உள்ளடக்கத்துக்குச் செல்

காக்கேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1994 ஆம் ஆண்டைச் சேர்ந்த காகேசியாவின் நிலப்படம். இது அப்பகுதியில் பல நாடுகளால் பகிரப்படுகின்ற வளங்களின் இருப்பிடங்களையும் காட்டுகிறது.

காக்கேசியா என்பது, ஐரோப்பாவுக்கும், ஆசியாவுக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு புவிசார் அரசியல் மற்றும் மலைத் தடுப்புப் பகுதியாகும். இப் பகுதி, ஜார்ஜியா, ஆர்மேனியா, அசர்பைஜான், ஆகியவற்றுடன் ரஷ்யாவின் தென் பகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் சர்ச்சைக்குரிய பகுதிகளான ஆப்காசியா, தென் ஒசெட்டியா, நகோமோ-கரபாக் என்பனவும் அடங்கும்.[1]

வரலாறு

[தொகு]
சோவியத் ஒன்றியத்தின் கீழிருந்த போது காக்கேசியாவின் நிர்வாகப் பிரிவுகளைக் காட்டும் நிலப்படம், 1952-1991.

ஆர்மேனியா, துருக்கி, ரஷ்யா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதிகளாக அமைந்துள்ள காக்கேசியா, பல நூற்றாண்டுகளாக அரசியல், சமய, படை மற்றும் பண்பாட்டுப் போட்டிகளுக்கானதும் விரிவாக்கலியத்தினதும் களமாக விளங்கியது. வரலாற்றின் பெரும்பகுதியில் இது பாரசீகப் பேரரசுடன் இணைந்து இருந்தது. 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரஷ்யப் பேரரசு இப்பகுதியை கஜார்களிடம் இருந்து கைப்பற்றியது. ஆர்மேனியா, அல்பேனியா, ஐபீரியா என்பன இப்பகுதியில் இருந்த பண்டைய அரசுகளாகும். இவை பிற்காலத்தில், மீடியப் பேரரசு, அக்கீமெனியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சசானியப் பேரரசு ஆகியவற்றுள் அடங்கியிருந்தன. இக் காலத்தில் சோரோவாஸ்ட்ரியனியம் இப்பகுதியின் முக்கிய சமயமாக விளங்கியது. எனினும் இப்பகுதியில் பாரசீகத்துக்கும் ரோமுக்கும் இடையிலும், பின்னர் பாரசீகத்துக்கும் பைசண்டியத்துக்கும் இடையிலும் ஏற்பட்ட போட்டிகள் காரணமாக இரண்டு சமய மாற்றங்களும் இடம்பெற்றன. பைசண்டியம் இப்பகுதியைப் பல தடவைகள் கைப்பற்றியதாயினும் நிரந்தரமாக வைத்திருக்க முடியவில்லை. ஆர்மேனியாவின் முதன்மை மதமாகக் கிறிஸ்தவ சமயம் ஆகியபோது அச் சமயம் இப்பகுதியில் பரவி சோரோவாஸ்ட்ரியனியத்தை ஓரங்கட்டியது. பின்னர் பாரசீகம் இஸ்லாமியரால் கைப்பற்றப்பட்டபோது இஸ்லாம் இப் பகுதி முழுவதும் பரவியது. பிற்காலத்தில் இது செல்யுக்குகள், மங்கோலியர்கள், உள்ளூர் அரசுகள், கானேட்டுகள் என்பவர்களின் கீழும் இருந்தது. பின்னர் ரஷ்யர் இதனைக் கைப்பற்றும்வரை மீண்டும் பாரசீகத்தின் ஆட்சிக்கும் உட்பட்டது.

