பேச்சு:எஸ். ஏ. கணபதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். ஏ. கணபதி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

மலேயா கணபதி பக்கத்தில் இருந்த சில பகுதிகளை இங்கு மாற்றியுள்ளேன். மலேசியாவின் வரலாறு அல்லது மலேசியத் தொழிற்சங்க வரலாறு என்ற கட்டுரைக்கு பொருத்தமானது.--Kanags 23:19, 18 ஆகஸ்ட் 2007 (UTC)

ஜப்பானியர்கள் மலாயாவைப் பிடிப்பதற்கு முன்பு

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி இருபத்தைந்து ஆண்டுகளில் பல தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின. அவை யாவும் தொழிற்சங்க பணிகளைச் செய்தன. ஆனால் அவையாவும் தொழிற்சங்கங்கள் என்றழைக்கப்பட்டவில்லை. அவை வெளிப்படையாகச் செயல்பட முடியவில்லை. இதற்குக் காரணம் மலாயா, சிங்கப்பூர் அரசாங்கங்கள் கொண்டிருந்த “தொழிற்சங்க தத்துவத்தை கருவிலேயே அழித்துவிட வேண்டும்” என்ற கொள்கைதான். இக்கொள்கையின் காரணமாக இத்தொழிலாளர் அமைப்புகள் இரகசியமாகச் செயல்பட தொடங்கின. இவற்றை முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் ‘இரகசிய சங்கங்கள்’ என்று பறைசாற்றினர்.

இருப்பினும், 1889 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் 1895 ஆம் ஆண்டு மலாயாவிலும் சில தொழிலாளர் இயக்கங்கள் மேலாணை அமைப்பு விதிகளின் (Societies Ordinance) கீழ் பதிவு பெற்ற அமைப்புகளாக மாற்றம் கண்டன. இவ்வமைப்புகள் பெரும்பாலும் இயந்திர வல்லுநர்களைப் போன்ற திறன்மிக்க சீனத் தொழிலாளர்களுக்காகவே இயங்கின. இந்திய தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் பின்னரே தோன்றின.

மலாயாவிலிருந்த ஐரோப்பிய முதலாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஆரம்பக்கால வேலை நிறுத்தங்களில் முக்கியமானது, 1912 ஆம் ஆண்டு கோலாலம்பூர் பகுதியிலிருந்த தோட்டத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமாகும்! வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் தாங்கள் கூலிகளால் கட்டளை யிடப்பட்டதைத்தான் அவர்களால் நம்ப முடியவில்லை. பெடரல் சட்ட அவையின் (Federal Legislative Council (FLC)) முதலாளிகளின் பிரதிநிதியாக இருந்த எச்.டி. கிரிபித்ஸ் (H.D. Griffiths) 1912இல் சட்ட அவையில் பேசும்போது, ‘சில இரகசிய சங்கங்களின் உத்தரவின்படி செயல்படும் கூலிகள் இடும் கட்டளைக்கு ஓர் ஐரோப்பியர் விட்டுக் கொடுத்து பணிந்து போக வேண்டும் என்றால், இந்த விவகாரம் கடுமையானதாகக் கருதப்பட வேண்டும்,” என்று கூறினார்.

முதலாளிகளின் கணிப்பு அன்று, ஏன் இன்றும் கூட, என்னவென்றால் தாழ்ந்த நிலையிலிருக்கும் ஒரு தொழிலாளி தன் சுய சிந்தனை அடிப்படையில் தனது முதலாளிக்கு எதிராக வேலை நிறுத்தம் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டான், அல்லது காய்ந்து போன ரப்பர் மரத்தை விறகிற்காக வெட்டியதற்குத் தன்னை 1978இல் அடித்து உதைத்த செராஸ் தோட்ட நிர்வாகியை வழிமறித்து வேதம்பாளின் மகன் ராஜேந்திரன் தன் சுய சிந்தனையின் அடிப்படையில் தாக்க மாட்டான், என்பதாகும்.

1920 ஆம் ஆண்டுகளில் கல்வி, மலாயாவின் சூழ்நிலைகளைப் புரிந்து கொண்ட நிலை, சீன தேசியவாதிகளின் போராட்டத்தின் தாக்கம், சிங்கப்பூருக்கு வந்த கம்யூனிஸ்டுகளுடன் இடதுசாரி களின் ஈடுபாடு, 1925 ஆம் ஆண்டு முதன் முதலில் தோற்றம் கண்ட நன்யாங் (Nanyang) அல்லது தென் கடல்கள் (SOUTH SEAS) பொதுத் தொழிலா ளர்கள் சங்கம் (Nanyang or South Seas General Labour Unions (GLU)) ஆகியவை தொழிலாளர் அமைப்புகளின் எண்ணிக்கை கூடுவதற்கும், வேலை நிறுத்தங்கள் நடந்ததிற்கும் காரணங் களாக அமைந்தன.

1927 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நன்யாங் பொதுத் தொழிலாளர் சங்கம் தனக்கு கீழ் 42 மலாயா தொழிலாளர் அமைப்புகள் இணைந்துள்ளதாகவும், அவற்றில் 5000 அங்கத்தினர்கள் இருப்பதாகவும் கூறியது.

1926 ஆம் ஆண்டிற்கும் 1927 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் சீன பட்டறைத் தொழிலாளர்களும் சிங்கப்பூர் டிரேக்ஷன் கம்பனி (Singapore Traction Company) தொழிலாளர்களும் பல வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டிருந்தனர். 1928 ஆம் ஆண்டு சிங்கப்பூர் காலணி உற்பத்தி தொழிலாளர்களும் இன்னும் வேறுபட்ட தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் ஒரு பெரும் பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். இவை போன்ற நடவடிக்கைகள் மலாயாவிலும் நிகழ்ந்தன. 1930களின் இறுதி இரண்டு ஆண்டுகளில் தோட்ட சிப்பந்திகள், அரசு ஊழியர்கள், அரசு சம்பந்தப்பட்ட பல இலாகாவில் பணிபுரிந்த தொழிலாளர்கள், துறைமுகத் தொழிலாளர்கள், தங்களது தொழிலாளர் அமைப்புகளை நிறுவினர். 1929ஆம் ஆண்டு கிந்தா ஈயச்சுரங்கப் பகுதிகளில் இயங்கிய தொழிலாளர் அமைப்புகள் 11,589 சாதாரணத் தொழிலாளர்களை அங்கத்தினராக கொண்டிருந்தன.

தொழிலாளர்கள், அவர்களின் அமைப்புகள், குறிப்பாக இடச்சாரி சார்புடையவர்கள் மற்றும் நன்யாங் பொதுத் தொழிலாளர் சங்கங்கள், அதிகரித்து வரும் நடவடிக்கைகளை மலாயாவின் காலனித்துவ அரசாங்கம் அச்சத்துடன் கண்காணித்து வந்தது. தேவைப்பட்டால், இவ்வமைப்புகளை “இரகசிய சங்கங்களாக” கருதும்படி காவல் துறையினருக்கு உத்தரவிடப்பட்டது. இக்காலகட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் கட்டுப்பாட்டில் இயங்கிய பொதுத் தொழிலாளர்கள் சங்கங்களின் நடவடிக்கைகள் மிக விரிவான அளவில் இருக்கவில்லை. இருப்பினும் 1928-31 ஆம் ஆண்டுகளில் காவல் துறையினரால் இச்சங்கங்கள் முற்றாக ஒழிக்கப்பட்டன.

இங்கு குறிப்பிடத்தக்க நிகழ்வு ஒன்று என்னவென்றால் பிரிட்டிஷ் தொழிலாளர்கள் 1926 ஆம் ஆண்டு பிரிட்டனில் தொடங்கிய பிரிட்டிஷ் பொது வேலை நிறுத்தம் அது தொடங்கிய பத்தே நாட்களில் தோல்வியில் முடிந்தது. அதற்குக் காரணம் பிரிட்டிஷ் தொழிற்சங்கங்களின் தலையாய அமைப்பான பிரிட்டிஷ் தொழிற்சங்கக் காங்கிரஸ் (British Trades Union Congress (BTUC)) பொது வேலை நிறுத்தத்திற்கான தனது ஆதரவை தொடர மறுத்ததுதான். ஆனால், மலாயாவில் காலனித்துவ அரசு தனது முழு பலத்தையும் பாவித்து தொழிலாளர்களின் போராட்டத்தை ஒழித்துக் கட்டும் வரையில் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்தது.

இந்தியர்கள் இந்நாட்டிற்கு கூலிகளாகக் கொண்டுவரப்பட்டமுறை, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பெருங் காட்டுப்பகுதிகளில் வேலை செய்து வாழ்ந்து வந்த சூழ்நிலை, மேலும் அவர்களுக்கிடையே நிலவிய சமூகப் பிரச்சனைகள், அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு சாதகமாக அமையவில்லை. அதனால் தங்கள் உழைப்பை சுரண்டி, கொடுமைப்படுத்திய காலனித்துவ முதலாளிகளை எதிர்க்க இயலாது போயிற்று. இருப்பினும், அந்த நிலையில் மாற்றம் காணத் தொடங்கியது. இந்தியாவிலிருந்து இங்கு வந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், இதழாளர்கள் போன்ற தொழில் வல்லுநர்கள், மற்றும் உடலுழைப்புத் தொழிலாளர்கள், வியாபாரிகள் மூலம் பரவிய இந்திய தேசியப் போராட்டத்தின் தாக்கம் இங்கு முதுகெலும்பற்று வாழ்ந்து வந்த இந்திய தொழிலாளர்களை எழுந்து நிற்க வைத்து அவர்களின் புரட்சிப் பயணத்தைத் தொடர்வதற்கான சூழ்நிலையை உருவாக்கியது.

கொடுமை நிறைந்த அந்த நெடுந்தூர புரட்சிப் பயணம் 1930களில் தொடங்கியது. தனிநபர்களும் அமைப்புகளும் இந்திய தொழிலாளர்களின் உரிமைகள், இந்தியர்களின் நிலைப்பாடுகள் ஆகியவற்றை உயர்த்துவதற்கான போராட்டங்களை முன் நின்று நடத்துவதற்கு அன்றைய கெடுபிடி சூழ்நிலையில் மிகக் கடுமையாக உழைத்தார்கள். அன்று ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட ரப்பர் தொழில் இந்தியத் தொழிலாளர்கள் எவ்வளவு மோசமாக நடத்தப்படுகிறார்கள், இந்நாட்டில் அவர்களின் பொருளாதார ஈடுபாடு எந்த நிலையில் இருந்தது என்பதைக் கண்கூடாகக் காட்டியது. 1930-1933ம் ஆண்டுகளுக்கிடையில் 180,000க்கும் மேற்பட்ட வேலையில்லாத இந்தியத் தொழிலாளர்கள் இந்தியாவிற்குத் திரும்ப அனுப்பப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் வெறும் “எலும்புமூட்டைகள்”. இந்தப் பொருளாதார வீழ்ச்சி “மலாயாவிற்கு தொழிலாளர்கள் அனுப்பப்படுகின்ற முறை இந்தியர்களுக்குப் பேரழிவானது என்பதை தெளிவாக காட்டியது” என்று கூறப்பட்டது. இந்நாட்டிற்குக் கொண்டு வரப்படுகின்ற தொழிலாளர்கள் எந்த ஒரு நிரந்தர உரிமையும் பெற அனுமதிக்கப்படாத நிலையில் அவர்களை இங்குக் கொண்டுவதற்கு உதவுவதோ அல்லது ஊக்கப்படுத்துவதோ தவறு என்ற கருத்திற்கு ஆதரவு பெருக ஆரம்பித்தது. இறுதியில், 1938ம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுதியான வேண்டுகோளை ஏற்று மலாயாவிற்கு உடலுழைப்புத் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் அனுப்புவதை இந்திய அரசு தடை செய்தது. இதன் நோக்கம் மலாயாவில் வேலை செய்யும் இந்தியத் தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதாகும். தொழிலாளி இல்லையென்றால் முதலாளியும் இல்லை, பேரரசும் இல்லை.

