உள்ளடக்கத்துக்குச் செல்

அரிகராலயா

ஆள்கூறுகள்: 13°20′N 103°58′E / 13.333°N 103.967°E / 13.333; 103.967
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அரிகராலயா (Hariharalaya, ஹரிஹராலயா, கெமர்: ហរិហរាល័យ) என்பது ஒரு பண்டைய நகரமும், கெமர் பேரரசின் தலைநகரமும் ஆகும். இந்நகரம் கம்போடியாவின் சியாம் ரீப் நகருக்கு அண்மையில் இன்றைய ரொலுவோசு பிரதேசத்தில் அமைந்துள்ளது. இன்று இந்நகரில் பிராசாதப்ர கோ, பராசாதபாகங் போன்ற 8ம்-9ம் நூற்றாண்டுக் கால பண்டைய கெமர் அரசுக் கோவில்களே எஞ்சியுள்ளன.

பெயர்க் காரணம்

[தொகு]
இந்த 7ம் நூற்றாண்டுக் கால அரிகரனின் சிற்பம் கம்போடியாவின் நொம் தா நகரில் உள்ளது.

"அரிகராலயா" என்பது கம்போடியாவில் அங்கோர்-காலத்துக்கு முற்பட்ட இந்துக் கடவுளின் பெயராகும். "அரிகரன்" என்பது அரி என்ற திருமாலையும், அரன் என்ற சிவனையும் குறிக்கிறது. அரிஅரன் என்பது அரைப்பகுதி அரி என்ற திருமாலையும், மற்றைய அரைப்பகுதி அரன் என்ற சிவனையும் கொண்ட ஒரு ஆண் கடவுள் ஆகும்.

வரலாறு

[தொகு]
அரிகராலயாவில் முதலாம் இந்திரவர்மனால் கட்டப்பட்ட ஒரு மலைக்கோயில் பாகாங்.

கிபி 8ம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில், கம்போடியப் பேரரசன் இரண்டாம் செயவர்மன் தொன்லே சாப் ஏரிப் பகுதியின் பெரும் பிரதேசத்தைக் கைப்பற்றினான். இக்காலப்பகுதியில் இவன் அரிகராலயாவில் தனது தலைநகரை அமைத்தான்.[1] ஆனாலும், இரண்டாம் செயவர்மன் கிபி 802 இல் அரிகராவில் அல்லாமல் மகேந்திர பர்வதத்தில் வைத்துத் தன்னை நாட்டின் முழு அதிகாரம் கொண்ட அரசனாக அறிவித்தான். பின்னர், இவன் தனது தலைநகரை அரிகராலயாவுக்கு மீண்டும் மாற்றினான். இங்கேயே 835-ஆம் ஆண்டில் இறந்தான்.[2]

இரண்டாம் செயவர்மனுக்குப் பின்னர் மூன்றாம் செயவர்மன் ஆட்சியில் அமர்ந்தான். அவனுக்குப் பின்னர் முதலாம் இந்திரவர்மன் ஆட்சியில் அமர்ந்தான். இவனது காலத்திலேயே பராசாதபாகங் என்ற மலைக்கோவிலும், இந்திரதடாகம் என அழைக்கப்படும் அகழியும் கட்டப்பட்டன.[3] 881-ஆம் ஆண்டில் பாகாங் கோவிலில் முதலாம் இந்திரவர்மன் இலிங்கம் ஒன்றை வைத்து குடமுழுக்கும் செய்வித்தான். இதற்கு சிறீ இந்திரேசுவரன் எனப் பெயரிட்டான். இப்பகுதியில் 880 ஆம் ஆண்டில் பிராசாதப்ர கோ (புனிதமான காளை) என்ற சிறிய கோவில் ஒன்றையும் இவன் கட்டினான். 889 இல் இந்திரவர்மனின் மகன் முதலாம் யசோவர்மன் ஆட்சியேறினான். இவன் இந்திரதடாகத்தின் நடுவில் ஒரு செயற்கைத் தீவை அமைத்து அங்கு லோலெய் என்ற கோவிலைக் கட்டினான்.[4] யசோவர்மன் சியாம் ரீப் கருக்கு அருகாமையில் அங்கோர் தோம் பகுதியில் யசோதரபுரம் என்ற புதிய நகரை நிர்மாணித்தான். இதனையே அவன் தனது தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தான். இங்கு புனொம் பாக்காங் என்ற மலைக்கோயில் ஒன்றையும் கட்டினான். 1170களில் சாம்பாவில் (இன்றைய நடு மற்றும் தெற்கு வியட்நாம்) இருந்து ஆக்கிரமிக்கப்படும் வரையில் இது தலைநகராக இருந்தது.[5]

மேற்கோள்கள்

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. O'Reilly, Dougald J.W. Early Civilizations of Southeast Asia. Rowman & Littlefield Pub Inc. 2006. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7591-0279-8. pp.123-124
  2. Freeman and Jacques, p.9.
  3. Coèdes, George (edited by Walter F. Vella; translated by Susan Brown Cowing). The Indianized states of Southeast Asia. University of Hawai`i Press. 1986. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8248-0368-1. p.110ff
  4. Freeman and Jacques, p.202
  5. Freeman and Jacques, பக்.9.


"https://ta.wikipedia.org/w/index.php?title=அரிகராலயா&oldid=3699356" இலிருந்து மீள்விக்கப்பட்டது