரு இணை குரல் பைகளுடன் காணப்படும். முதிர்ச்சியடைந்த பெண் தவளைகள் ஆண்களை விட அளவில் பெரியவை.[1]

முதிர்ச்சியடைந்த பெண் தவளை

வகைப்பாட்டியல்[தொகு]

வகைப்பாட்டியலில், 12 மற்றும் 16 இரைபோசோம் ஆர்.என்.ஏ. வரிசைகளின் கலவையைப் பயன்படுத்தி யூப்லிக்டிசு கராவாலியின் தொகுதிப் பிறப்பு நிலை கண்டறியப்பட்டது. யூப்லிக்டிசு அலோய்சி மற்றும் யூப்லிக்டிசு ஹெக்ஸாடாக்டைலசு உடன் இதன் சகோதர உறவு வெளிப்படுகிறது.[1]

பரவல்[தொகு]

இந்தச் சிற்றினம் கர்நாடகா மாநிலம், வடகன்னட மாவட்டம், கும்டா வட்டத்தில் உள்ள கடற்கரை கிராமமான சனிகட்டாவில் உள்ள தரிசு விவசாய வயல்களிலிருந்து விவரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்த சிற்றினம் கர்நாடகாவில் உள்ள கோடங்கா, பைரே, சென்டியா, கட்வாடா , தாரிவாடா மற்றும் கொனாஜே ஆகிய ஆறு இடங்களிலிருந்து சேகரிக்கப்பட்டது. சமீபத்தில், இந்த இனம் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பதிவாகியுள்ளது. இந்த இடம் சனிகட்டாவிலிருந்து 810 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[3]

சூழலியல் மற்றும் இயற்கை வரலாறு குறிப்புகள்[தொகு]

காரவாலி சறுக்குத் தவளை இப்பகுதியில் காணப்படும் ஒரு பொதுவான தவளைச் சிற்றினமாகும். மேலும் இது மழைநீரில் மூழ்கிய தரிசு விவசாய வயல்களிலிருந்து அழைப்பதைக் காணலாம். மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சிறிய தொட்டிகள், குளங்கள் மற்றும் மனித வாழ்விடங்களைச் சுற்றியுள்ள குட்டைகள். இதனுடைய ஓசை வெந்தொண்டை மீன்கொத்தியின் அழைப்பினை ஒத்திருக்கும்.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

காரவாலி என்ற சிற்றினப் பெயரானது இந்தத் தவளைக் காணப்படும் கடற்கரைப் பகுதிக்கான கன்னடப் பெயரிலிருந்து பெறப்பட்டது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Priti, Hebbar; Naik, Chandrakanth Rukkappa; Seshadri, Kadaba Shamanna; Singal, Ramit; Vidisha, Madhava Kulkarni; Ravikanth, Gudasalmani; Gururaja, Kotambylu Vasudeva (2016). "A new species of Euphlyctis (Amphibia, Anura, Dicroglossidae) from the West Coastal Plains of India". Asian Herpetological Research 7 (4): 229–241. doi:10.16373/j.cnki.ahr.160020. 
  2. Frost, Darrel R. (2019). "Euphlyctis karaavali Priti, Naik, Seshadri, Singal, Vidisha, Ravikanth, and Gururaja, 2016". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 11 January 2019.
  3. Anoop, V. S.; Kumar, Kiran S.; Sivakumar, K. C.; Reghunathan, Dinesh; Manoj, P.; Deuti, Kaushik; George, Sanil (2017). "The complete mitochondrial genome of Euphlyctis karaavali (Amphibia: Anura) with a note on its range expansion". Conservation Genetics Resources 9 (3): 427–430. doi:10.1007/s12686-017-0703-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரவாலி_சறுக்குத்_தவளை&oldid=3420137" இலிருந்து மீள்விக்கப்பட்டது