மே- ஜூன் 1937ல் ஜவஹர்லால் நேரு மலாயாவில் சுற்றுப் பிரயாணம் செய்தார். அதனைத் தொடர்ந்து தான் மலாயாவிற்கு உடலுழைப்புத் தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் அனுப்புவதற்கு இந்திய அரசு தடை விதித்தது. செப்டம்பர் 1936இல் தோற்றுவிக்கப்பட்ட மலாயா மத்திய இந்தியர்கள் சங்கத்தின் (Central Indian Association of Malaya (CIAM) கொள்கைகளுக்கு நேரு தனது தீவிர ஆதரவை தெரிவித்தார். இச்சங்கத்தின் அரசியல் நோக்கங்கள் மலாயாவிலுள்ள இந்தியத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தும்படி கேட்டுக் கொண்டார். தொழிலாளர்களுக்கு, தொழிற்சங்கங்கள் தேவை என்று வாதிட்டார். சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் சம்பளத்திற்குச் சமமான சம்பளம் இந்தியத் தொழிலாளர்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றார். அதோடு, இந்தியர்களுக்கு கல்வி கற்பதற்கு வசதியும், கள் குடிப்பதனால் ஏற்படும் அழிவிலிருந்து பாதுகாப்பும் கொடுக்க வேண்டுமென்றார். ஏன் இந்நாட்டில் பிறந்த இந்தியர்களும், இந்நாட்டில் வாழ்கின்ற இந்தியர்களும், இந்நாட்டு மைந்தர்களாகக் கருதப்பட்டு முழு குடியுரிமை வழங்கக் கூடாது? எனவும் வினவினார்.

நேருவின் இந்தப் பயணத்திற்குப் பிறகு, பின் நோக்குதல் என்ற பேச்சிற்கே இடமில்லை என்று மைக்கல் ஸ்டென்சன் கூறுகிறார். குன்ஸ்ரு மற்றும் எ.கே.கோபாலன் போன்ற இந்திய தலைவர்கள் இந்நாட்டிற்கு வந்தார்கள். அவர்களின் வரவு இங்குள்ள சிப்பந்திகள் மற்றும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் மத்தியில் தேசிய உணர்வை வலுப்படுத்தியது. இதன் காரணமாகப் புதிய அமைப்புகள் உருவாகின. இவற்றை வழி நடத்தியவர்கள் ஆங்கிலம் மட்டும் கற்றவர்களாக இல்லாமல் தமிழும் ஆங்கிலமும் கற்ற கீழ்நிலை நிர்வாக மற்றும் தொழில் வல்லுநர்களாக இருந்தார்கள். இவ்வமைப்புகளில் பெரும்பாலான அங்கத்தினர்கள் தொழிலாளர்கள். இவ்வாறு தொழிலாளர்கள் முன்னிலையடையும் சூழ்நிலை உருவாகிக் கொண்டிருந்தது. 1937ம் ஆண்டில் மலாயா மத்திய இந்தியர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் எ.எம்.சூசை இந்திய சமுதாயம் முழுவதும் உயர்ந்த நிலையடைவதற்கான திறவுகோல் இந்தியத் தொழிலாளர்களின் நிலையை உயர்த்துவதுதான் என்று வலியுறுத்தினார்.

வேலை நிறுத்த அலை

இக்காலகட்டத்தில், தொழிலாளர்கள், குறிப்பாகச் சீனத் தொழிலாளர்கள் மற்றும் இந்தியத் தொழிலாளர்கள், தங்களின் கோரிக்கையை வெற்றிகரமாக்குவதற்கு ஒருமுனை படுத்தப்பட்ட செயல்கள் எந்த அளவிற்குத் துணை நிற்கும் என்பதைக் கண்டு அறிந்திருந்தனர்.

1933-1936ஆம் ஆண்டுகளுக்கிடையில் தொழில் துறை முன்னேற்றம் கண்டது. ரப்பரின் விலை 250 விழுக்காட்டு உயர்வு கண்டது. அவ்வாறே ஈயத்தின் விலையும் பெருமளவில் உயர்ந்தது. வாழ்க்கைச் செலவுகளும் உயர்வு கண்டன. இவற்றின் விளைவாகத் தொழிலாளர்களும் சம்பள உயர்வு கோரினர். அவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப் படாதபோது, திறன்மிக்க தொழிலாளர்களான தையல்கார்கள், முடிதிருத்துபவர்கள், சூளைத் தொழிலாளர்கள், நகை செய்பவர்கள், கட்டடத் தொழிலாளர்கள், தச்சர்கள், அச்சடிப்பவர்கள், பிணப்பெட்டி செய்பவர்கள், பொறியியல் தொழிலாளர்கள், சுருட்டு செய்யும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்கள் போன்றோர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நன்கு ஒருமுகப்படுத்தப்பட்ட இவ்வேலை நிறுத்தங்கள் சுமுகமாகத் தீர்க்கப்பட்டன.

இரண்டாவது வேலை நிறுத்த அலை செப்டம்பர் 1936ல் தொடங்கி 1937ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதிவரை நாடு முழுவதும் பரவியிருந்தது. இந்த வேலை நிறுத்தத்தில் திறன் மிக்கத் தொழிலாளர்களும் உடலுழைப்புத் தொழிலாளர்களும் ஈடுபட்டி ருந்தனர். சிங்கப்பூர், ஜோகூர் ஆகிய இடங்களில் இயங்கிய அன்னாசிப்பழத் தொழிற்சாலையிலுள்ள பழவெட்டும் தொழிலாளர்கள் முடுக்கிவிட்ட இவ்வேலை நிறுத்தம், கட்டட தொழிலாளர்கள், சிங்கப்பூர் டிரேக்சன் கம்பெனி பல்லினத் தொழிலாளர்கள் மற்றும் சிங்கப்பூர் மாநகரத் தொழிலாளர்கள் வரை பரவியது. ஆக மொத்தம் 30,000 தொழிலாளர்கள் இவ்வேல நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சிலாங்கூர் மாநிலத்தில் பத்து ஆராங் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்கள், ஹோங் ப்பாட் ஈயச் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். நாட்டின் பல பாகங்களில் சீனப் பட்டறைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கிள்ளானிலுள்ள ரப்பர் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தம் செய்யப்பட்டது. பின்னர், 10,000திற்கும் மேற்பட்ட சீனப் பால்வெட்டுத் தொழிலாளர்கள் தென் சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, வட ஜோகூர் மற்றும் பகாங்கின் சில பகுதிகளில் வேலைநிறுத்தம் செய்தனர். பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களும் கிள்ளான் தொழிற்சாலைத் தொழிலாளர்களும் இறுதியாக நடத்திய அனுதாப வேலைநிறுத்தத்துடன் இந்த இரண்டாவது வேலைநிறுத்த அலை அதன் உச்சக்கட்டத்தை அடைந்தது.

அன்று அமுலிலிருந்த தொழில் முறைக்குத் தொழிலாளர்கள் விடுத்த வரலாறு காணாத சவால் பற்றி குறிப்பிடுகையில் போலீஸ் படையின் தலைமை அதிகாரி (Inspector General of Police) ஒருங்கிணைந்த மலாய் மாநிலங்களின் (The Federated Malay States) சரித்திரம் கண்ட மிகக் கடுமையான ஆபத்து என்று வர்ணித்தார். பத்து ஆராங்கில் நடந்த வேலைநிறுத்தம் அரசாங்கத்திற்கும், மலாயா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் நடந்த பலப்பரிட்சை என்றும், அதற்குத் தங்களிடம் போதுமான சான்றுகள் இருப்பதாகவும் அந்த போலீஸ் அதிகாரி கூறிக்கொண்டார்.

இந்த வேலைநிறுத்த அலைக்கு வித்திட்ட நிகழ்வுகளின் ஆய்வு, வேலைநிறுத்தம் அமுல் படுத்தப்பட்ட முறை மற்றும் வேலைநிறுத்தம் செய்தவர்களின் நோக்கம், போலீஸ் தலைமை அதிகாரியின் கூற்று தவறானவை என நிருபிக்கின்றன. இந்த வேலைநிறுத்த அலையின் ஆரம்பக்கட்டத்தில் சட்டத்திற்குப் புறம்பான மற்றும் பொதுவுடைமை சார்புள்ள அமைப்புகள் இருந்தன. ஆனால் இவ்வேலைநிறுத்தம் விரிவடைந்து மற்ற இடங்களுக்குப் பரவியது, ஒரு சுயேட்சையான செயலாகும். இந்த வேலைநிறுத்தங்கள் ஒரு கட்டுப்பாடான, ஒருங்கிணைக் கப்பட்ட முறையில் அமையவில்லை. வேலை செய்யும் இடத்தில் உருவான சில சம்பவங்கள் வேலைநிறுத்தம் ஏற்படுவதற்கான காரணமாயின. வேலைநிறுத்தம் துவங்குவதற்கு முன்பு கோரிக்கைகள் முறைமையாக எழுப்பப்படவில்லை. மேலும், தொழிலா ளர்கள் சார்பில் பிரதிநிதிகளை நியமிப்பதில் சிரமம் காணப்பட்டது. மலாயா கம்யூனிசக் கட்சியால் ஏற்பாடு செய்யப்படும் வேலைநிறுத்தத்தில் மேற்கூறிய தன்மைகளைக் காணமுடியாது.

வேலைநிறுத்தங்கள் சுரண்டப்படுகின்ற தொழிலாளர்களின் ஆர்ப்பாட்ட மொழி. இந்த வேலைநிறுத்தங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அவர்கள் வேலை செய்யும் தொழில்களின் அன்றைய இலாபகரமான போக்கை அறிந்திருந்ததுடன், தங்களின் கடந்த கால குறைபாடுகளை நிவர்த்தி செய்யவும், கூடுதலான நன்மைகளைப் பெறவும் உறுதி பூண்டிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் ரப்பர் விலை 250 விழுக்காடு உயர்வு கண்டிருந்தது. பத்து ஆராங் நிலக்கரி நிர்வாகம் 1935ல் 12 விழுக்காடு லாபத்தையும் 1936ல் 15 விழுக்காடு லாபத்தையும் அடைந் திருந்தது.

தொழிலாளர்கள் ஒன்றிணைந்து சம்பள உயர்வுக்கான கோரிக்கைகளை எழுப்புவதற்கு இது ஒரு சாதகமான நேரமாக இருந்தது. இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி 20லிருந்து 25 விழுக்காடு வரை சம்பள உயர்வு, எட்டு மணி நேர வேலை, வைத்திய வசதிகள், ஓய்வு ஊதியங்கள், சிறந்த வீட்டு வசதிகள் மற்றும் பல தேவைகள் அடங்கிய கோரிக்கைகளை எழுப்பினார்கள். ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலா ளர்களின் அவதிகளைக் களைவதற்கும் கோரிக்கை விடப்பட்டது.