புவியியல்

[தொகு]

காக்கேசிய மலைகள் பொதுவாக ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையிலான எல்லைக் கோடாகக் கருதப்படுகிறது. அத்துடன் இப் பகுதியிலுள்ள நாடுகள் சில சமயங்களில் ஐரோப்பாவுடனும், வேறு சில சமயங்களில் ஆசியாவுடனும் சேர்த்து எண்ணப்படுவது உண்டு. காக்கேசியாவின் மிக உயர்ந்த மலைச் சிகரம், 5642 மீட்டர் உயரம் கொண்டதும், ரஷ்யாவில் இருக்கும் மேற்கு காக்கேசியாவைச் சேர்ந்த எல்புரூஸ் மலை ஆகும். இதுவே ஐரோப்பாவின் மிக உயர்ந்த இடமும் ஆகும். காக்கேசியாவின் வடக்கு பகுதி சிஸ்காக்கஸ் என்றும், பொதுவாக தெற்கு பகுதி டிரான்ஸ்காக்கஸ் என்றும் அழைக்கப்படுகின்றது. சிஸ்காக்கஸில் கிரேட்டர் காக்கேசிய மலைத்தொடரின் பெரும்பகுதி அமைந்துள்ளது. சிஸ்காக்கஸ் மேற்கே கருங்கடலுக்கும், கிழக்கில் காஸ்பியன் கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது.

உலகில் உள்ள பகுதிகளுள், மொழியியல், பண்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் கூடிய பல்வகைமை கொண்டது இப்பகுதியாகும். இத்தகைய பண்பாட்டுப் பிரிவுகளுள், நாட்டின அரசுகளான; ஜார்ஜியா, ஆர்மேனியா, அசர்பைஜான் என்பவற்றுடன்; ரஷ்யப் பிரிவுகளான, கிராஸ்னோடார், கிராய், ஸ்தாவ்ரோபோல் கிராய் ஆகியனவும்; அடிகேயா, கல்மிக்கியா, கராச்சே-சேர்கேசியா, கபர்டினோ-பால்கேரியா, வட ஒசெட்டியா, இங்குசேட்டியா, செச்சென்யா, டாகெஸ்தான் ஆகிய தன்னாட்சிப் பகுதிகளும் அடங்கும். இவற்றையும் விட ஆப்காசியா, நாகோர்னோ-கரபாக், தென் ஒசட்டியா போன்றவை விடுதலை கோரியுள்ள போதிலும் பிற நாடுகளால் இவை இன்னும் ஏற்கப்படவில்லை.[1]

புள்ளிவிபரங்கள்

[தொகு]

காக்கேசியாவில் பல்வேறு மொழிகள் மற்றும் மொழி குடும்பங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியில் 50 க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் வாழ்கின்றன. ஆர்மீனியன் மற்றும் ஒசேசியன் போன்ற இந்தோ-ஐரோப்பிய மொழிகளும், அசர்பைஜான் மொழி மற்றும் குமிக் மொழி ஆகிய துருக்கிய மொழிகளும், கராச்சே-பால்கர் மொழியும் இப்பகுதியில் பரவலாக பேசப்படுகின்றன. வடக்கு காக்கேசியாவில் உருசிய மொழி பயன்பாட்டில் உள்ளது. வடக்கு மற்றும் தெற்கு காக்கேசியா பகுதிகளில் முஸ்லிம்கள், கிழக்கு ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களும், ஆர்மேனிய கிறிஸ்தவர்களும் வாழ்கின்றனர். ஈரானில் பரவியிருக்கும் அசர்பைஜான் பிராந்தியத்தின் தென்கிழக்கு பகுதியில் சியா மத ஆதரவாளர்களும் உள்ளனர்.

