படர்க்கை
ஒருவர் பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல மூன்றாமவர் பற்றியது படர்க்கை[1]ஆகும். பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும். இவ்வகை வேறுபாடுகளைத் தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது. எனவே இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.[2] பேசுபவரும், பேசுபவர் யாரை விளித்துப் பேசுகிறாரோ அவரும் தவிர்த்த பிறரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் படர்க்கை என்பதனுள் அடங்கும்.
பெயர்ச் சொற்கள்
[தொகு]தமிழில் படர்க்கைச் சொற்கள், எண், பால் என்பனவும் குறித்து வருவதுடன், பதிலிடு பெயர்கள் தவிர்ந்த பிற வகைப் பெயர்ச் சொற்களும் இதில் அடங்குகின்றன. தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் படர்க்கைச் சொற்களுக்கான சில எடுத்துக் காட்டுகளைக் கீழே காணலாம்.
- அவன் - (ஒருமை, ஆண்பால்)
- அவள் - (ஒருமை, பெண்பால்)
- அவர் - (மரியாதைப் பன்மை / பன்மை)
- அவர்கள் - (பன்மை)
- அது - (ஒருமை, ஒன்றன்பால்)
- அவை - (பன்மை, பலவின்பால்)
- கணேசன் - (ஒருமை, ஆண்பால்)
- வள்ளி - (ஒருமை, பெண்பால்)
- மாணவன் - (ஒருமை, ஆண்பால்)
- மாணவி - (ஒருமை, பெண்பால்)
- மாணவர் - (பன்மை, பலர்பால்)
- பசு - (ஒருமை, ஒன்றன்பால்)
- பசுக்கள் - (பன்மை, பலவின்பால்)
- வீடு - (ஒருமை, ஒன்றன்பால்)
வேற்றுமை உருபேற்றம்
[தொகு]வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது சில படர்க்கைச் சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.
வேற்றுமை | உருபு | சொல் | ||||
---|---|---|---|---|---|---|
1 | - | அவன் | அவள் | அவர்கள் | அது | அவை |
2 | ஐ | அவனை | அவளை | அவர்களை | அதை | அவற்றை |
3 | ஆல் | அவனால் | அவளால் | அவர்களால் | அதால் | அவற்றால் |
4 | கு | அவனுக்கு | அவளுக்கு | அவர்களுக்கு | அதற்கு | அவற்றுக்கு |
5 | இன் | அவனின் | அவளின் | அவர்களின் | அதனின் | அவற்றின் |
6 | அது | அவனது | அவளது | அவர்களது | அதனது | அவற்றினது |
வினைச் சொற்கள்
[தொகு]தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் படர்க்கை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- | பால் | இறந்த காலம் | நிகழ் காலம் | எதிர் காலம் |
---|---|---|---|---|
ஒருமை | ஆண்பால் | செய்தான் | செய்கிறான் | செய்வான் |
ஒருமை | பெண்பால் | செய்தாள் | செய்கிறாள் | செய்வாள் |
பன்மை | பலர்பால் | செய்தார்கள் | செய்கிறார்கள் | செய்வார்கள் |
ஒருமை | ஒன்றன்பால் | செய்தது | செய்கின்றது | செய்யும் |
பன்மை | பலவின்பால் | செய்தன | செய்கின்றன | செய்யும் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2015.
- ↑ "இடம் மூன்று வகைப்படும்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2015.