கடந்த காலங்களில் முதலாளிகளின் அல்லது போலீஸ்காரர்களின் மிரட்டல் ஒன்றே வேலைநிறுத்தம் செய்ய முனையும் தொழிலாளர்கள் தங்கள் திட்டங்களை கைவிடப் போதுமானதாக இருந்தது. ஆனால், இப்போது நிலைமை வேறாக இருந்தது. முதலாளிகளின், போலீஸ்காரர்களின் மிரட்டல்களைச் சந்திக்க தொழிலாளர் கள் தயாராக இருந்தனர். அந்த மனநிலையை பத்து ஆராங் தொழிலா ளர்கள் 1937ஆம் ஆண்டு மார்ச் மாதம் பத்து ஆராங்கில் நடந்த அனுதாப வேலைநிறுத்தத்தில் வெளிக்காட்டினர். அத்தொழிலாளர்கள் நிலக்கரி சுரங்கங்களையும் பத்து ஆராங் நகரையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டு வந்து ஒரு “சோவியத்" முறை ஆட்சியை உருவாக்கினர். இந்நிலை மூன்று வாரங்களுக்கு நீடித்தது. படை பலத்தை உபயோகித்து அரசாங்கம் மீண்டும் பத்து ஆராங்ஙை தன்வசம் எடுத்துக் கொண்டது. பத்து ஆராங் தொழிலாளர் காட்டிய மன உறுதியும் போர்க்குணமும் அவர்களுக்கு கணிசமான வெற்றியை ஈற்றுத் தந்தது.

இக்காலகட்டத்தில் தொழிலாளர்கள் தங்களின் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்வதற்காக தங்களது நடவடிக்கைகளையும் போராட்டங்களையும் தொடர்ந்தனர். சீனாவிலும் இந்தியா விலும் அப்போது நடந்துகொண்டிருந்த தேசிய விடுதலைப் போராட்டங்கள் இங்குள்ள தொழிலாளர்களின் போராட்ட உணர்விற்குப் புத்துயிர் ஊட்டின. அதே நேரத்தில், மலாயா கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர் களின் போராட்டங்களுக்குத் தனது ஆதரவை நல்கியது. ஐரோப்பாவில் தொடங்கிய இரண்டாவது உலகப் போர் தொழிலாளர்களின் போராட்டத் திற்குச் சாதகமாக அமைந்தது.

இந்த உலகப் போரின் காரணமாக இங்குள்ள மக்களின் வாழ்க்கைச் செலவு 16 விழுக்காடாக உயர்ந்தது; மலாயாவின் ரப்பர், டின் போன்ற மூலப் பொருட்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி ஏற்பட்டது. இச்சூழ்நிலையில், மூலப் பொருட்களின் உற்பத்தியைப் பெருக்குவதற்கு அதிகமான தொழிலாளர்கள் தேவைப்பட்டனர். இதுதான் சரியான நேரம். தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை எழுப்பினர். தங்களின் கோரிக்கைகளைக் குறிப்பிட்ட காலத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்படாவிட்டாலும் அல்லது கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளாப்படாவிட்டாலும், தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சலவைத் தொழிலாளர்கள், ரோத்தான் வெட்டுத் தொழிலாளர்கள், ரப்பர் மற்றும் அன்னாசிப்பழத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள், பகாவ் பால் வெட்டுத் தொழிலாளர்கள், சிங்கப்பூர் துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் பலவிதமான தொழில்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கைகளை எழுப்பி வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். 1939ல் மட்டும் 80க்கும் குறையாத வேலை நிறுத்தங்கள் நடந்தன. 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இன்னும் அதிகமான வேலை நிறுத்தங்களில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இம்முறை தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட்டது. ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் போர்த்துறை தொழில்களின் மூலப் பொருட்களின் தேவைகளும் அப்பொருட்களின் அதிக அளவிலான உற்பத்தி பாதிக்கப்படாமல் இருப்பதற்காகவும் தொழிலாளர்களின் கோரிக்கைகள் வழக்கத்திற்கு மாறாக விரைவிலேயே தீர்க்கப்பட்டன.

போர்ப்பாதையில் தமிழ்த் தொழிலாளர்கள்

1939க்கும் 1940க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்நாட்டின் தமிழ்ச் சமுதாயம் முழுமையும் கடும் சினம் கொண்டிருந்தது. தாங்கள் சுரண்டப்படுவதற்காக மட்டுமே இங்கு இருப்பதாக அவர்கள் உணர்ந்து கொண்டனர். இந்த நாட்டை பாதுகாப்பதற்காக இந்தியாவின் பஞ்சாப் இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. மலாயா பிரிட்டீஷ் வல்லரசின் “டாலர் தொழிற்சாலை". அதனை நடத்துவதற்குத்தான் இங்கு தமிழ்த் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். போருக்குத் தேவையான மிக முக்கிய மூலப்பொருட்களை போர்த் தளவாடங்களை உற்பத்தி செய்யும் அமெரிக்க தொழில்களிடம் விற்று அமெரிக்க டாலர்களை சம்பாதிப்பதற்காக இங்குள்ள இந்திய தொழிலாளர்கள் அடிமைகளைப் போல் நடத்தப்பட்டனர். இவ்வாறு அமெரிக்க டாலர் சம்பாதிக்காவிட்டால் பிரிட்டீஷ் வல்லரசு தான் பட்ட கடனை அடைக்க முடியாது. பிரிட்டீஷ் வல்லரசின் கம்பீரத் தோற்றத்தை நிலை நிறுத்த மலாயாவில் இந்தியர்களின் இரத்தம் உறிஞ்சப்பட்டது.

1918க்கும் 1938க்கும் இடையில் இந்நாட்டுத் தொழிலாளர்களின் உழைப்பினால் பெற்ற வருமானத்திலிருந்து 28 மில்லியன் ஸ்டர்லிங் பவுனை மலாயா காலனித்துவ அரசு பிரிட்டீஷ் வல்லரசின் பாதுகாப்புச் செலவிற்காக வழங்கியது. 1939இல் இன்னொரு 5 மில்லியன் ஸ்டர்லிங் பவுனை வழங்கியது. இவையெல்லாம் அன்பளிப்புகள்! யாருடைய உழைப்பை யார் யாருக்கு அன்பளிப்பது? அதுமட்டுமல்ல; மலாயா காலனித்துவ அரசு பிரிட்டீஷ் வல்லரசிற்கு மேலும் ஐந்தரை மில்லியன் ஸ்டர்லிங் பவுனை வட்டியில்லாக் கடனாகக் கொடுக்க ஒப்புக் கொண்டது.

பிரிட்டீஷ் வல்லரசிற்கு வாரி வாரி வழங்கிய மலாயா காலனித்துவ அரசும், காலனித்துவ முதலாளிகளும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு எவ்வித சம்பள உயர்வும் கொடுக்க மறுத்து விட்டனர். அரசியல் உரிமைகளும் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழ்த் தொழிலாளர்கள், குறிப்பாகத் தோட்டத் தொழிலாளர்கள், கொண்டிருந்த கடுங்கோபம் நியாயமானதே.

1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியிலிருந்து தமிழ்த் தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளம் 50 காசு. ஜனவரி 1940திற்குள் சீனத் தொழிலாளர்களின் சம்பளம் 75 காசு. ஜனவரி 1941குள் அவர்களின் சம்பளம் 85 காசாக உயர்ந்தது. சில தோட்டங்களில் சீனத் தொழிலாளர்களின் சம்பளம் $1.20 காசாக ஏற்றம் கண்டது. ஆனால், தமிழ்த் தொழிலாளர்களின் சம்பளம் 50 காசிலேயே நின்றது. இந்த நிலையிலும், கல் நெஞ்சம் படைத்த தோட்ட முதலாளிகள் தமிழ்த் தோட்ட பெண் தொழிலாளர்களிடம் சம்பளமில்லாமல் வேலை வாங்கினார்கள். இச்சுரண்டலுக்குத் தோட்ட முதலாளிகள் இட்ட பெயர் “சந்தோஷ வேலை".

இவ்வளவு சுரண்டல்களுக்கிடையே கடந்த காலத்தில், ரப்பரின் உற்பத்தி பெருமளவில் உயர்வு கண்டது. 1938இல் 244,084 பவுண்டாக இருந்த ரப்பர் உற்பத்தி 1940இல் 331,589 பவுண்டாக உயர்ந்தது. ஆனால் தொழிலாளர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அது 1939ஆம் ஆண்டு எண்ணிக்கையிலேயே இருந்தது.

இவ்வாறு சுரண்டப்பட்ட சூழ்நிலையில், பொதுவாக தமிழர்கள் கோபம் கொள்வதற்கும், ஆர்ப்பாட்டங்கள் செய்வதற்கும் தகுந்த காரணங்கள் உண்டு என உணர்ந்தனர். ஆனால், சில தமிழர்கள், சற்று உயர்ந்த நிலை யிலிருந்தவர்கள், காலனித்துவ அரசிடம் பல்லிளித்துக் கூழைக்கும்பிடு போடுவதன் மூலம் சில சலுகைகளைப் பெற முடியும் என்று எண்ணினார்கள். இவ்வாறான தமிழர்கள் அன்றும் இருந்தார்கள், இன்றும் இருக்கிறார்கள்.

இரண்டாவது உலகப் போரில் பிரிட்டீஷ் வல்லரசை ஆதரிக்க இந்திய தேசிய காங்கரஸ் கட்சி மறுத்து விட்டது. எங்கே இங்குள்ள தமிழ்த் தொழிலாளர்கள் இந்திய தேசிய காங்கரஸ் கட்சியின் கொள்கையைப் பின்பற்றி வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டு போர்த்தளவாட உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையில் மலாயா காலனித்துவ அரசு மூழ்கியிருந்தது. இதனைத் தெரிந்து கொண்ட அந்தச் சில தமிழர்கள், இந்திய தேசிய காங்கரஸ் கட்சியின் கொள்கைக்கு மாறாக தங்களது விசுவாசத்தை மலாயா பிரிட்டீஷ் ஹைகமிஷனரிடம் ஈடு வைத்தனர். அத்துடன் “மனித இனம், மக்களாட்சி மற்றும் உலக சுதந்திரம்" ஆகியவற்றுக்காக ஐரோப்பாவில் நடந்து கொண்டிருக்கும் போரை ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர்.

தங்களின் வாக்குறுதியைச் செயல்படுத்தும் பொருட்டு சிலாங்கூர் இந்தியன் தேசப்பற்று நிதிக் குழு ஒன்றை நிறுவினார்கள். இக்குழுவின் தலைவர் கே.கே. பென்ஜமின். இவர் சிலாங்கூர் இந்திய சங்கத்தின் தலைவருமாவார். இக்குழுவில் அங்கம் பெற்றிருந்த மற்றவர்களுடன் குறிப்பிடத்தக்க இருவர், ஆர்.எச். நாதன் மற்றும் ஓய்.எஸ். மேனன், இடம் பெற்றிருந்தனர். இவ்விருவரும் ஏன் இக்குழுவில் இணைந்தனர் என்பது தெரியவில்லை. ஏனென்றால், இவ்விருவரும் இக்குழுவின் நோக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்ட செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்கள். 1939ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் சிங்கப்பூர் தமிழர்கள் $ 47,486.50 காசும், சிலாங்கூர் தமிழர்கள் $ 1045யும் ஐரோப்பிய போரை வெற்றிகரமாக நடத்துவதற்குத் திரட்டினார்கள்! இக்குழுவினர் தங்களின் ஆதரவாளர்களுக்கு வழங்கிய ஆலோசனை இதுதான்: “உங்களின் உரிமைகளை அடித்துக் கேட்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல."