சூழலியல்

[தொகு]

இப்பகுதி மிகுந்த சூழலியல் முக்கியத்துவம் கொண்டது. இங்கே 6,400 வகையான உயர்நிலைத் தாவரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவற்றுள் 1,600 வரையானவை இப்பகுதிக்கே உரியனவாகும். இப்பகுதியின் சொந்த விலங்குகளுள், சிறுத்தைகள், பழுப்புக் கரடிகள், ஓநாய்கள், ஐரோப்பிய பைசன்கள், தங்கக் கழுகுகள் என்பன அடங்குகின்றன. முள்ளந்தண்டிலிகளுள் 1,000 சிலந்தி வகைகள் கண்டறியப்பட்டுள்ளன.[2] இப்பகுதி 34 உலக பல்லுயிர் வெப்பப் பகுதிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.[3] மேலும் 70 இனங்களுக்கு  மேற்பட்ட உள்ளூர் வன நத்தைகள் காணப்படுகின்றன. காக்கேசிய வோக்காசு தவளை, காக்கேசியன் சலமண்டர், ராபர்டின் பனி வோல் எனப்படும் பாலுட்டி விலங்கு ஆகிய இப்பகுதிக்கு உரிய முள்ளந்தண்டுள்ள விலங்குகளும் வாழ்கின்றன. வின்சென்ட் எவன்ஸ் இப்பகுதி கருங்கடலில் மின்கே திமிங்கிலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.[4][4][5]

தாதுக்களும் ஆற்றல் வளங்களும்

[தொகு]

காக்கேசியாவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தாதுக்கள், ஆற்றல் வளங்கள் காணப்படுகின்றன. அலுனைட், தங்கம், குரோமியம், தாமிரம், இரும்புத் தாது, பாதரசம் மாங்கனீசு, மாலிப்டினம், ஈயம், தங்கிதன், யுரேனியம், தூத்தநாகம் ஆகியவையும், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி ஆகிய வளங்களும் உள்ளன.

விளையாட்டு

[தொகு]

2014 ஆம் ஆண்டில் உருசியா சோச்சியில் குளிர்கால ஒலிம்பிக் நடைப்பெற்றது. கிராஸ்னயா பொலியானா மலை பனிச்சறுக்கு விளையாட்டுக்கு பிரபலமான இடம் ஆகும். 2015 ஆம் ஆண்டில் ஐரோப்பிய விளையாட்டுக்கள் அசர்பைஜான் நடைப்பெற்றது.

அல்பிகா சேவை, ரவுண்டபவ்ட் மலை, ரோசா ஹியூட்டர், ஆர்மேனியாவில் உள்ள சாக்கா ஸ்கை உல்லாச விடுதி, அசர்பைஜான் உள்ள ஷாஹ்தாக் குளிர்கால வளாகம் என்பன காக்கேசியாவில் அமைந்துள்ள பனிச்சறுக்கு வளாகங்கள் ஆகும்.

அசர்பைஜான் அஜர்பைஜான் கிராண்ட் பிரிக்ஸ் மோட்டார் பந்தயம் நடைப்பெற்றது. ஜோர்ஜியாவில் ரக்பி உலக கோப்பை யு 20 மற்றும் 2017 ஆம் ஆண்டில் 2017 யு -19 ஐரோப்பா கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியும் நடந்தது.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Caucasus | Mountains, Facts, & Map". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  2. "Caucasian Spiders » CHECKLISTS & MAPS". web.archive.org. 2009-03-28. Archived from the original on 2009-03-28. பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. Zazanashvili N, Sanadiradze G, Bukhnikashvili A, Kandaurov A, Tarkhnishvili D. 2004. Caucasus. In: Mittermaier RA, Gil PG, Hoffmann M, Pilgrim J, Brooks T, Mittermaier CG, Lamoreux J, da Fonseca GAB, eds. Hotspots revisited, Earth's biologically richest and most endangered terrestrial ecoregions. Sierra Madre: CEMEX/Agrupacion Sierra Madre, 148–153
  4. 4.0 4.1 "OceanCare - Protecting oceans and marine mammals". OceanCare (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-10-29.
  5. Horwood, Joseph (1989). Biology and Exploitation of the Minke Whale. p. 27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காக்கேசியா&oldid=4062684" இலிருந்து மீள்விக்கப்பட்டது