உள்ளடக்கத்துக்குச் செல்

படர்க்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஒருவர் பேசும் பொழுது, எதிரே கேட்பவர் அல்லாமல மூன்றாமவர் பற்றியது படர்க்கை[1]ஆகும். பேசுவோர் தன்நிலை தன்மை எனப்படும், எதிரே இருப்பவர் நிலை முன்னிலை எனப்படும். இவ்வகை வேறுபாடுகளைத் தமிழிலக்கணம் இடம் என்று வகைப்படுத்துகின்றது. எனவே இடமானது தன்மை, முன்னிலை, படர்க்கை எனும் மூன்று வகைப்படும்.[2] பேசுபவரும், பேசுபவர் யாரை விளித்துப் பேசுகிறாரோ அவரும் தவிர்த்த பிறரைக் குறிப்பிடப் பயன்படுத்தும் சொற்கள் படர்க்கை என்பதனுள் அடங்கும்.

பெயர்ச் சொற்கள்[தொகு]

தமிழில் படர்க்கைச் சொற்கள், எண், பால் என்பனவும் குறித்து வருவதுடன், பதிலிடு பெயர்கள் தவிர்ந்த பிற வகைப் பெயர்ச் சொற்களும் இதில் அடங்குகின்றன. தமிழில் உள்ள பெயர்ச் சொற்களில் படர்க்கைச் சொற்களுக்கான சில எடுத்துக் காட்டுகளைக் கீழே காணலாம்.

 • அவன் - (ஒருமை, ஆண்பால்)
 • அவள் - (ஒருமை, பெண்பால்)
 • அவர் - (மரியாதைப் பன்மை / பன்மை)
 • அவர்கள் - (பன்மை)
 • அது - (ஒருமை, ஒன்றன்பால்)
 • அவை - (பன்மை, பலவின்பால்)
 • கணேசன் - (ஒருமை, ஆண்பால்)
 • வள்ளி - (ஒருமை, பெண்பால்)
 • மாணவன் - (ஒருமை, ஆண்பால்)
 • மாணவி - (ஒருமை, பெண்பால்)
 • மாணவர் - (பன்மை, பலர்பால்)
 • பசு - (ஒருமை, ஒன்றன்பால்)
 • பசுக்கள் - (பன்மை, பலவின்பால்)
 • வீடு - (ஒருமை, ஒன்றன்பால்)

வேற்றுமை உருபேற்றம்[தொகு]

வேற்றுமை உருபுகளை ஏற்கும்போது சில படர்க்கைச் சொற்களில் ஏற்படும் மாற்றங்கள் கீழ்வரும் அட்டவணையில் காணப்படுகின்றது.

வேற்றுமை உருபு சொல்
1 - அவன் அவள் அவர்கள் அது அவை
2 அவனை அவளை அவர்களை அதை அவற்றை
3 ஆல் அவனால் அவளால் அவர்களால் அதால் அவற்றால்
4 கு அவனுக்கு அவளுக்கு அவர்களுக்கு அதற்கு அவற்றுக்கு
5 இன் அவனின் அவளின் அவர்களின் அதனின் அவற்றின்
6 அது அவனது அவளது அவர்களது அதனது அவற்றினது

வினைச் சொற்கள்[தொகு]

தமிழில் வினைச் சொற்களும் இடம் குறிக்கும் விகுதிகளை ஏற்று மாற்றம் பெறும். இவற்றுள் படர்க்கை சுட்டும் சொற்கள் இறந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் ஆகியவற்றில் அடையும் மாற்றங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

- பால் இறந்த காலம் நிகழ் காலம் எதிர் காலம்
ஒருமை ஆண்பால் செய்தான் செய்கிறான் செய்வான்
ஒருமை பெண்பால் செய்தாள் செய்கிறாள் செய்வாள்
பன்மை பலர்பால் செய்தார்கள் செய்கிறார்கள் செய்வார்கள்
ஒருமை ஒன்றன்பால் செய்தது செய்கின்றது செய்யும்
பன்மை பலவின்பால் செய்தன செய்கின்றன செய்யும்

மேற்கோள்கள்[தொகு]

 1. "தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2015.
 2. "இடம் மூன்று வகைப்படும்". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 27 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படர்க்கை&oldid=3498941" இலிருந்து மீள்விக்கப்பட்டது