அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு (Confederate States of America) அல்லது கூட்டமைப்பு, கூட்டமைப்பு நாடுகள், சிஎஸ்ஏ (CSA) எனப் பலவாறாக அழைக்கப்பட்ட இது, 1861 க்கும் 1865 ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ஐக்கிய அமெரிக்காவின் பதினொரு தென் மாநிலங்கள் கூடி அமைத்த ஒரு கூட்டமைப்பு ஆகும். எனினும் இது பிற நாடுகளாலோ அல்லது அனைத்துலகச் சட்டங்களினாலோ ஏற்றுக்கொள்ளப்படாத காரணத்தால், இது எப்போதும் ஒரு முறையான விடுதலை பெற்ற அரசாக இருந்தது இல்லை.
ஆபிரகாம் லிங்கன் ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அதிபராகப் பதவியேற்கும் முன்னர், நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்த ஏழு மாநிலங்கள் தாங்கள் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து பிரிவதான அறிவிப்பை வெளியிட்டன. உள்நாட்டுப் போர் தொடங்கிய பின்னர் மேலும் நான்கு மாநிலங்கள் இவற்றுடன் இணைந்து கொண்டன. எனினும், ஐக்கிய அமெரிக்கா பிரிவினையைச் சட்டமுறையற்றதாகக் கொண்டதுடன் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவும் மறுத்துவிட்டது. பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வணிக நிறுவனங்கள் கூட்டமைப்புக்குப் போர்க்கப்பல்களையும் பிற தளவாடங்களையும் விற்றன எனினும், எந்த ஐரோப்பிய நாடும் முறையாகக் கூட்டமைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.
தளபதிகளான ராபர்ட் ஈ. லீ, ஜோசேப் ஜான்ஸ்டன் ஆகியோரின் படைகள் 1865 ஏப்ரலில் சரணடைந்தபோது கூட்டமைப்பு குலைந்து விட்டது. இதன் கடைசி அமைச்சரவைக் கூட்டம் மே மாதம் ஜார்ஜியாவில் நடைபெற்றது. ஏறத்தாழ எல்லாக் கூட்டமைப்புப் படைகளுமே ஜூன் மாத இறுதியளவில் சரணடைந்துவிட்டன.
[தொகு] வரலாறு
[தொகு] பிரிவினைக்கான காரணங்கள்
பிரிவினைக்கான உடனடிக் காரணம் 1860 ஆம் ஆண்டுத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெற்ற வெற்றியும், ஆபிரகாம் லிங்கன் அதிபராகத் தெரிவு செய்யபட்டமையும் ஆகும். தென் மாநிலங்களில் அடிமை முறையை ஆதரித்த சக்திகள், அடிமை முறையை எதிர்த்து வந்த குடியரசுக் கட்சி மிகப் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்றதையிட்டுப் பயந்தன. பிரிந்த மாநிலங்களில், தென் கரோலினா[1], மிசிசிப்பி[2], ஜார்ஜியா[3], டெக்சாஸ்[4] ஆகிய மாநிலங்கள், தமது பிரிவினைக்கான காரணங்கள் குறித்து முறையான அறிக்கைகளை வெளியிட்டன. மேற்படி மாநிலங்கள் எல்லாமே அடிமைகளை வைத்திருப்போரின் உரிமைகளுக்கு ஏற்பட்ட பயமுறுத்தல்களைப் பிரிவினைக்கான காரணங்களில் ஒன்றாகக் குறிப்பிட்டிருந்தன. ஜார்ஜியா, வடமாநிலங்களுக்குப் பொருளாதார வளர்ச்சியில் முக்கியத்துவம் கொடுக்கும் மத்திய அரசின் போக்கையும் ஒரு காரணமாகக் குறிப்பிட்டிருந்தது.
எனினும், பின்னர் கூட்டமைப்பின் துணை அதிபரான அலெக்சாண்டர் ஸ்டீபன்ஸ் நிகழ்த்திய முக்கியமான பேச்சு ஒன்று பிரிவினைக்கான அடிப்படையைத் தெளிவாக விளக்குகிறது. கூட்டமைப்பு அரசின் கொள்கைகளை விளக்கிய அவர், தமது அரசு, நீக்ரோக்கள் வெள்ளையருக்குச் சமமானவர்கள் அல்ல என்னும் உண்மையை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகவும், அடிமை முறை - மேனிலை இனத்தவருக்குக் கீழ்ப்படிதல் - இயல்பானது என்றும் அவர் கூறினார். உடல்சார்ந்த, தத்துவரீதியான, நெறிமுறைக்கு உட்பட்ட இந்த மாபெரும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட, உலகின் முதலாவது அரசு தமதே எனவும் அவர் பறைசாற்றினார்[5].
[தொகு] உசாத்துணைக் குறிப்புகள்
- ↑ The text of the Declaration of the Immediate Causes Which Induce and Justify the Secession of South Carolina from the Federal Union.
- ↑ The text of A Declaration of the Immediate Causes which Induce and Justify the Secession of the State of Mississippi from the Federal Union.
- ↑ The text of Georgia's secession declaration.
- ↑ The text of A Declaration of the Causes which Impel the State of Texas to Secede from the Federal Union.
- ↑ McPherson pg. 244.The text of Alexander Stephens' "Cornerstone Speech".

