க. கைலாசபதி
க. கைலாசபதி | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 5, 1933 கோலாலம்பூர், பிரித்தானிய மலாயா (தற்போது மலேசியா) |
இறப்பு | டிசம்பர் 6, 1982 கொழும்பு, மேற்கு மாகாணம், இலங்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
கல்வி | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி,கொழும்பு ரோயல் கல்லூரி,பேராதனைப் பல்கலைக்கழகம்) |
அறியப்படுவது | பேராசிரியர்,ஈழத்து எழுத்தாளர் |
பெற்றோர் | இளையதம்பி கனகசபாபதி |
க.கைலாசபதி (K. Kailasapathy, ஏப்ரல் 5, 1933 - டிசம்பர் 6, 1982) இலங்கையைச் சேர்ந்த பேராசிரியர், தமிழ் இலக்கிய விமர்சகர், திறனாய்வாளர், பத்திரிகை ஆசிரியர் ஆவார்.
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]கைலாசபதி மலேசியாவின் கோலாலம்பூரில் பிறந்தவர்.[1] தந்தை இளையதம்பி கனகசபாபதி மலேசியாவில் பணி புரிந்தவர். தாய் தில்லைநாயகி நாகமுத்து. தொடக்கக் கல்வியை கோலாலம்பூரில் பயின்ற கைலாசபதி இரண்டாம் உலகப் போர் முடிவுற்ற கால கட்டத்தில் (1946-47) இலங்கை வந்தார்.[2]
பள்ளிப் படிப்பை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.[2][3] பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழும் மேலைத் தேய வரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்து இளங்கலை (சிறப்பு) பட்டத்தை 1957 இல் பெற்றார்.[1][4] அக்காலத்தில் பெயர் பெற்ற தமிழ்ப் பேராசிரியர்களான க. கணபதிப்பிள்ளை, வி. செல்வநாயகம், சு. வித்தியானந்தன் ஆகியோருடைய வழிகாட்டல்கள் இவருக்குக் கிடைத்தன.
தொழில்
[தொகு]பட்டம் பெற்றபின் கொழும்பில் புகழ் பெற்ற "லேக் ஹவுஸ்" பத்திரிகை நிறுவனத்தில் இணைந்து பத்திரிகைத் தொழிலில் ஈடுபட்டார். இந் நிறுவனம் வெளியிட்டுவந்த தமிழ் நாளேடான தினகரனிலேயே இவர் பணிபுரிந்தார். இவரது திறமை இவருக்கு அப்பத்திரிகையின் ஆசிரியர் பதவியைப் பெற்றுக் கொடுத்தது.
பின்னர் அங்கிருந்து விலகிய அவர் கல்வித் துறையில் புகுந்தார். கலாநிதிப் (முனைவர்) பட்டம் பெறுவதற்காக பர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து, "Tamil Heroic Poetry" என்னும் தலைப்பில் ஆய்வு செய்து பட்டம் பெற்றார். 1974 ஆம் ஆண்டில் இலங்கைப் பல்கலைக் கழகத்தின் யாழ்ப்பாண வளாகம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளை இலங்கை பல்கலைக் கழகத்தின் வித்தியலங்கார வளாகத்தில் தமிழ் மற்றும் இந்து சமயப் பீடத்துக்குத் தலைவராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அதன் முதல் தலைவராக ஜூலை 19 1974ல் நியமனம் பெற்றார். ஜூலை 31, 1977 வரை இப்பதவியில் இருந்து திறம்படப் பணியாற்றினார்.
இலக்கியப் பணி
[தொகு]ஈழத்துத் தமிழ் இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக் கருதப்படுகின்றது. இடதுசாரிச் சிந்தனைப் போக்குக் கொண்ட இவர், அக்காலத்தில் ஈழத்து இலக்கிய உலகில் பெரும் தாக்கம் கொண்டிருந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார்.
