தஞ்சை அரண்மனை
தஞ்சாவூர் அரண்மனை தர்பார் மண்டபம் | |
இடம் | தஞ்சாவூர், இந்தியா |
---|---|
வடிவமைப்பாளர் | சேவப்ப நாயக்கர் |
துவங்கிய நாள் | பொ.ஊ. 1532 |
110 ஏக்கர்கள் |
தஞ்சை அரண்மனை (Thanjavur Palace) என்பது தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரில் உள்ள ஒரு அரண்மனை ஆகும். இந்த அரண்மனை தஞ்சாவூர் நாயக்கர்களால் கட்டப்பட்டது. பின்னர் பொ.ஊ. 1674 இல் இருந்து 1855 வரை தஞ்சாவூர் மராத்திய அரசின் கைவசம் இருந்தது.[1][2] இந்த அரண்மனை வளாகத்தில்தான் சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சைக் கலைக்கூடம், தஞ்சை தீயணைப்பு நிலையம், தஞ்சை மேற்கு காவல் நிலையம், அரசுப் பொறியியல் கல்லூரி, அரசர் மேல்நிலைப் பள்ளி, தொல்லியல்துறை அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன.
வரலாறு
[தொகு]இந்த அரண்மனையானது தஞ்சாவூர் நாயக்கர் மன்னர்களான சேவப்ப நாயக்கரால் கட்டத் தொடங்கப்பட்டு, அச்சுதப்ப நாயக்கர், இரகுநாத நாயக்கரால் தொடரப்பட்டு, விஜயராகவ நாயக்கரால் முடிக்கப்பட்டது ஆகும். தஞ்சாவூர் மராத்திய அரசு மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரித்தானிய, பிரான்ஸ், இராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. இந்த அரண்மனை வளாகமானது 110 பரப்பளவுக்கு விரிந்துள்ளது.[3] சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
அரண்மனையின் பகுதிகள்
[தொகு]அரண்மனையின் வளாகம் நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன.
மணிமண்டபம்
[தொகு]மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில், இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன. ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தர்பார் மண்டபம்
[தொகு]தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.
ஆயுத சேமிப்பு மாளிகை
[தொகு]இது கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.
நீதிமன்ற கட்டடம்
[தொகு]இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது. இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும், தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன.[4]
இதனையும் காண்க
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/
- ↑ Gopal, Madan (1990). K.S. Gautam (ed.). India through the ages. Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India. p. 185.
- ↑ அருள்செல்வன் (செப்டம்பர் 30 2017). "கட்டிடக் களஞ்சியம்". தி இந்து, சொந்தவீடு இணைப்பு.
- ↑ தினமணிக் கதிர் 26.12.1993, இடியும் அரண்மனைகள், அழியும் கலாச்சாரம் கட்டுரை