உள்ளடக்கத்துக்குச் செல்

ஹாவர்ட் கார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹாவர்ட் கார்ட்டர்
ஹாவர்ட் கார்ட்டர்
பிறப்பு(1874-05-09)9 மே 1874
கென்சிங்க்டன், லண்டன்
இறப்பு2 மார்ச்சு 1939(1939-03-02) (அகவை 64)
கென்சிங்க்டன், லண்டன்
தேசியம்இங்கிலாந்து
துறைதொல்லியல்
அறியப்படுவதுதுட்டன்காமன் கல்லறையைக் கண்டுபிடித்தவர்

ஹவார்ட் கார்ட்டர் (Howard Carter; மே 9, 1874 - மார்ச் 2, 1939) பிரித்தானிய தொல்பொருள் ஆய்வாளர். எகிப்திய மன்னன் பாரோ துட்டன்காமன் என்பவனின் கல்லறையைக் கண்டுபிடித்தவர்களுள் முதன்மையானவர்.

இளமை[தொகு]

1874 ஆம் ஆண்டு மே 9 ஆம் நாள் இங்கிலாந்திலுள்ள லண்டனில், கென்சிங்டன் என்ற இடத்தில் ஹோவர்ட் கார்ட்டர் பிறந்தார். இவருடைய தந்தை சாமுவேல் கார்ட்டர், தாயார் மார்த்தா ஜாய்ஸ் கார்ட்டர். சாமுவேல் கார்ட்டர் ஒரு திறமையான தொல்லியல் கலைஞர் ஆவார். எனவே தனது வழியை பின்பற்ற ஹோவர்ட் கார்ட்டருக்குப் பயிற்சியளித்தார். மிக இளம் வயதிலேயே ஹோவார்ட் இத்துறையில் திறமையுடன் விளங்கினார்.

1891-ல் தனது 17 ஆம் வயதில் எகிப்தில் பெனிஹசன் என்னுமிடத்தில் உள்ள மத்திய இராச்சியத்தில் உள்ள கல்லறைகளை அகழ்வாய்வு செய்த பெர்சி நியூபெர்ரி என்பவரின் உதவியாளராகச் சேர்ந்தார். மேலும் அவர் இளம் வயதிலேயே கல்லறையில் உள்ள வேலைப்படுகளை புதுமையான முறையில் நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்டார்.

பணிகள்[தொகு]

கார்னாவன் பிரபுவும் அவரது துணைவியாரும். 1921-ல்

1892-ல் பிரித்தானியாவின் புகழ்பெற்ற தொல்பொருள்துறை அகழ்வாய்வாளரானா பிளிண்டர்ஸ் பெட்ரி (Flinders Petrie) என்பவர் எகிப்தின் அமர்னா நகரத்தில் இருந்த பார்வோன் அக்கெனதென் கல்லறை அகழ்வாய்வுகளில் ஈடுபட்டிருந்த போது, அவரின் கீழ் ஹோவார்ட் கார்ட்டர் ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். இவ்வாய்வில் அக்கெனதெனின் தலைநகர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர். 1894 முதல் 1899 வரை எட்வர்டு நாவில்லி என்பவருன் தேர் எல் பகாரி என்னுமிடத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான் அவர் தனது புகழ்பெற்ற ஆய்வான, அரசி ஆட்செப்சுட்டு கோவிலின் சுவரில் இருந்த செதுக்குச் சிற்பங்களைக் கண்டறிந்து சாதனை புரிந்தார்.

1899-ல், எகிப்திய தொல்பொருள் சேவை (Egyptian Antiquities Service)(EAS) என்ற நிறுவனத்தின் முதல் தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். இவர் மேற்பார்வையில் தீபை என்னுமிடத்தில் (இப்போது அல்-உக்சுர் என அழைக்கப்படுகிறது.) பல அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 1904-ல் கீழ் எகிப்தின் ஆய்வு மேலாளராக நியமிக்கப்படும் வரை சுமார் ஐந்தாண்டுகள் இங்கு ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டார். 1905-ல் எகிப்திய ஆய்வுக்கள காவலாளிகளுக்கும் பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்குமிடையே ஏற்பட்ட ஒரு வழக்கு காரணமாக இவர் இப்பணியைத் துறந்தார்.[1]

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1907-ல் கார்னாவன் பிரபு தனது ஆகழ்வாய்வுப்பணியில் ஹாவர்டு கார்ட்டரை பணியமர்த்தினார்.[2] கேஸ்டன் மேஸ்பெரோவால் அறிமுகப்படுத்தப்பட்ட நவீன அகழ்வாய்வு முறைகளையும் பதிவு செய்யும் முறைகளையும் கார்ட்டர் பின்பற்றினார்.[3][4]

மன்னர்களின் சமவெளி ஆய்வுகள்[தொகு]