இந்த இந்திய தேசப்பற்று நிதிக் குழுவின் கருத்திற்கு முற்றிலும் எதிர்மாறான கருத்தினைக் கொண்ட வர்கள் மலாயா மத்திய இந்திய மன்றத்திலும், அதன் மாநில மற்றும் மாவட்ட மன்றங்களிலும் இருந்தனர். இவர்கள் தமிழ்த் தொழிலாளர்கள் படுமோசமாகச் சுரண்டப் படுவதையும், மற்றும் காலனித்துவ முதலாளிகள், காலனித்துவ அரசு தமிழர்களை அவமானப்படுத்துவதையும் கண்டு கொதித்து நின்றனர். இவர்களில் முக்கியமானவர்கள் ஒய்.எஸ். மேனன், ஒய்.கே. மேனன், ஆர்.எச். நாதன், ஆர்.எஸ். நாதன், சி.வி. குப்புசாமி, எஸ். அமலு மற்றும் ஆர்.கே. தங்கையா. இவர்களை கம்யூனிஸ்ட்டுகள், சோஷலிஸ்ட்டுகள், ஆர்ப்பாட்டக் காரர்கள் என்று முத்திரை குத்தினார்கள். உண்மையில், இவர்களது பேச்சுகளை ஆராய்ந்தால் இவர்கள் புரட்சிகர மார்க்சிஸ்டுகள் அல்லர்; மாறாக தீவிர தேசியவாதிகள் என்று தெரியவரும்.

இவர்களின் நோக்கம், சுகாதாரம், கல்வி மற்றும் குடிப்பழக்கத்தை ஒழிப்பது போன்ற அடிப்படை சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதாகும். ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்கினார்கள். கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கம் “நன்னடத்தை, ஒற்றுமை மற்றும் மது அல்லது விஷம்?" என்ற மூன்று கையேடுகளைத் தயாரித்து தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கியது. இவற்றில் “ஒற்றுமை" என்ற கையேட்டை காலனித்துவ அரசு தடை செய்தது. அக் கையேடு காணப்படவில்லை. அக் கையேட்டில் என்ன எழுதப்பட்டிருக்கும் என்பதை ஆர்.எச். நாதன் 1941ஆம் ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்த கூட்டங்களில் பேசியதாகத்தான் இருக்க வேண்டும். அவற்றில் ஒன்று: “இப்போது பெரும்பாலான கூலிகளுக்கு தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான வேறுபாடு என்ன என்பது தெரிந்திருக்கும். ஒத்துழைப்பு நமது தாரக மந்திரம். தோட்ட முதலாளிகளும் அவர்களது கையாட்களும் இந்த ஒத்துழைப்பை உடைப்பதற்கு முனைவார்கள். ஆனால் அவர்களை நமது நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ய அனுமதிக்கக் கூடாது. ஒற்றுமையே பலம். விருப்பத்திற்கேற்ற உடை அணியுங்கள்... விரும்பினால் காந்திக்குல்லா அணிந்து கொள்ளுங்கள். ஆனால் அதை அகற்றக்கூடாது. அவ்வாறே நாம் பொதுச்சாலையில் செல்லும்போது சைக்கிளிலிருந்து இறங்கக்கூடாது.

ஒய்.கே. மேனனும் 1941ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இதே தொனியில் தான் பேசினார்: “நாம் இம்மன்றத்தைத் துவங்குவதற்கு முன்பு நீங்கள் எல்லோரும் முதலாளிகளைக் கடவுளாகவும் நம்மை அடிமைகளாகவும் எண்ணியிருந்தீர்கள். இப்போது உங்களில் குறைந்தது 25 விழுக்காட்டினர் அது அப்படி அல்ல என்பதை உணர்ந்திருக்கிறீர்கள். நாம் தமிழர்கள். நாம் யாருக்கும் அடிமைகள் இல்லை."

இவ்வாறாக ஆர்.எச். நாதன், ஒய்.எஸ். மேனன், ஒய்.கே. மேனன் அவர்தம் கூட்டத்தினர் நான்கு தலைமைத்துவ கூட்டத்தினரை - அதாவது, தோட்டப்பள்ளி ஆசிரியர்கள், கண்காணிகள், படித்த தொழிலாளர்கள், மற்றும் இந்நாட்டிலேயே பிறந்த தொழிலாளர்கள் - கொண்டு மன்றங்களை உருவாக்கினார்கள். அவர்களின் கூட்டு முயற்சியால் இம்மன்றங்களில் சேர்ந்த அங்கத்தினர்களின் எண்ணிக்கை பெருமளவில் கூடியது. இந்த மன்றங்கள் அங்கத்தினர்களைப் பெருமளவில் சேர்ப்பதற்காக மட்டும் உருவாக்கப்பட்டதல்ல. இம்மன்றங்கள் அதன் அங்கத்தினர்களுக்கு தொழிற்சங்க தத்துவத்தின் நோக்கத்தையும் அரசியல் உரிமைகளையும் அவர்களின் உள்ளத்தில் விதைத்தது. இதன் விளைவாக, இம்மன்ற அங்கத்தினர்கள் தங்களின் உரிமைகளுக்காகப் போராட, தேவையானால், உயிரையும் இழக்க, தயாரானார்கள்.

தமிழர்களின் இரத்தம் சிந்தியது

1941 ஆம் ஆண்டு. உலகயுத்தம் மலாயாவின் வட எல்லையிலிருந்து வெகு தொலைவில் இல்லை. மலாயாவின் மூலப் பொருட்களுக்கு ஐரோப்பாவில் ஏகப்பட்ட கிராக்கி. யுத்த தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு மலாயாவின் ரப்பரும், ஈயமும் பெருமளவில் தேவைப்பட்டன. “இங்கு ரப்பர் தொழில் உற்பத்தியைப் பாதிக்கும் எவ்விதமான கீழறுப்புச் செயல்களுக்கும் எதிராகக் கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தோட்ட முதலாளிகளுக்கு அரசாங்கம் உறுதியளித்திருந்தது.

மலாயாவிலுள்ள தமிழர்கள் இந்திய தேசிய காங்கரசின் ஏகாதிபத்திய போர் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குவதில்லை என்ற முடிவினை பின்பற்றக்கூடும் என்று அஞ்சிய பிரிட்டீஷ் காலனித்துவ அலுவலகம் மலாயா ரப்பரின் முக்கியத்துவத்தையும் அதன் உற்பத்தியை பாதிக்கும் எந்த நடவடிக்கையும் தடுத்து நிறுத்த அவ்வலுவலகம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரிட்டீஷ் இந்திய அலுவலகத்திற்குக் கீழ்க்கண்டவாறு தெரிவித்தது:

“இன்றைய சூழ்நிலையில், பாதுகாப்பு நோக்கில் மலாயா ஒரு மிக முக்கியமான இடமாகும், உண்மையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அது ஒரு கிழக்கு சுவராகத் திகழ்கிறது. அதன் கேந்திர முக்கியத்துவத்திற்கு அப்பால், நமது போர் நடவடிக்கைகளுக்குத் தேவையான பொருளாதாரம் மற்றும் அமெரிக்க டாலர் ஈட்டுவதற்கு அடித்தளமாக விளங்கும் ரப்பர் உற்பத்தியை நிலைநிறுத்துவது மிக, மிக முக்கியமாகும். ஆகையால், நமது போருக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்வதில் நேரடியாகச் சம்பந்தப்படாத இடங்களில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் போல் அல்லாமல், அங்கு (மலாயாவில்) உருவாகும் ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்."

எந்த விலை கொடுத்தாவது, ரப்பர் உற்பத்தியை நிலை நிறுத்த வேண்டும். ஏனென்றால், ரப்பருக்கு அவ்வளவு கிராக்கி இருந்தது. இலண்டன் காலனித்துவ அலுவலகம் பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டு வெளியிட்ட கீழ்க்காணும் அறிக்கை அதனை உறுதிப்படுத்தியது:“அமெரிக்கா 430,000 டன் ரப்பரை எடுத்துக் கொள்கிறது..., 75,000 டன் ஈயத்தை வாங்குவதற்கு ஒப்புக் கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களில் நாம் அறிந்து கொண்டது என்னவென்றால் நாம் ஜூன் மாதம் 1942 ஆம் ஆண்டு வரையில் உற்பத்தி செய்யக் கூடிய எல்லா ஈயத்தையும் இன்றைய நிலையில் வாங்கியுள்ள அவர்கள் (அமெரிக்கா) விரும்புகிறார்கள்."

ரப்பருக்கு நல்ல கிராக்கி இருந்தது. நல்ல விலை இருந்தது. ஆனால், போதுமான தொழிலாளர்கள் இல்லை. போர்த் தளவாட தொழில்களின் அதிகரித்துக் கொண்டு போகும் மூலப் பொருட்களின் தேவைகளை இருக்கிற தொழிலாளர்களை அடிமை-வேலை வாங்கி உற்பத்தியை பெருக்கினார்கள். எந்த நபராவது ரப்பர் உற்பத்தியைச் சீர்குலைக்க முயன்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும் என்று காலனித்துவ அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது. ஐரோப்பிய போரில் ஏகாதிபத்திய பிரிட்டனின் வெற்றி அல்லது தோல்வி மலாயாவின் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை சார்ந்து இருந்தது.

தங்களது உழைப்பிற்கு இவ்வளவு கிராக்கியைக் கொண்டிருந்த தொழிலாளர்கள் சிறப்பான சலுகையைப் பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், இந்திய தோட்டத் தொழிலாளர்களுக்கு அப்படி ஏதும் நடக்கவில்லை. 1941 ஆம் ஆண்டில், சீன ஆண் பால்வெட்டு தொழிலாளிக்கு ஒரு நாள் சம்பளம் 85 காசு. சில தோட்டங்கள் $1.20 காசு வரை ஒரு நாள் சம்பளமாகக் கொடுத்தன. ஆனால், இந்திய ஆண் பால் வெட்டுத் தொழிலாளியின் ஒரு நாள் சம்பளம் 50 காசு மட்டுமே.

அமைதியான வேண்டுகோள்களின் (பிச்சை கேட்டதன்) பலனாகக் காலனித்துவ முதலாளிகள் மிக மன எரிச்சலோடு 5 காசு சம்பள உயர்வல்ல, வாழ்க்கை படிச் செலவு பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டிலிருந்து கொடுக்க முன் வந்தனர். இதன் மூலம் ஓர் இந்திய தோட்டத் தொழிலாளியின் தினச் சம்பளம் 55 காசிற்கு உயர்ந்தது.

