ந. இரவீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ந. இரவீந்திரன்

ந. இரவீந்திரன் (பிறப்பு: 1956) ஈழத்துத் தமிழிலக்கிய அரசியல் ஆய்வாளர். பாரதியின் பன்முகப் பார்வை ஆய்வுத் தொடர் கட்டுரை மூலம் ஆய்வாளராக உருவாகி பல்வேறு ஆய்வுநூல்களை தமிழுலகிற்குத் தருபவர். பாரதியின் மெய்ஞ்ஞானம் இவரது முதலாவது ஆய்வு நூல்.[1][2]

வாழ்க்கைச் சுருக்கம்[தொகு]

காலையடி பண்டத்தரிப்பில் நடேசன் சிவயோகம் இணையரின் மூத்த மகனாக 1956இல் பிறந்தார். ஆரம்பக் கல்வியை பண்ணாகம் வடக்கு அ.மி.த.கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியிலும் பெற்று சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் உயர்தரக் கல்வி பெற்று ஆசிரியர் சேவையில் இணைந்து மலையகத்திலும் பின் சுழிபுரம் ஆறுமுகவித்தியாலயத்திலும் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றினார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரிப் பட்டப்படிப்பு மூலம் கலைமாணிப் பட்டம் பெற்று பின்னர் முதுமாணியாகி கல்வியல் கல்லூரியில் விரிவுரையாளராக கடமையாற்றினார். சென்னைப் பல்கலைக் கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்றார். தனது பணிநிலையில் அறுபதாவது வயதில் ஓய்வு பெற்றுள்ளார். ஓய்வுநிலையில் தமது ஆய்வினைத் தொடர்ந்து வருகிறார்.

கலை இலக்கிய வெளிப்பாடுகள்[தொகு]

காலையடி முருகன் விளையாட்டுக் கழகத்தின் உருவாக்கத்தில் 1968இல் இணைந்து கிராம மட்டதில் விஞ்ஞான கண்காட்சி மூலம் ஆளுமையை வெளிப்படுத்தி பின் 1972இல் தேவகோபால கிருஷ்ண நாடக மன்றத்துடன் இணைந்த காலையடி மறுமலர்ச்சி மன்றத்தின் உருவாக்கத்தின் பங்காளியாய் ஆகி 'நட்பு', 'அலையும் நெஞ்சம்', 'வாழ்வின் வழி' நாடகங்களில் நடித்தவர். அ. சந்திரஹாசன் எழுதிய 'நாளைய உலகம்' நாடகத்தை சிறுவர் நாடகமாக இயக்கியவர். மன்றத்தின் கலை இலக்கிய வட்ட நிகழ்வுகளில் சிறுகதைகளை எழுதி வாசித்தார். மன்ற கூட்டங்களில் விழாக்களில் இவரது பேச்சுகள், விவாதங்கள் கேட்போர் மனதைக் கவர்வனவாக, ஆழமான கருத்துகள் உள்ளடங்கியனவாய் இருந்தன. கையெழுத்து சஞ்சிகையான 'காலைக் கதிர்' இதழில் கட்டுரைகள் எழுதினார். தேசிய கலை இலக்கியப் பேரவையில் இணைந்து தாயகம் இதழின் இணையாசிரியராக சிலகாலம் இருந்து அந்த இதழை பட்டி தொட்டி எங்கும் விநியோகித்து வளர்த்த‍தில் முன்னிற்பவர். 1982இல் தேசிய கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பாரதி நூற்றாண்டு ஆய்வரங்கில் ஆய்வுக் கட்டுரையினைச் சமர்ப்பித்தார்.[3] அதனூடாக பேராசிரியர் க. கைலாசபதியின் வழிப்படுத்தல் மூலம் தனது மாக்சிய ஆய்வு நோக்கை விரிவுபடுத்தி பாரதியின் மெய்ஞ்ஞானம் எனும் நூலை 1986 இல் சென்னையில் வெளிக்கொணர்ந்தார். சென்னையில் இந்நூல் பற்றிய விமர்சன அரங்குகள் இடம்பெற்றன.

அரசியல், சமூக எழுத்தாக்கங்கள்[தொகு]

இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும் நூல் இராவணா என்ற புனைபெயரில் இவர் வெகுஜன‍னுடன் (சி. கா. செந்திவேல்) இணைந்து எழுதிய நூலாகும்.1989இல் முதல்பதிப்பாக வெளிவந்த இந்நூல் 2007இல் சென்னையில் சவுத் விஷன் மூலம் இரண்டாவது பதிப்பாக வெளிவந்தது. [2]

வெளிவந்த நூல்கள்[தொகு]

  • பாரதியின் மெய்ஞ்ஞானம் -1986,1992
  • ஏன்?(சிறுகதைத் தொகுதி) -1991
  • பின்நவீனத்துவமும் அழகியலும் -1997,2002
  • கலாசாரம், எதிர்கலாசாரம், புதிய கலாசாரம் - 1998
  • இந்துத்துவமும் இந்து விடுதலை நெறியும் - 2001
  • இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின் மெய்ஞ்ஞானம் -2003
  • சாதியமும் சமூக மாற்றமும் - 2003,2017
  • இந்துத்துவம் இந்து சமயம் சமூக மாற்றங்கள் -2003
  • மதமும் மார்க்சியமும் -2006
  • திருக்குறளின் கல்விச் சிந்தனை -2009
  • முற்போக்கு இலக்கிய எழுச்சி -2011
  • முற்போக்கு இலக்கியத்துக்கு கைலாசபதியின் பங்களிப்பு -2012
  • சாதி தேசம் பண்பாடு 2014
  • இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் -2014
  • உழைப்பு மொழி கல்வி - 2017
  • சாதிச் சமூக வரலாற்றில் வர்க்கப் போராட்டம் 2016

[4]

  • இலங்கைத் திணை அரசியலில் வர்க்கப் போராட்டம் 2019

பெற்ற விருதுகள்[தொகு]

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கு.சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது 2017. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாரதியின் மெய்ஞ்ஞானம்".
  2. 2.0 2.1 "Caste and its struggles in Sri Lanka".
  3. இந்துத்துவக் காலச் சூழலின் மறுவாசிப்பில் பாரதியின மெய்ஞ்ஞானம் என்னுரை
  4. http://www.namathumalayagam.com/2017/04/blog-post_13.html
  5. "தீக்கதிர்". epaper தீக்கதிர். 18 December 2017. https://theekkathir.in/. 

வெளி இணைப்புகள்[தொகு]

சமூக அறிவியல் கூட்டிணைவு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ந._இரவீந்திரன்&oldid=3153413" இலிருந்து மீள்விக்கப்பட்டது