மன்னர்களி சமவெளியில் துட்டன்காகன் கல்லறையின் அகழாய்வுகள்

1914 முதல் அரசர்களின் பள்ளத்தாக்கு என்ற பகுதியில் கார்ட்டர் தனது ஆய்வுகளை மேற்கொள்ள கார்னாவன் பிரபு நிதி உதவி செய்தார். ஆனால் முதல் உலகப்போரின் காரணமாக இப்பணிக்கு இடையூறு ஏற்பட்டது. பல ஆண்டுகளாகத் தேடியும் இவ்வாய்வில் பலனேதும் கிட்டவில்லை. இதனால் அதிருப்தியடைந்த கார்னாவன் பிரபு 1922-ல் கல்லறையைத் தேடும் பணியில் கார்ட்டருக்கு மேலும் ஒரு வாய்ப்பை வழங்கி நிதியுதவி செய்தார்.[5]

துட்டன்காமன் கல்லறை எண் 62 ஆய்வு[தொகு]

துட்டன்காமன் கல்லறை

4 நவம்பர் 1922, நவம்பர் 4 ஆம் நாள் கார்ட்டரின் அகழ்வாய்வுக் குழுவினர் மன்னர்களின் சமவெளியில் துட்டன்காமனின் கல்லறை எண் 62-ஐ கண்டறிந்தனர். உடனே கார்ட்டர் கார்னாவன் பிரபுவிற்குத் தகவல் அனுப்பினார். கார்னாவன் பிரபு தனது மகள் மற்றும் பிறருடன் அங்கு வந்தார். அவர்களின் முன்னிலையில்; அவ்வாயில் படியில் மேல் இடது கை மூலையில் உள்ள சிறிய வாயிலைக் கண்டறிந்தார். வருங்காலத்தில் மிகப்பெரிய தொல்பொருள் ஆய்வாளனாக வருவாயாக எனற ஆசிகளுடன் தனது பாட்டி தன் பதினேழாவது பிறந்த நாளில் பரிசாகத் தந்த உளியின் உதவியால் அவ்விடத்தில் ஒரு வழியை ஏற்படுத்தினார். ஆனால் அவ்விடம் ஒரு கல்லறையா அல்லது கல்லறையில் அத்துமீறி நுழைவோரை குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக உள்ள வெறும் இடைமாற்று வழியா எனத் தெரியாத நிலையில் நவம்பர் 26 - எகிப்திய மன்னன் துட்டன்காமன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர். 3,000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே. அங்கு வெறும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் மூலம் இரண்டு காவலாளி சிலைகளால் முத்திரையிடப்பட்டு உறுதியாகப் பாதுகாக்கப்பட்டிருந்த ஒரு நுழைவாயிலும் அங்கிருந்த தங்கம் மற்றும் கருங்காலி மரத்தினாலான ஒரு வழியையும் கண்டனர். நீ எதையாவது பார்க்க முடிந்ததா? எனக் கேட்ட கார்னாவன் பிரபுவிற்கு "ஆம் அற்புதமான விஷயங்களைப் பார்த்தேன்" என கார்ட்டர் தனது புகழ்பெற்ற வார்த்தைகள் மூலம் விடையளித்தார்.[6]

அடுத்த சில மாதங்களில் எகிப்திய தொல்பொருள் துறையின் இயக்குனர் பியர் லாகவ் என்பவரின் மேற்பார்வையில் கார்ட்டர் பணியாற்ற வேண்டியிருந்தது.[7] இதனால் கார்ட்டர் அடிக்கடி மன அழுத்ததிற்கு ஆளானார். அப்போது அக்கல்லறையின் முக்கிய அறைக்கு செல்வதற்குரிய இடைவெளி உள்ளடக்கங்களை பட்டியலிட்டு கழித்தார். 1923, பிப்ரவரி 16 அன்று, கார்ட்டர், முத்திரையிடப்பட்ட வாயில் ஒன்றைக் கண்டறிந்தார். அது உண்மையில் ஒரு அடக்கம் செய்யும் அறை என்று கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு பூவேலைகளால் செதுக்கப்பட்ட ஒரு பழங்கால, கல்லால் ஆன சவப்பெட்டியைக் கண்டறிந்தார். இந்த கண்டுபிடிப்பினைப் பற்றி உலகின் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் ஆவலுடன் செய்தி வெளியிட்டன. எனவே செய்தியாளர்கள் அப்பகுதியில் திரன்டனர். ஆனால் அவர்கள் அங்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களின் பிரதிநிதியாக எச் வி மோர்டன் என்பவர் மட்டுமே காண அனுமதிக்கப்பட்டார்.. எச். வி. மோர்டன் தனது தெளிவான விளக்கங்கள் மூலம் பிரித்தானிய பொது மக்களிடையே கார்ட்டரின் மரியாதையை மேலும் உயர்த்த உதவினார்.

