எஸ். ஏ. கணபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எஸ். ஏ. கணபதி அல்லது மலேயா கணபதி (1925 - மே 4, 1949) அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்தவர். அன்றைய மலாயாவின் ஆட்சியாளர்களான பிரித்தானியர்களால் கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டபோது எஸ்.எ. கணபதிக்கு 24 வயதுதான் ஆகியிருந்தது. இவ்வளவு குறுகிய காலத்திலேயே மலாயா தொழிற் சங்க இயக்கத்தின் தேசிய தலைவரான இவரின் சாதனை ஜவஹர்லால் நேருவின் கவனத்தை ஈர்த்திருந்தது. கணபதியைத் தூக்கிலிருந்து காப்பாற்றுவதற்காக ஜவஹர்லால் நேரு புதுடில்லியிலும், அவரின் சகாவான வி. கே. கே. கிருஷ்ணமேனன் இலண்டனிலும் முயற்சிகள் மேற்கொண்டனர்.
அவர்களின் முயற்சி வெற்றி பெறவில்லை. எஸ்.எ.கணபதியை தூக்கிலிட்டது பிரிட்டிஷ் மலாயா அரசின் மிக மடத்தன மான செயல் என ஜவர்ஹலால் நேரு சாடினார்.
எஸ்.எ. கணபதி ஊக்கமுடையவராக, செயல்படும் திறன் மிக்கவராக, ஈடுபாடு கொண்டவராக இருந்திருக்க வேண்டும். இப்பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமைத்துவத்திற்கு இட்டுச் சென்றன. இவை அனைத்தும் இவரது 24ஆம் வயதிலேயே தூக்கு மேடைக்கு முன் முற்றுப் பெற்றன.
சிங்கப்பூரில் இயங்கிய அஜாத் ஹிந்த் பள்ளியில் இந்திய தேசிய ராணுவ (INA) போதகராக இருந்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் (MCP) கட்டுப்பாட்டிலோ அல்லது செல்வாக்கிலோ செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் இருந்தார்.தமது 22வது வயதில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவரானார். இச்சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடந்தேறிய ஆசிய நாடுகளுக்கிடையிலான நட்புறவு மாநாட்டில் மலேசியப் பேராளர்களில் ஒருவராக கலந்து கொண்டார்.
1948 ஆம் ஆண்டு மலாயா இனங்கள் விடுதலைப் படையில் இணைந்தார். எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வருக்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் சுதந்திரத்திற்காகவும் நடத்திய மாபெரும் போராட்ட வரலாற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