இந்த 5 காசு வாழ்க்கை படிச்செலவு அளித்ததற்குக் கை மாறாக காலனித்துவ அரசு இந்தியா அல்லது ஜாவாவிலிருந்து தொழிலாளர் களைக் கொண்டுவருதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தோட்ட முதலாளிகள் கேட்டுக் கொண்டனர். (இம்மாதிரியான சம்பவம் இப்போது நடந்து கொண்டிருப்பதை நாம் காண முடிகிறதல்லவா?) மேலும், தோட்டங்களில் தோட்டத் தொழிலாளரின் “முன்னேற்ற” மற்றும் “சீர்திருத்த' மன்றங்களின் நடவடிக்கைகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தோட்ட முதலாளிகள் கேட்டுக் கொண்டனர்.

சுதந்திரம்

ஹைகமிஷனர், சர் செண்டன் தோமஸ், இந்திய அரசை அணுகி ஆவன செய்ய ஒப்புக் கொண்டார். ஆனால், சீனத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் 85 காசு சம்பளத்திற்கும் இந்தியத் தொழிலாளர்களுக்குக் கொடுக்கப்படும் 55 காசு சம்பளத்திற்கும் இடையில் உள்ள பெரும் வித்தியாசத்திற்கு என்ன நியாயம் இருக்கக்கூடும் என்று வியப்பில் ஆழ்ந்தார். ரப்பர் உற்பத்தி, அதன் விலை மற்றும் அதிலிருந்து கிடைக்கும் இலாபம் ஆகிய எல்லாமே அதிகரித்திருக்கும் போது வெறும் 5 காசு சம்பள உயர்வின் அடிப்படையில் இந்திய அரசு தன் கொள்கையை மாற்றிக் கொள்ளும் என்பதில் ஹைகமிஷன ருக்கு நம்பிக்கை இல்லை.

ஆளும் முதலாளித்துவ இனத் தின் ஊழியரான ஹைகமிஷனர் வியப்பில் ஆழ்ந்ததைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை.

இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மிக மோசமாகத் தொடர்ந்து சுரண்டப்படுவதினால் சினமடைந்த ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம் நண்பர்கள் தோட்டத் தொழிலில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை ஆயுதமாகப் பயன்படுத்த முடிவு செய்தனர். கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கத்தைச் சேர்ந்த ஆர்.எச். நாதனும் அவர்தம் நண்பர்களும் கிள்ளான் மாவட்டத்திலுள்ள இந்தியத் தோட்டத் தொழிலாளர்களைப் பிப்ரவரி மாதம் 1941 ஆம் ஆண்டில் வேலை நிறுத்தங்களில் ஈடுபடுத்தினார்கள்.

5 காசு அலவன்ஸ் உயர்வில் திருப்தி அடையாத இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் மார்ச் மாதம் 1941 ஆம் ஆண்டில் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினார்கள். கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த கிளன்மேரி, புக்கிட் ஜெலுத்தோங், டாமான்சாரா, லாவாங் பாடாங், புக்கிட் கமுனிங், தானா பாரு, ஈபோர், கேரித் தீவு, சீபோர்ட், சுங்கை சீடு, சுங்கை நிபோங், மிட்லேண்ட்ஸ், ஹைலேண்ட்ஸ் ஆகிய தோட்டங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தவையாகும். காந்தி தொப்பி அணிந்திருந்த வேலை நிறுத்தக்காரர்கள் வெறும் சம்பள உயர்வு மட்டும் கோரவில்லை. தங்களது பொருளாதார, சமூக மற்றும் அரசியல் முன்னேற்றத் திற்குத் தடையாக விளங்கிய அனைத்தையும் அகற்ற வேண்டும் எனக் கோரினார்கள். தோட்டத் தொழிலாளர்களின் கோரிக் கைகள்:

1. இந்திய, சீன தொழிலாளர்களுக்கு ஒரே மாதிரியான சம்பளம். 2. கொடுமையான தோட்டச்சிப்பந்திகளை அகற்றிவிட்டு அவர்களுக்குப் பதிலாகத் தமிழ்மொழி பேசும் சிப்பந்திகள் அமர்த்தப்பட வேண்டும். 3. குழந்தைகளுக்கு முறையான கல்வி போதிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். 4. ஐரோப்பியர்களும், கருப்பு ஐரோப்பியர்களும் பெண் தொழிலாளர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்துவதை நிறுத்த வேண்டும். 5. முறையான வைத்திய வசதிகள் அளிக்கப்பட வேண்டும். 6. கள்ளுக் கடைகள் மூடப்பட வேண்டும். 7. பேசுவதற்கும், கூடுவதற்கும் சுதந்தரம் அளிக்க வேண்டும். 8. உறவினர்களும், நண்பர்களும் தோட்டங்களுக்கு வருவதில் கட்டுப்பாடு இருக்கக்கூடாது. 9. ஐரோப்பிய நிர்வாகிகள் மற்றும் ஆசிய சிப்பந்திகள் முன் தோட்டத் தொழிலாளர்கள் சைக்களில் ஏறிச் செல்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும். 10. நாள் ஒன்றுக்கு 10லிருந்து 12 மணி வரையான வேலை நேரத்தை அகற்றப்பட வேண்டும். 11. குறைகளை முன் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. 12. தொழிலாளர்கள் தங்களின் நலன்களைக் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களின் குறைகளை முன் வைப்பதற்கும் ஒரு மன்றம் அமைக்க அனுமதிக்க வேண்டும்.

இந்தக் கோரிக்கைகளை, சில மாற்றங்களுடன், இன்றும் தேவையானவைகளாக இருக்கின்றன. அன்று, 1941 ஆம் ஆண்டில், இக்கோரிக்கைகள் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். சில தோட்ட நிர்வாகிகள் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தனர். மற்ற அனைவரும் பேசுவதற்குக் கூட மறுத்துவிட்டனர். சில தோட்டங்களில் குடிநீர் வசதியும், அரிசிக்கான படியும் நிறுத்தப்பட்டன.

ஆர்.எச். நாதனும், அவர்தம் உதவியாளர்களும் கீழறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். மேலும், கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கம் தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. ஆர்.எச். நாதனை நாடு கடத்துவதற்காகத் திட்டமும் இருந்தது, ஆனால் நிறைவேற்றப்படவில்லை.

மலாயா மத்திய இந்திய மன்ற அதிகாரிகள் மற்றும் இந்திய அரசாங்க பிரதிநிதி ஆகியோரின் தலையீட்டினால் ஓர் ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி: தொழிலாளர்களுக்கு இன்னொரு 5 காசு கூடுதல் அலவன்ஸ் வழங்கப்படும், சம்பள உயர்வு குறித்து பேசுவதற்கு ஏப்ரல் மாதத்தில் ஒரு கூட்டம் நடத்தப்படும், இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதற்காக யாரும் தண்டிக்கப்பட மாட்டார்கள். இந்த ஒப்பந்தத்தின் வழி வேலை நிறுத்தம் முடிவிற்கு வந்தது. ஆனால், கொந்தளிப்புத் தொடர்ந்தது.

ஆர்.எச். நாதன் 350 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கக் கூட்டத்தில் கீழ்க்கண்டவாறு பேசியதாக ரகசிய போலீஸ் அறிக்கை கூறியது: “கிள்ளான் தொழிலாளர்கள் அரசாங்கத்திற்கும், முதலாளி களுக்கும் கூட, நல்ல பாடம் படித்துக் கொடுத்தார்கள் என்பதை இப்போது மலாயாவிலுள்ள ஒவ்வொரு தமிழ்த் தொழிலாள ருக்கும் தெரியும். விரைவில் நாம் மூட்டிய தீ மலாயா முழுவதும் பற்றி எரியும். மற்ற மாவட்டங்களிலிருக்கும் தமிழ்த் தொழிலாளர்களுக்கு நாம் ஒரு உதாரணமாக இருக்கிறோம்.'

மீண்டும் ஏப்ரல் மாதத்தில் ஆர்.எச். நாதன் தோட்ட தொழிலாளர்களிடம் பேசுகையில்: “நாட்டில் தொழிலாளர் பற்றாக்குறை இருக்கிறது. இப்போது தொழிலாளர் குடியேற்றம் கிடையாது. இது நெருக்கடியான நேரம்; அதன் காரணமாக உங்கள் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படும். முதன் முறையாக ஐரோப்பியர்கள் உங்களை மனிதர்களாக நினைக்கிறார்கள். இப்போது உங்களுக்கு சரியான சந்தர்ப்பம் இருக்கிறது.'

தோட்டங்களில் மீண்டும் வேலை நிறுத்தங்கள் துவங்கின. பத்து ஆராங் நிலக்கரி சுரங்கத்தில் இந்தியத் தொழிலாளர்கள் தலைமையில் சுரங்கத் தொழிலாளர்கள் சம்பள உயர்வை ஏற்றுக் கொள்ள வைத்தார். இந்தியர்களுக்கிடையிலான பதற்ற நிலை நாடு முழுவதும் பரவக்கூடும் என அரசாங்கம் கருதியது.

5.5.1941 ஆம் ஆண்டில் ஆர்.எச். நாதன் கைது செய்யப்பட்டார். மே மாதம் 7 ஆம் தேதி 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கிள்ளான் தொழிலாளர் துறை முன் கூடி நாதனை விடுவிக்குமாறு கோரினர். இக்காலகட்டத்தில் நாதன் அவர்களின் ஹீரோ (மறவன்) ஆகிவிட்டார். தீவிர ஆதரவாளர்கள் குழு நெகிரி செம்பிலான் வரை சென்று வேலை நிறுத்த அறைகூவலை பரப்பினர். மே மாதம் 10ஆம் தேதிக்குள் சில 6,000 இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்பட்டது. வேலை நிறுத்தம் தொடர்ந்து பரவியது. மே மாத மத்திக்குள் சிலாங்கூர் மாநிலத்தில் கிட்டத் தட்ட எல்லா இந்தியத் தொழிலா ளர்களும், நெகிரி செம்பிலானில் சில தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கியிருந்தனர். மொத்தத்தில் 20,000 இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் 120 தோட்டங்களில் வேலை நிறுத்தம் செய்தனர். அவர்கள் அனைவரும் கிள்ளான் நகரில் ஒன்றுகூடினர். ஒரு கட்டத்தில் கிள்ளான் நகரம் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததைப்போல் தோன்றியது.

இந்தக் “கலவரங்கள்" அரசாங்க அதிகாரத்திற்கு விடப்பட்ட நேரடி சவால் என்று மலாயா காலனித்துவ அரசு வர்ணித்தது. மே மாதம் 16ஆம் தேதி சிலாங்கூர் மாநிலத்தில் அவசர காலம் பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தினர் அழைக்கப்பட்டனர். ஆர்.எச். நாதன் மே மாதம் 19 ஆம் தேதி நாடு கடத்தப்பட்டார்.

வேலை நிறுத்தக்காரர்கள் கலகத்தில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி, இராணுவத்தினருக்கு கலகக்காரர்களை சுடும்படி உத்தரவிடப்பட்டது. இராணுவத்தினர் சுட்டதில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இத்துடன் வேலை நிறுத்தம் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆட்சேபம் மற்றும் வேலை நிறுத்தம் தொடர்ந்த காலத்தில் போலீசார் அவசரகால சட்டத்தின் கீழ் 389 பேர்களைக் கைது செய்தனர். 21 பேர் நாடு கடத்தப்பட்டனர். 49 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 186 பேர் கிள்ளான் மாவட்டத்திலிருந்து அகற்றப்பட்டனர். இன்னொரு 95 பேர் தாமாகவே இந்தியாவிற்குத் திரும்பினர். கிள்ளான் மாவட்ட இந்தியர் சங்கம் தடை செய்யப்பட்டது. மே மாத இறுதிக்குள் தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்பினார்கள்.

ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம் நண்பர்களும் “கீழறுப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள்" மற்றும் “கம்யூனிஸ்ட் அனுதாபிகள்” என்று அழைக்கப்பட்டனர். இது போன்ற வார்த்தைகள் சுரண்டப்படுகிறவர்கள் தங்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக சகஜமாக பயன்படுத்தும் வார்த்தைகளேயாகும்.

மலாயா காலனித்துவ அரசு ஆர்.எச். நாதன் பயன்படுத்திய வார்த்தைகள் அவர் பிரிட்டீஷ் பேரரசிற்கு விசுவாசமற்றவராக இருந்தார் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டியதாகக் குற்றம் சாட்டியது. 1980களில் கூட ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம் நண்பர்களைப் போல சில நடவடிக்கைகளில் ஈடுபட்டோரின் மீது நாட்டிற்கு விசுவாச மற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டது. போலி தொழிற்சங்கங்களை உருவாக்குவதில் பெயர்பெற்ற காலனித்துவ அரசின் தொழிற்சங்க ஆலோசகரான ஜோன் பிரேசியர் கூட இந்நாட்டில் யார் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படுகிறார் என்பதை இப்படி கூறினார்:

“மலாயாவில் எந்த ஒரு தொழிற்சங்க தலைவர் சங்க அங்கத்தினர்களுக்காகத் தீவிரமாகப் போராடுகிறாரோ அவரை அரசாங்கம் கம்யூனிஸ்ட் என்று தவறாமல் முத்திரை குத்தும்."

ஆர்.எச். நாதனும் அவர்தம் நண்பர்களும் இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்காகப் போராடினார்கள். தனக்குச் சொந்தமற்ற ஒரு பேரரசிற்கு நாதன் ஏன் விசுவாசம் காட்ட வேண்டும்?

ஆர்.எச். நாதன் மற்றும் அவர்தம் ஆதரவாளர்களுக்கு எதிராக மலாயா காலனித்துவ அரசு சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் சக்தி வாய்ந்த மலாயா தோட்ட முதலாளிகளின் அமைப்பான யு.பி.எ.எம். (U.P.A.M.) சுமத்திய குற்றச்சாட்டுகளின் மறு ஒலிபரப்பேயாகும். சிலாங்கூரில் நடந்த கலவரங்கள் குறித்து யு.பி.எ.எம். இலண்டன் காலனித்துவ அலுவலகத்திற்கு அனுப்பிய அறிக்கையில் வன்செயல்களைத் தூண்டிவிட்டதற்கான எந்த ஒரு ஆதாரமும் அளிக்கப்படவில்லை.

ஹைகமிஷனர் சர் செண்டன் தோமஸ் தமது அறிக்கையில் கூறியிருந்தது தான் உண்மை. “தனது செல்வாக்கை நடந்துபோன வேலை நிறுத்தத்தின் மூலம் விரிவுபடுத்துவதற்கான சந்தர்ப்பத்தை நழுவவிட்டதற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் உள்ளூர் சீன கம்யூனிஸ்ட் கட்சியைக் (எம்சிபி) கடுமையாகக் கண்டித்தது", என்று ஹைகமிஷனர் தமது அறிக்கையில் கூறியிருக்கிறார். கிள்ளான் மாவட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தங்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபடவில்லை. அப்படியே அவர்கள் ஈடுபட்டிருந்தால், அதனால் என்ன? ஜப்பானியர்களுக்கு எதிராகப் போராட பிரிட்டீஷார் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியைப் பயன்படுத்தவில்லையா?

கடந்துபோன வேலை நிறுத்தங்களும், அதன் விளைவாகச் சிந்திய இரத்தமும் தேவைதானா என்ற கேள்வி தவறாமல் எழுப்பப்பட்டது. மண்டியிட்டு சலுகை பிச்சை கேட்பவர்களுக்கு அது தேவையில்லை. ஆனால், தங்களின் உரிமைகளைப் பெற விரும்புகிறவர்களுக்கு, பல நூற்றாண்டுகளாக மனித உரிமைகளுக்காக நடந்த கடும் போராட்டங்களின் வழி உருவான கோட்பாடு “போராடு, மடி” என்பதாகும். அதன்படி, கிள்ளான் மாவட்டத்தில் சில இந்தியர்கள் தங்களின் தொழிற்சங்க அரசியல் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்தனர். அத் தியாகம் மற்றவர்கள் அவர்களை பின்பற்றுவதற்கு விடுத்த சமிக்கையாகும்.

ஜப்பானியரின் ஆட்சி

மற்ற முதலாளிகளுக்கு எதிராக வேலை நிறுத்தங்களும் வேலை நிறுத்த பயமுறுத்தல்களும் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மே மாதம் 1946ஆம் ஆண்டில் தோட்ட முதலாளிகள் யு.பி.எ.எம். (UPAM) என்னும் அமைப்பை உருவாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து ஈயச் சுரங்க முதலாளிகளும் எம்.எம்.இ.எ. (MMEA) என்னும் அமைப்பைத் தோற்றுவித்தார்கள். இவ்வமைப்புகள் பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகத்துடன் தொடர்புகள் ஏற்படுத்திக் கொண்டன. எனினும், இத்தொடர்புகள் போர்க் காலத்திற்கு முன்பு காலனித்துவ அரசுடன் இருந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கவில்லை.

இதே காலகட்டத்தில் பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகத்தின் இரண்டாவது திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதில் ஜோன் பிரேசியர் தீவிரமாக இறங்கி இங்குள்ள தொழிற்சங்கங்கள் தங்களின் அரசியல் ஈடுபாடுகளிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என வற்புறுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மலாயாவிலும் சிங்கப்பூரிலிலும் இருந்த முதலாளிகள் தங்களின் அரசியல் நலன்களைப் பிரதிநிதிப்பதற்காக “மலாயா மன்றம்” மற்றும் “சிங்கப்பூர் மன்றம்" என்ற இரு அமைப்புகளை சிங்கப்பூர் மற்றும் மலாயா காலனித்துவ அரசுகளின் ஆதரவுடன் நிறுவினார்கள். தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபடக்கூடாது. ஆனால் முதலாளிகளின் அரசியல் ஈடுபாட்டிற்குத் தடையில்லை. இது அறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை மட்டுமல்ல, இன்றும் அதே நிலைதான்.

பிரிட்டீஷ் ரயில்வே தொழிற்சங்கவாதியான ஜோன் பிரேசியரை மலாயாவிற்கு கொணர்ந்தது பிரிட்டீஷ் அரசாங்கம், பிரிட்டீஷ் முதலாளிகள் மற்றும் பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ் (BTUC) ஆகியவற்றுக் கிடையே உருவான சூழ்ச்சியின் ஓர் அங்கமாகும். இந்நாட்டிலுள்ள தொழிற்சங்கங்களை அரசியல் ஈடுபாடற்ற தொழிற்சங்கங்களாக மாற்ற வேண்டும். அவ்வாறு செய்வது சாத்தியப்படாவிட்டால், அரசியல் சார்பற்ற புதிய தொழிற்சங்கங்களை உருவாக்க வேண்டும். இதுதான் ஜோன் பிரேசியரின் பணி.

அரசியல் ஈடுபாடற்ற தொழிற்சங்கங்களை உருவாக்கும் திட்டத்தை ஆரம்பித்தலும், அதனை ஏற்றுக் கொள்வதும் பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரசின் (BTUC) கொள்கை நிலைக்கு எதிர்மாறானதாகும். 1928ஆம் ஆண்டில் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுக்கும் முதலாளிக்குமிடையே நடந்த போராட்டத்தின் விளைவாக நிலக்கரி சுரங்கங்கள் கதவடைப்புச் செய்யப்பட்ட காலத்தில் நோட்டிங்ஙெம் ஸ்யரில் (Nottinghamshire) தோன்றிய சுரங்கத் தொழில் (அரசியலற்ற) தொழிற்சங்கம் (Mining Industrial (Non-Political) Union) என்றழைக்கப்பட்ட அமைப்பை பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரசு 1928ஆம் ஆண்டில் மிகக் கடுமையாகச் சாடியது. “அரசியல் தொழிற்சங்கங்களில் மீது திணிக்கப்பட்டது. அரசியல் கிளர்ச்சிகள் மூலமாகவே அவை பொதுமக்களின் கருத்தைக் கவர முடிந்தது", என்று பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ் ஆணித்தரமாகக் கூறியது. தொழிற்சங்கங்களைப் “பாராளுமன்றம் சமமாக நடத்த வேண்டும்” என்பற்காகத்தான் 1900ஆம் ஆண்டில் தொழிற்சங்கங்கள் தொழிற்கட்சியை உருவாக்கியதாகப் பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ் விளக்கம் தந்தது. ஆகவே, தொழிற்சங்கங்கள் அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதைப் பிரிட்டீஷ் தொழிற்சங்க காங்கரஸ் இவ்வாறு அழுத்தமாகக் கூறியது:

“தொழிற்சங்கங்களுக்கான தெளிவான போக்கு என்னவென்றால் அவை அரசியல் துறவறம் பூண வேண்டுமென்பதல்ல, மாறாக அவை தங்களின் கடந்தகால ஈடுபாட்டை விட இன்னும் அதிகமான செயலாக்கத்துடன் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்."

போர்க்காலத்திற்கு முற்பட்ட மலாயாவில் தொழிற்சங்கங்கள் ஓரளவிற்கு அரசியலில் ஈடுபட்டிருந்தன. முறைப்படி, தொழிற்சங்கக் காங்கரஸ்களுக்கெல்லாம் தாயாகக் கருதப்படும் பிரிட்டீஷ் தொழிற்சங்கக் காங்கரஸின் பிரதிநிதி என்ற முறையில் ஜோன் பிரேசியர் நாட்டிலுள்ள தொழிற்சங்கங்கள் போர்க்காலத்திற்கு முன்பு கொண்டிருந்த அரசியல் ஈடுபாடுகளைவிட இன்னும் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு உதவி இருக்க வேண்டும். அவர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டது தொழிற்சங்கங்களுக்கு உதவுவதற்காக அல்ல. அரசியல் சார்பற்ற தொழிற்சங்கங்களை நிறுவி அதன் மூலம் பிரிட்டீஷ் முதலாளிகள் மற்றும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியம் ஆகியவற்றுக்கு உதவ வேண்டும் என்ற உத்தரவுடன் அவர் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஜோன் பிரேசியர் தனது அரசியல் சார்பற்ற, மக்களாட்சி முறையிலான, உண்மையான, சுதந்தரமான, பொறுப்புள்ள மற்றும் முழுமையான தொழிற்சங்க தத்துவங்களைப் போதிப்பதில் தீவிரமாக இறங்கினார். மார்ச் மாதம், 1947 ஆம் ஆண்டிற்கு முன்பு அவரது போதனைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெற்றி கண்டன. அவரது போதனைகளை ஏற்றுக் கொண்ட சில தொழிற்சங்கங்கள் பொதுச் சேவைத்துறை மற்றும் தனியார்த்துறை ஆகியவற்றைச் சேர்ந்த சிப்பந்திகள் மற்றும் தொழில்களில் ஈடுபட்டிருந்தவர்களைக் கொண்டவையாகும். அச்சங்கங்கள் மிகச் சிறியவை. அவை தங்களின் தேவைகளை முதலாளியிடம் தட்டிக் கேட்கும் நிலையில் இல்லை.