தீப்ஸ் எனுமிடத்தில் உள்ள கார்ட்டரின் இல்லம்

அதிகாரப்பூர்வமாக துட்டகாமனின் அடக்க அறை மற்றும் கல்லறைத் திறப்பதற்கு முன்னர் கார்ட்டர் எழுதிய குறிப்புகளும் கார்னாவன் பிரபு, லேடி ஈவ்லின் ஹெர்பர்ட் ஆகியோர் உள்ளிட்ட புகைப்பட ஆதாரமும் இதனை உறுதி செய்கின்றன.[8]

இறுதிக் காலம்[தொகு]

துட்டகாமனின் கல்லறையிலிருந்த ஆயிரக்கணக்கான பொருள்களைக் கண்டறியும் வரை அப்பணியிலிருந்த கார்ட்டர். பரபரப்பான தனது ஆய்வுப்பணியிலிருந்து 1932 -ல் தொல்லியல் துறை இருந்து ஓய்வு பெற்றார். அதன் பின்னர் பழங்காலப் கலை பொருட்கள் சேகரிப்பு நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்களில் பகுதி நேர முகவர் ஆனார். அவற்றுள் கிளிவ்லேண்ட் அருங்காட்சியகம் மற்றும் டெட்ராய்ட் நிறுவனம் ஆகியவையும் இருந்தன. 1924 ல் அமெரிக்கா சென்ற கார்ட்டர், நியூயார்க் நகரம் மற்றும் அமெரிக்காவில் மற்ற நகரங்களில் தொடர்ந்து விரிவுரைகள் வழங்கினார். இவரது விரிவுரைகள் அங்கு ஆர்வத்துடன் கலந்து கொண்ட பார்வையாளர்களிடம்" எகிப்தோமானியா வைப் பற்றவைக்க பரவ வழிவகை செய்தது.

மறைவு[தொகு]

1939-ல் லண்டனில் உள்ல கென்சிங்டனில் லிம்போமா எனும் ஒரு வகைப் புற்றுநோய் தாக்குதலால் இறந்தார்.[9] இயற்கையாக ஏற்பட்ட இவரது மரணம் கூட நீண்ட நாட்களாக (3000 ஆண்டுகளாக) அமைதியுடன் இருந்த துட்டகாமனின் கல்லறையை வன்முறையுடன் தோண்டியதால் தான் ஏற்பட்டது எனக் கூறப்பட்டது. இங்கிலாந்தின் புட்னெ வேலி கல்லறைத் தோட்டத்தில் இவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.[10] இவரது கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு சிற்பங்கள்[11], இசைத்தொகுப்புகள், கதை இலக்கியங்கள்[12][13][14] , திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்கள்[15] ஆகியன வெளியிடப்பட்டன. கூகுள் நிறுவனம் கார்ட்டரின் 138வது பிறந்தநாளில் டூடுள் வெளியிட்டுச் சிறப்பித்தது.[16]

மேற்கோள்கள்[தொகு]

 1. James, T. G. H. Howard Carter, I.B.Tauris Publishers, Revised edition 2006, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1845112585, chapter "Saqqara Affair"
 2. Winstone, H. V. F. (2006). Howard Carter and the discovery of the tomb of Tutankhamun (rev. ed.). Manchester: Barzan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-905521-04-9.
 3. David, Elisabeth (1999). Gaston Maspero 1846-1916: le gentleman égyptologue. Paris: Pygmalion; Gérard Watelet. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2-85704-565-4.
 4. James, T. G. H. (1992). Howard Carter: the path to Tutankhamun. London: Kegan Paul. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7103-0425-0.
 5. Carnarvon, Fiona (2011). Highclere Castle. Highclere Enterprises. p. 59.
 6. Lord Carnarvon's description, 10 December 1922, quoted in: Reeves, Nicholas; Taylor, John H. (1992). Howard Carter before Tutankhamun. London: British Museum. p. 141. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7141-0952-5.
 7. Wikipedia - French edition
 8. Reeves, C. N. (1990). Valley of the Kings: the decline of a royal necropolis. London: Kegan Paul. p. 63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0710303688.
 9. "Howard Carter, 64, Egyptologist, Dies". த நியூயார்க் டைம்ஸ். http://www.nytimes.com/learning/general/onthisday/bday/0509.html. 
 10. "Putney Vale cemetery". பார்க்கப்பட்ட நாள் 2010-02-16.
 11. Redmond, J.; Ensor, D. (19 June 2005). "Cracking the code: Mysterious 'Kryptos' sculpture challenges CIA employees". CNN. http://www.cnn.com/2005/US/06/19/cracking.the.code/index.html. 
 12. The Tutankhamun Affair Retrieved 23 May 2009
 13. Book reviews Retrieved 17 March 2010
 14. Patterson, Dugard, James, Martin (2010). The Murder of King Tut. Grand Central Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-446-53977-7.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
 15. "Howard Carter (Character)". IMDb.com. Archived from the original on 14 பிப்ரவரி 2009. பார்க்கப்பட்ட நாள் 8 May 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 16. Howard Carter Google Doodle

மேலும் படிக்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Howard Carter(archaeologist)
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாவர்ட்_கார்ட்டர்&oldid=3925763" இலிருந்து மீள்விக்கப்பட்டது