இவரது ஆக்கங்கள்
[தொகு]இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் கலாநிதிப் பட்டத்துக்காகச் செய்த ஆய்வும் நூலாக வெளியிடப்பட்டது. இவரது ஆக்கங்கள், தமிழ் இலக்கியத் துறையை மட்டுமன்றி, சமயம், பண்பாடு, சமுதாயம், அரசியல் போன்ற பல துறைகளையும் சார்ந்திருந்தது. 1982ல், "ஈழத்துத் தமிழ்ச் சமுதாயத்தின் பண்பாட்டு மற்றும் இன உணர்வுகள்" என்னும் தலைப்பில் இவராற்றிய, புனிதவதி திருச்செல்வம் நினைவுப் பேருரை, ஈழத்தமிழர்களுக்கான ஒரு முக்கிய பங்களிப்பாகும். "அடியும் முடியும்", "பண்டைத் தமிழர் வாழ்வும் வளமும்", "தமிழ் நாவல் இலக்கியம்", "இலக்கியச் சிந்தனைகள்" என்பனவும் அவரியற்றிய நூல்களிற் சில.
மிக இளம் வயதிலேயே மாணவர்கள், அறிஞர்கள் மத்தியில் மட்டுமன்றிப் பொதுமக்கள் மத்தியிலும் புகழ் பெற்ற இவர், 49வது வயதில் 1982 டிசம்பர் மாதம் ஆறாம் திகதி காலமானார்.
இவரது நூல்கள்
[தொகு]- பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,1966
- தமிழ் நாவல் இலக்கியம்,1968
- Tamil Heroic Poetry,Oxford,1968
- ஒப்பியல் இலக்கியம்,1969
- அடியும் முடியும்,1970
- ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)1971
- இலக்கியமும் திறனாய்வும்,1976
- கவிதை நயம்(இ.முருகையனுடன்),1976
- சமூகவியலும் இலக்கியமும்,1979
- மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),1979
- The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum
- நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,1980
- திறனாய்வுப் பிரச்சினைகள்,1980
- பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)
- இலக்கியச் சிந்தனைகள்,1983
- பாரதி ஆய்வுகள்,1984
- The Relation of Tamil and Western Literatures
- ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,1986
- On Art and Literature,1986
- இரு மகாகவிகள்,1987(ஆ.ப)
- On Bharathi,1987
- சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)
- Tamil (mimeo)(co-author A,Shanmugadas)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Arumugam, S. (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. pp. 65–66.
- ↑ 2.0 2.1 Sriskanthadas, Bhagavdas (6 சனவரி 2008). "Kailasapathy and his interest in theatre". The Nation (Sri Lanka) இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304044652/http://www.nation.lk/2008/01/06/events.htm.
- ↑ Perinbanayagam, R.S.; Kantha, Sachi Sri. "Prof. K Kailasapathy Evaluated with his peers". Ilankai Tamil Sangam.
- ↑ Theva Rajan, A. (சனவரி 1983). "Kailas - The Writer, Editor, Literary Midwife and Don". Tamil Times II (3): 8–9. http://noolaham.net/project/32/3112/3112.pdf.
வெளி இணைப்புக்கள்
[தொகு]- தமிழ் ஆய்வியலில் கலாநிதி கைலாசபதி - நா. சுப்பிரமணியன் பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் - நூலகம் திட்டம்
- இலங்கைப் பேராசிரியர் க.கைலாசபதி(05.04.1933-06.12.1982) - முனைவர் மு. இளங்கோவன்
- தமிழ் விமர்சகர்கள்
- ஈழத்து எழுத்தாளர்கள்
- 1933 பிறப்புகள்
- 1982 இறப்புகள்
- இலங்கைத் திறனாய்வாளர்கள்
- யாழ்ப்பாணத்து நபர்கள்
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள்
- யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்கள்
- கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர்கள்
- இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்
- இலங்கைப் பத்திரிகையாளர்
- இலங்கையின் கல்விமான்கள்
- இலங்கைத் தமிழர்
- இலங்கை ஊடகவியலாளர்கள்