ஆங்கிலம் படித்தவர்களின் தலைமையிலான இச்சிறு சங்கங்கள் தங்களின் குறைகளைக் களைவதற்குக் கருணை காட்டுமாறு எழுத்துமூலம் விண்ணப்பம் செய்யும் முறைப்பாட்டைக் கொண்டிருந்தனர். அவ்வாறு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் தொழிற்சங்கங்களில் ஒன்று தோட்ட சிப்பந்திகள் சங்கமாகும். தோட்டத் தொழிலின் நன்மைக்காக இச்சங்கம் ஆற்றிய சேவையைப் பிரிட்டீஷ் ஹைகமிஷனர் பாராட்டியிருக்கிறார். அவ்வாறான சேவைகளை வழங்கி ஜோன் பிரேசியரிடம் மிகுந்த விசுவாசம் கொண்டிருந்த இன்னொரு தொழிற்சங்கம் நெகிரி செம்பிலான் இந்தியத் தொழிலாளர் சங்கமாகும். 1946 ஆம் ஆண்டின் ஆரம்பக்காலத்தில் உருவாக்கப்பட்ட இச்சங்கத்தை வழிநடத்தியவர் பி.பி.நாராயணன் ஆவார். இச்சங்கம் இந்தியர்களின் நலங்களுக்காக மட்டுமே செயல்பட்டது. இவர் பிற்காலத்தில் மாலாயாவின் காலனித்துவ அரசு, காலனித்துவ முதலாளிகள் மற்றும் லண்டன் காலனித்துவ அலுவலகத்தின் ஒப்புதலுடன் மலேசிய தொழிற்சங்க காங்கரசின் தலைவரானார். அதன் பின்னர் அவர் அனைத்துலகச் சுதந்தர தொழிலாளர் சம்மேளனத்தின் (ICFTU) தலைவராக்கப்பட்டார்.

ஆக மொத்ததில், 1946-1947 ஆம் ஆண்டுகளில், ஜோன் பிரேசியின் தயவில் இயங்கிய இச்சிறு தொழிற்சங்கங்கள் அகில மலாயா பொதுத் தொழிற்சங்க சம்மேளனத்தில் (PMGLU) இணைந்திருந்த தொழிற்சங்கங்கள் விடுத்த சாவால்களைச் சமாளிக்க அரசாங்கத்திற்கும் மற்றும் முதலாளிகளுக்கும் எந்த ஒரு வகையான உதவியையும் நல்க முடியவில்லை.

அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம்

1946ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் கிட்டத்தட்ட மலாயாவின் எல்லா மாநிலங்களிலும் பொதுத் தொழிலாளர் சங்கங்கள் (GLUs) இருந்தன. கைவினைத்திறன் தொழில்கள், வாணிகம், தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில்கள் அனைத்திலும் தொழிற்சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இப்பொதுத் தொழிலாளர் சங்கங்கள் தொழில்கள் அல்லது தொழிற்சாலைகள் என்ற முறையில் அமைக்கப்படாமல் மாவட்ட அடிப்படையில் அமைக்கப்பட்டிருந்தன. இப்பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சிறப்பான நடைமுறைகளைக் கொண்டிருந்ததோடு, சுறுசுறுப்பாகவும் செயல்பட்டன. நல்ல பொருளாதார வசதியையும் கொண்டிருந்தன. சாதாரணத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி செயல்பட வைக்கும் இப்பொதுத் தொழிலாளர் சங்கங்களின் திறனை அவற்றின் எதிரிகளும் பாராட்டினர்.

சாதாரணத் தொழிலாளர்களை, அதிலும் இந்தியத் தொழிலாளர்களை, ஒன்றுதிரட்டும் முயற்சியில் இப்பொதுத் தொழிலாளர் சங்கங்கள் அடைந்த வெற்றி ஜவஹர்லால் நேருவின் அங்கீகாரத்தைப் பெற்றது.

1946ஆம் ஆண்டு மலாயாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜவஹர்லால் நேரு இப்பொதுத் தொழிலாளர் சங்கங்களின் கிளைகள் ஏற்பாடு செய்திருந்த பல பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றினார். இப்பொதுத் தொழிலாளர் சங்கங்கள் இந்தியத் தொழிலாளர்களை ஒன்று திரட்டிய முறைக்கு ஜவஹர்லால் நேரு தமது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொண்டார்.

பிப்ரவரி மாதம் 1946ஆம் ஆண்டு அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனம் (Pan-Malayan Federation of General Labour Unions (PMFGLU)) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. (PMFGLU என்ற இவ்வமைப்பு PMFTU என்ற அமைப்பின் முன்னோடி என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.)இந்த PMFGLU என்ற சம்மேளனம் தொழிலாளர்களுக்குத் தேவையான அனைத்துச் சேவைகளையும் வழங்கியது. நான்கு மொழிகளில் செய்தித்தாள்கள், மொழிப்பெயர்ப்பாளர்கள், விளக்கமளிப்பவர்கள், அமைப்பாளர்கள் மற்றும் திறமையான சம்பளப் பேச்சு வார்த்தை நடத்துபவர்கள் மூலம் தொழிலாளர்களின் நலன்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தது இச்சம்மேளனம். 1950ஆம் ஆண்டில் பிரிட்டீஷ் காலனித்துவ அரசினால் உருவாக்கப்பட்டு இன்றுவரையில் இயங்கிக்கொண்டிருக்கும் மலேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) இன்றுகூட ஒரு மொழியில் ஒரு செய்தித் தாளை வெளியிட முடியாத பரிதாப நிலையில் காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறது!

இந்த PMFGLU என்ற சம்மேளனம் தீவிரவாத போக்கைக் கொண்டிருந்தது. தொழிலாளர்கள் அத்தீவிரவாத போக்கை ஏற்றுக்கொண்டதுடன் அது தேவையான ஒன்றாகக் கருதினார்கள். ஏனென்றால், தங்களின் இலக்கை அடைவதற்குத் தீவிரவாதம் தேவை என்பதைத் தொழிலாளர்கள் உணர்ந்து கொண்டிருந்தனர். உண்மையில், இச்சம்மேளனம் மிகக் கடுமையான நெருக்குதலைத் தராவிட்டால் அரசாங்கமும் முதலாளிகளும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதில்லை.

தொழிலாளர்களின் நலன்களைப் பேணிக் காப்பதில் PMFGLU காட்டிய தீவிரப் போக்கால் கவரப்பட்ட இந்தியத் தொழிலாளர்கள் பெருமளவில் இச்சம்மேளனத்தில் இணைந்ததுடன் அதில் அங்கம் பெற்றிருந்த சீனத் தொழிலாளர்களைவிட மிக அதிகத் தீவிரவாதம் காட்டினர்.

1946ஆம் ஆண்டு மத்திக்குள் எல்லா மாநிலப் பொதுத் தொழிலாளர் சங்கங்களுக்கும் இந்திய உபதலைவர்கள் நியமிக்கப்பட்டனர். ஜனவரி மாதம் 1947ஆம் ஆண்டில் எஸ்.எ.கணபதி அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்க சம்மேளனத்தின் தலைவராக நியமிக்கப் பட்டார். இவ்வாறாக, 1946ஆம் ஆண்டு மத்திக்குள் PMFGLU ஏராளமான செயல்பாடு மிகுந்த அமைப்பாளர்களைக் கொண்டிருந்தது. இந்தத் தீவிர அமைப்பாளர்கள் மலாயா கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கத்துவம் பெற்றிருக்கவில்லை. ஆனால், அவர்கள் அக்கட்சியின் லட்சியத்தில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

மார்ச் மாதம் 1947ஆம் ஆண்டில் PMFGLU என்ற அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனம் அகில மலாயா தொழிற்சங்கங்கள் சம்மேளனம் (Pan-Malayan Federation of Trade Union (PMFTU) ) என்று பெயர் மாற்றம் கண்டது. இப்புதிய சம்மேளனத்தில் 263,598 தொழிலாளர்கள் அல்லது நாட்டின் மொத்த தொழிலாளர்கள் எண்ணிக்கையில் 50 விழுக்காட்டிற்குச் சற்று அதிகமானோர் அங்கத்துவம் பெற்றிருந்தாக அறிவிக்கப்பட்டது. இச்சம்மேளனம் மலாயாவில் இயங்கிய தொழிற்சங்கங்களில் 80லிருந்து 90 விழுக்காட்டிற்கும் இடையிலான தொழிற்சங்கங்களைத் தனது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

வேலை நிறுத்த அலைகள்

வேலைநிறுத்தங்களுக்கான முதல் நடவடிக்கை சிங்கப்பூரில் எடுக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடிக்கு, முக்கியமாக அரிசி பற்றாக்குறைக்கு, நிவாரணம் கோரி வேலை நிறுத்தங்கள் துவங்கப்பட்டன. சிங்கப்பூர் நகராண்மைக் கழகம், ரப்பர் தொழிற்சாலைகள், பொறியியல் தொழில்கள், போக்குவரத்து சேவைகள் போன்றவற்றில் பணிபுரிந்த சில 18,000 தொழிலாளர்கள் தொடங்கிய வேலைநிறுத்தம் அவர்களுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.

அடுத்த மோதல் சிங்கப்பூர் அரசுடனானது. அரசின் கணிப்பின்படி 150,000க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினார்கள். சிங்கப்பூர் அரசு மலாயாவிலிருந்து வந்த சூங் க்வாங் (Soong Kwang) என்ற தீவிரவாத அமைப்பாளரை சட்டவிரோத தடுப்புக்காவலிலிருந்து விடுவிக்க வேண்டும் என்பது வேலைநிறுத்ததில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களின் கோரிக்கை. 1945ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் பிரிட்டீஷ் இராணுவத்தினர் மலாயா வந்தடைந்த சில நாட்களுக்குப் பிறகு புரிந்த குற்றத்திற்காக சூங் சிங்கப்பூரில் ஐரோப்பியர்களை மாத்திரம் கொண்ட நீதிமன்றத்தால் மூன்றாவது தடவையாக நடத்தப்பட்ட வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். இதற்கு முன்பு, ஒரு தலைவரையும் இரண்டு உள்ளூர் உதவியாளர்களையும் கொண்ட சிங்கப்பூர் நீதிமன்றத்தின் முன் இருமுறை அதே குற்றச்சாட்டின் மீது நடந்த வழக்கில் சூங் குற்றவாளி அல்ல என்று தீர்ப்புக் கூறப்பட்டிருந்தது. இதனால் சினமடைந்த தொழிலாளர் கள் சூங்ஙை விடுவிக்கக் கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். சில நாட்களுக்குப் பிறகு சூங் க்வாங் விடுவிக்கப்பட்டார்.

