உள்ளடக்கத்துக்குச் செல்

கு. சின்னப்ப பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கு. சின்னப்ப பாரதி
பிறப்புசின்னப்பன்
(1935-05-02)2 மே 1935
பொன்னேரிப்பட்டி, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு
இறப்புசூன் 13, 2022(2022-06-13) (அகவை 87)
பணிஎழுத்தாளர், தொழிற்சங்க ஊழியர்
பெற்றோர்குப்பண்ணன், பெருமாயி அம்மாள்
வலைத்தளம்
http://www.kucbatrust.com/

கு. சின்னப்ப பாரதி (Ku.Chinnappa Bharathi; 2 மே 1935 – 13 சூன் 2022) தமிழ்நாட்டின் முதுபெரும் புதின எழுத்தாளரும் அரசியல்வாதியும் ஆவார். இடதுசாரி சித்தாந்தந்தங்களை உள்ளடக்கி இலக்கியங்களைப் படைத்துள்ளார். இவரது புதினங்கள் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், பிரெஞ்சு, சிங்கள போன்ற அயல் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. கரும்பு விவசாயியாக, தொழிற் சங்க ஊழியராக, படைப்பாளியாக பல பரிமாணங்களில் இவர் இயங்கினார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பரமத்தி சின்னப்ப பாரதியின் சொந்த ஊராகும். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் குடும்பம் வேலூருக்குச் சென்ற பிறகு திராவிடர் கழகம், தி.மு.க. மாநாடுகளின்பால் கவரப்பட்டார். மு. வரதராசன் எழுத்துக்களின் மீது இவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பாரதியாரின் கவிதைகளும் பொதுவுடமைக் கட்சியும் நெருக்கமாயின. மாணவர் அமைப்புகளை, இயக்கங்களை நடத்தினார். இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் முழு நேர ஊழியராக 1960 ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கினார். கல்லூரி நாட்களில் நில உச்சவரம்புப் போராட்டத்திற்காக 650 கி.மீ நடைப்பயணம் சென்றார்.

எழுத்துலகில்

[தொகு]

சின்னப்ப பாரதி எழுதிய தாகம், சர்க்கரை, பவளாயி ஆகிய புதினங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டன. சங்கம் என்கிற புதினம் ஆங்கிலம், இந்தி, வங்காளி, குஜராத்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராட்டி, பிரெஞ்சு என்று பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நாவலுக்கு 1986 இல் இலக்கியச் சிந்தனை விருது கிடைத்தது. இவரது ஆறு நாவல்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன.

இவர் எழுதிய சுரங்கம் என்ற புதினம் நிலக்கரிச் சுரங்கத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட வர்க்கப் போராட்ட நாவல் ஆகும். மேற்கு வங்காளம் அசன்சாவில் உள்ள நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களுடன் பல மாதங்கள் தங்கி இருந்து, சுரங்கங்களில் நேரடியாகப் பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இப்புதினத்தை சின்னப்ப பாரதி எழுதினார். இப்புதினம் உபாலி நாணயக்காரவின் மொழிபெயர்ப்பில் சிங்களத்தில் வெளியாகியது.

எழுதிய நூல்கள்

[தொகு]

புதினங்கள்

[தொகு]
  • தாகம்
  • சங்கம்
  • சர்க்கரை
  • பவளாயி
  • சுரங்கம்
  • தலைமுறை மாற்றம்
  • பாலை நில ரோஜா

சிறுகதைகள்

[தொகு]
  • கௌரவம்
  • தெய்வமாய் நின்றான்

இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை

[தொகு]

கு. சின்னப்ப பாரதி இலக்கியக் கருத்தரங்க நினைவு அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை நிறுவப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் மூலம் கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் நாவல், கட்டுரை (இலக்கிய ஆய்வு உட்பட), சிறுகதை, மொழிபெயர்ப்பு, கணினித் தமிழ் இலக்கியம், சிற்றிதழ்கள், இணைய இதழ்கள், சமூகசேவை, நாடகம், கவிதை மற்றும் சிறந்த பத்திரிக்கையாளர் ஆகிய துறைகளில், துறைக்கு ஒரு பரிசாக ரூபாய் பத்தாயிரம் வீதம் வழங்கப்படுகின்றன.[1]

மறைவு

[தொகு]

நாமக்கலில் வசித்து வந்த கு. சின்னப்ப பாரதி உடல்நலக் குறைவால் 2022 சூன் 13 திங்கட்கிழமை தனது 87-ஆவது அகவையில் காலமானார். இவருக்கு மனைவி செல்லம்மாள், பிள்ளைகள் பாரதி, கல்பனா ஆகியோர் உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கு._சின்னப்ப_பாரதி&oldid=3943409" இலிருந்து மீள்விக்கப்பட்டது