எம்மா கோல்ட்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம்மா கோல்ட்மன், 1910

எம்மா கோல்ட்மன் (Emma Goldman - ஜூன் 27, 1869 – மே 14, 1940) அவரது அரசியல் செயற்பாடுகள், பேச்சு, எழுத்து என்பவற்றுக்காக அறியப்பட்ட ஒரு அரசின்மைவாதி (anarchist) ஆவார். இவரது ஆதரவாளர்கள் இவரை "சுதந்திரமான சிந்தனை"களைக் கொண்ட ஒரு போராளி என்றும், எதிர்ப்பாளர்கள் இவரை அரசியல் நோக்கங்களுக்காகக் கொலைகளையும் வன்முறைப் புரட்சிகளையும் தூண்டிவிடுபவர் என்றும் கூறினர்.

இவர் அக்காலத்து ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்த லித்துவேனியாவின் கௌனாஸ் (Kaunas) என்னும் இடத்தில், ஒரு மரபுவாத யூதக் குடும்பத்தில் பிறந்தார். இவருக்கும் இவரது தந்தையாருக்கும் இடையேயான தொடர்பு வன்முறை சார்ந்ததாக இருந்தது. கொனிக்ஸ்பர்க்கில் இவர் பள்ளிக்குச் சென்று கல்வி கற்றாலும், குடும்பம் சென் பீட்டர்ஸ்பர்க்குக்கு இடம் பெயர்ந்தபோது இவர் படிப்பைத் தொடரத் தந்தை இடமளிக்கவில்லை. எனினும் எம்மா தீவிரமாக வாசித்து அக்காலத்து அரசியல் நிலைமைகள் பற்றிய தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.

இவருக்குப் பதினாறு வயதாக இருந்தபோது, தனது சகோதரியான ஹெலனாவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற எம்மா அங்கே நியூ யார்க்கில் உள்ள ரோச்செஸ்டரில் குடியேறினார். 1887ல் திருமணமாகிச் சிறிது காலம் வாழ்ந்த அவர் கணவனுடன் மணமுறிவு செய்துவிட்டு நியூ யார்க் நகரத்துக்குச் சென்றார். அரசின்மைவாதத்தால் ஈர்க்கப்பட்ட எம்மா, ஜொஹான் மோஸ்ட் என்பவரின் தூண்டுதலால் மேடைப் பேச்சுக்களில் ஈடுபட்டார். சிறந்த விரிவுரையாளரான இவர் ஆயிரக் கணக்கானவர்களைத் தன்பால் ஈர்த்தார். அரசின்மைவாதியும், எழுத்தளருமான அலெக்சாண்டர் பேர்க்மன், எம்மாவின் காதலரானார். இவருடன் வாழ்க்கை முழுவதும் நெருக்கமான தொடர்புகளைப் பேணி வந்ததுடன் நல்ல தோழராகவும் விளங்கினார். தமது கொள்கைகளுக்கான ஒரு பிரசார உத்தியாக ஹென்றி கிளே ஃபிரிக் என்பவரைக் கொல்வதற்கு இருவரும் திட்டமிட்டனர். இம் முயற்சியிலிருந்து பிரிக் உயிர் தப்பினாலும், பேர்க்மனுக்கு 22 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. தொடர்ந்து வந்த ஆண்டுகளில், கலகங்களைத் தூண்டியமை, குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான பிரசுரங்களை வழங்கியது போன்ற குற்றங்களுக்காகப் பல தடவைகள் சிறை சென்றார். 1906 ஆம் ஆண்டில் கோல்ட்மன் "புவித் தாய்" (Mother Earth) என்னும் அரசின்மைவாதச் சஞ்சிகை ஒன்றை நிறுவினார்.

1917 ஆம் ஆண்டில் கட்டாயப் படைத்துறைச் சேவையில் மக்கள் இணைவதைத் தடுக்க முயன்றமைக்காக கோல்ட்மனுக்கும், பேர்க்மனுக்கும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்தது. இவர்கள் விடுதலை அடைந்ததும், இவர்களும் மேலும் பல நூற்றுக் கணக்கானோரும் கைது செய்யப்பட்டு ரஷ்யாவுக்கு நாடு கடத்தப்பட்டனர். தொடக்கத்தில் போல்ஷ்விக் புரட்சிக்கு ஆதரவாக இருந்த இவர், விரைவிலேயே சோவியத் அரசின் வன்முறைகளையும், சுதந்திரமான குரல்களை நசுக்குவதையும் கண்டித்துக் குரல் கொடுத்தார். 1923 ஆம் ஆண்டில் தனது பட்டறிவுகள் பற்றிய ரஷ்யாவில் எனது Disillusionment (My Disillusionment in Russia) என்னும் நூலை எழுதினார். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழ்ந்தபோது "எனது வாழ்க்கையை வாழ்தல்" (Living My Life) என்னும் தனது தன்வரலாற்று நூலை எழுதினார். ஸ்பெயினில் நடந்த உள்நாட்டுப் போரில் கலந்து கொள்வதற்காக எம்மா அங்கு சென்றார். 1940 மே 14 ஆம் தேதி இவர் டொரான்டோவில் காலமானார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=எம்மா_கோல்ட்மன்&oldid=1668054" இருந்து மீள்விக்கப்பட்டது