வேலை நிறுத்தப் புயல் மலாயாவிலுள்ள கிட்டத்தட்ட எல்லாத் தொழில்களையும் தாக்கியது. அதிக அரிசி கேட்டு 2000 ரயில்வே தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பினாங்கிலுள்ள உருக்குத் தொழிலாளர்கள், சிரம்பான் மற்றும் கிமாஸைச் சேர்ந்த ரயில்வே தொழிலாளர்கள், கிள்ளான் துறைமுகத் தொழிலாளர்கள், பேராக்கைச் சேர்ந்த ஹைட்ரோ இலக்ரிக்ட் தொழிலாளர்கள், சுருட்டுத் தொழிலாளர்கள், சிகை அலங்கார தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் லோரி ஓட்டுனர்கள் போன்றோர் வேலை நிறுத்தம் செய்தனர். மலேயன் டின் டிரேஜிங் நிறுவனத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஈயம் தோண்டும் கப்பலை முடக்கினார்கள். பொதுப்பணி இலாகா தொழிலாளர்கள் ஆகியோரும் அவ்வாறே செய்தனர். வேலை நிறுத்தம் செய்வதில் கைதேர்ந்தவர்களான நிலக்கரிச்சுரங்கத் தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் மீண்டும் இறங்கினார்கள். முன்பைவிட இப்போது தீவிரவாத போக்கைக் கொண்ட தோட்டத் தொழிலாளர்கள் மேற்குக் கரையோரமிருந்த தோட்டங்களில் வேலை நிறுத்தம் செய்தனர். மேற்கொண்டு 120 ஈயச் சுரங்க முதலாளிகளிடம் தொழிலாளர்களின் கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவ்வாறே புகைவண்டி மற்றும் பொறியியல் தொழிலாளர்களும் செய்தனர். இன்னும் பல வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன.

காலனித்துவ அரசின் போலித்தனம், தொழிலாளர்களின் லட்சியத்திற்கு ஜோன் பிரேசியர் இழைத்த நம்பிக்கைத் துரோகம் மற்றும் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனத்தின் சாதனைத் திறன் ஆகியவற்றை வெளிக்கொணர்ந்தது 2,000 தினச் சம்பள செந்தூல் ரயில்வே தொழிலாளர்களின் வேலைநிறுத்தமாகும்.

PMFGLUவில் இணைவதற்குத் திட்டமிட்டிருந்த செந்தூல் தொழிலாளர்கள் சங்கம் (Sentul Workers Union) மே மாதம் 1946ஆம் ஆண்டு தனது 50 கோரிக்கைகளை ரயில்வே நிர்வாகத்தின் முன் வைத்தது. ரயில்வே நிர்வாகம் இக்கோரிக்கைகள் குறித்து பேசுவதற்குக் கூட மறுத்துவிட்டது. சம்பளக் கமிஷனின் அறிக்கை குறித்து ஆலோசிப்பதற்கு முன்பு, 1939ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தில் மாற்றங்கள் செய்வதை அரசு அனுமதிக்கவில்லை. செந்தூல் தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்திற்கான இறுதி எச்சரிக்கையை விடுத்தது.

இச்சங்கத்தின் தலைவரான எம்.பி. ராஜகோபலை ஜோன் பிரேசியர் மலாயா ஆலோசனை மன்றத்தின் அங்கத்தினராக்கினார். அதற்கு கைமாறாக, சம்பளப் பேச்சு வார்த்தை துவங்குவதற்கு முன்பாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்ற ரயில்வே நிர்வாகத்தின் நிபந்தனையை எம்.பி. ராஜகோபால் ஏற்றுக் கொண்டார். ஜோன் பிரேசியர் மிகத்தீவிரமாக எழுப்பும் நிபந்தனை இது.

ஜோன் பிரேசியர் எம்.பி. ராஜகோபாலைத் தன் நோக்கத்திற்கு பணியவைத்து விட்டார். ஆனால், அச்சங்க உறுப்பினர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கும் எம்.பி. ராஜகோபாலுக்குமிடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். சங்கத்தில் நடந்த கூட்டதில் சங்க உறுப்பினர்கள் எம்.பி. ராஜகோபாலை அரசாங்கத்தின் கைக்கூலி என்று சாடினார்கள். வேலைக்குத் திரும்ப முடியாது என்ற அத்தொழிலாளர்களின் நிலைப்பாடு ரயில்வே நிர்வாகத்தைப் பலவீனப்படுத்தியது. அரசின் பிடி தளர்ந்தது.

இறுதியில், 1939ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட ஒரு நாள் மொத்த சம்பளமான ஐம்பது காசை ஒரு நாள் வேலைக்கு இரண்டு வெள்ளி நாற்பது காசாக உயர்ந்த அரசு முன்வந்தது. அன்றைய விலைவாசிக்கு இந்தச் சம்பள உயர்வு போதுமானதாக இல்லை என்றாலும், சம்பள உயர்வு குறித்து பேச மறுத்துவிட்ட ரயில்வே நிர்வாகம் 280 விழுக்காடு சம்பள உயர்வை வழங்க முன்வந்தது தொழிலாளர்களின் திண்மைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

போர்க் காலத்திற்கு முன்பு அமுலிலிருந்த வேலை மற்றும் சம்பள முறைகளைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதில் அரசாங்கமும் முதலாளிகளும் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதைத் தொழிலாளர்கள் நன்கு உணர்ந்துகொண்டனர். PMFGLU என்ற சம்மேளனம் நெருக்கடி கொடுத்தால்தான் அரசாங்கமும் முதலாளிகளும் தங்களின் கோரிக்கைகளுக்கு இணங்குவார்கள் என்பதையும் தொழிலாளர்கள் அனுபவ மூலமாகத் தெரிந்து கொண்டிருந்தனர். தீவிரவாதத்தின் மூலம்தான் பயன்பெற முடியும் என்பது மீண்டும் மீண்டும் நிருபிக்கப்பட்டிருப்பதால், தீவிரவாதம் தேவை என்று கருதப்பட்டது.

இந்த இணையற்ற வேலை நிறுத்த அலைகளால் சிங்கப்பூருக்கு ஏற்பட்ட இழப்பு 713,000 வேலை-நாள்களாகும் (Man-days) மலாயாவிற்கு 1,173,000 வேலை-நாள்களாகும். தொழிலாளர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவதற்காகவும், வறுமையின் பிடியிலிருந்து பாதுகாக்கப்படுவதற்காகவும் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கங்கள் சம்மேளனம் முன் நின்று தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி 1947ஆம் ஆண்டு வேலைநிறுத்தங்களை நடத்தியது.

மார்ச் மாதத்திற்குள் எஸ்.எ. கணபதியின் தலைமையில் மற்றும் அவரது கடமை உணர்வு கொண்ட தோழர்களின் சேவையால் அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் (PMFTU) அதன் பலத்தின் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது. அதன் போராட்ட ஈடுபாட்டிற்கும் பலத்திற்கும் இன்றுவரை ஈடிணை கிடையாது.

ஏன் குறைந்த சம்பளம்?

முதலாளிகளுக்கு உயர்ந்த அளவு சம்பள செலவுகளை ஏற்றுக்கொள்ள இயலவில்லையா அல்லது விருப்பமில்லையா என்ற கேள்வியைத் தொழிற்சங்கங்கள் சம்மேளனம் எழுப்பியது. அதே கேள்வியை நாட்டிலுள்ள மற்றவர்களும் கேட்டனர். அக்காலகட்டத்தில், தனியார் சொத்தாக 920,000,000 வெள்ளி நாட்டைவிட்டு வெளியேறியிருந்தது. அந்நிலையில் முதலாளிகள் உயர்ந்த அளவு சம்பளம் வழங்கியிருக்க முடியும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால், பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகம் (BMA) நிர்ணயித்த குறைந்தபட்ச சம்பள அளவிற்கான உண்மையான காரணம் என்ன என்பது வெளிப்படுத்தப்படவில்லை.

அமெரிக்க அரசாங்கம் பிரிட்டனுக்குக் கொடுத்து வந்த பொருளாதார (Lend- Lease Aid) உதவியை நிறுத்திவிட்டது. ஆனால், பிரிட்டீஷ் தொழிற்கட்சி அரசாங்கம் தனக்குத் தேவைப்பட்ட 3.5பில்லியன் அமெரிக்க வெள்ளியை அமெரிக்க அரசாங்கத்திடம் கடனாகப் பெறுவதற்குக் கெஞ்சிக் கொண்டிருந்தது. அமெரிக்கர்கள் கடன் கொடுக்கத் தயாராக இருந்தார்கள். அதற்கு அவர்களின் நிபந்தனை இதுதான்: பிரிட்டீஷ் காலனிகளிலிருந்து கிடைக்கும் மூலப் பொருள்களைக் குறைந்த விலையில் அமெரிக்காவிற்குக் கொடுக்க வேண்டும் என்பதாகும்.

இந்த அமெரிக்க நிபந்தனையின் அர்த்தம் அவர்கள் மலாயாவின் ரப்பரையும் ஈயத்தையும் குறைந்த, அதுவும் அவர்கள் நிர்ணயிக்கும், விலையில் வாங்குவார்கள் என்பதே. அமெரிக்காதான் மலாயாவின் ரப்பரையும் ஈயத்தையும் அதிக அளவில் பயன்படுத்திய நாடு. அவர்கள் விதித்த இந்த விலைக் கட்டுப்பாடுதான் மலாயாத் தொழிலாளர்களுக்கு மிகக் குறைவான சம்பள அளவை நிர்ணயம் செய்ததற்கான அடிப்படைக் காரணமாகும். எ.ஜெ.ஸ்டோக்வெல் (A.J.Stockwell) அதனை உறுதிப்படுத்தியுள்ளார்:

“மிக விரைவாக புனர் நிர்மாணம் செய்யப்பட்ட ரப்பர் மற்றும் ஈயத் தொழில்களால் 1947ஆம் ஆண்டிற்குள் அது (மலாயா) பேரரசின் அமெரிக்க வெள்ளி சம்பாதிக்கும் மிகப் பெரிய நாடாயிற்று... தலைமை நாட்டின் (பிரிட்டீஷ்) பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குச் சிறப்பாக உதவியபோது, அதன் சொந்த வாழ்க்கைத் தரம் யுத்தகாலத்திற்கு முன்பு இருந்த தரத்திற்குக் கீழ் விழுந்து விட்டது.” காலனிகளுக்கான பிரிட்டீஷ் அமைச்சர் கிரீச் ஜோன்ஸ் (Greech Jones) ரப்பர் மற்றும் ஈயத்திற்கு விதிக்கப்பட்ட விலைக் கட்டுப்பாட்டை 1948ஆம் ஆண்டில் உறுதிப்படுத்தினார்.

அமெரிக்காவிடம் பிரிட்டன் கடன் படாமல் இருந்திருந்தால், பிரிட்டீஷ் இராணுவ நிர்வாகத்தின் சம்பளக் கொள்கை வேறுபட்டிருக்குமா? இருக்காது. யுத்தகாலத்திற்கு முன்பும், பிறகு கொரியா யுத்தத்தின் போதும் பெருத்த லாபம் ஈட்டிய போதும் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியவாதிகள் பின்பற்றிய தொழிலாளர் சம்பளக் கொள்கைகள் பிரிட்டீஷ் இரணுவ நிர்வாகம் வேறுபட்ட சம்பளக் கொள்கையை கொண்டிருக்காது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. எந்நிலையிலும், குறைந்த சம்பளம், நிறைந்த லாபம்: அதுதான் அவர்களின் தாரக மந்திரம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எஸ்._ஏ._கணபதி&oldid=1562904" இலிருந்து மீள்விக்கப்பட்டது