ஹட்சன் அக்ரோ நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹட்சன் அக்ரோ ப்ராடக்ட்ஸ் லிமிடெட்
வகைபட்டியலிடப்பட்ட நிறுவனம்
நிறுவுகை1970; 54 ஆண்டுகளுக்கு முன்னர் (1970)
நிறுவனர்(கள்)R.G. சந்திரமோகன்
தலைமையகம்சென்னை, இந்தியா
சேவை வழங்கும் பகுதிஇந்தியா
முதன்மை நபர்கள்R. G. சந்திரமோகன்(நிர்வாக இயக்குனர்), ச.சத்தியன் (துணை நிர்வாகி)
உற்பத்திகள்பால்பொருட்கள்
வருமானம்5,400 கோடி (US$680 மில்லியன்) (2018)
இயக்க வருமானம்746.36 கோடி (US$93 மில்லியன்) (2018)
நிகர வருமானம்382.63 கோடி (US$48 மில்லியன்) (2018)
இணையத்தளம்www.hap.in

இந்தியாவின் மிகப்பெரிய பால் சார்ந்த பொருள்கள் தயாரிப்பு நிறுவனமான ஹட்சன்(Hatsun Agro Product) நிறுவனத்தை நிறுவியவர் சந்திரமோகன் (R.G. Chandramogan). இந்த ஆண்டு வருமானம் ரூ . 5,400 கோடிக்கும் மேல் ஆகும். இதன் தலைமையகம் இந்திய நாட்டின் மாநிலமான தமிழ்நாட்டில் சென்னை நகரில் அமைந்துள்ளது. [1] ஆரம்பத்தில் அருண் ஐஸ் கிரீம் தயாரித்த இந்நிறுவனம் படிப்படியாக ஆரோக்யா பால், ஹட்சன் தயிர், ஹட்சன் நெய்,  அருண் ஐஸ்க்ரீம், ஐபாகோ, ஓயலோ (மசாலா வடை, சமோசா, பன்னீர் பட்டர் மசாலா போன்ற உடனடியாக சமைத்து சாப்பிடும் வகையிலான பொருட்கள்), அனிவா ஸ்வீட்ஸ் (சேமியா பாயசம், அடை பிரதமன், ரைஸ் கீர் போன்றவை), சந்தோசா கேட்டில் ஃபீட் (கால்நடை தீவன வகைகள்) என தங்களது தயாரிப்புகளை விரிவுபடுத்து நாட்டிலேயே மிகப்பெரும் பால் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது.


நிறுவன வரலாறு[தொகு]

இதன் நிறுவனரான சந்திரமோகன் சிவகாசிக்கு அருகில் உள்ள திருத்தங்கல் என்கிற ஊரில் பிறந்தார். இவரது தந்தை ஆசிரியராவார். சாதாரண நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பியுசி தேர்வில் தோல்வியடைந்தவர். சிறு வயதில் இருந்தே ஐஸ்கிரீம் மேல் விருப்பம் கொண்டிருந்த சந்திரமோகன் அதையே தூண்டுகோலாகக் கொண்டு இந்த நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். 1970ம் ஆண்டு தன் குடும்ப சொத்துக்கள் சிலவற்றை விற்று, அதன்மூலம் கிடைத்த 13,000-ரூபாயில் தனது 21ம் வயதில் ஆர். ஜி. சந்திரமோகன் அன் கோ., என்ற நிறுவனத்தை முதன்முதலில் நிறுவினார். அந்நிறுவனத்தில் பெயரில் தயாரான பனிக்கூழிற்கு "அருண் ஐஸ் கிரீம்" என்று பெயர் வைத்து அவரே தள்ளுவடியில் சென்று 10 பைசாவிற்கு விற்க தொடங்கியுள்ளார். எந்த ஒரு தொழில் முயற்சியும் உடனடியாக வெற்றி பெறுவதில்லை. அதேபோல அவரது தொழில் பயணங்களில் பல தடைகள், இழப்புகளை சந்தித்த பிறகே வெற்றி இலக்கை அடைந்திருக்கிறார்.[2]

ஆரம்ப காலகட்டத்தில் நிதியளவிலும், சந்தையளவிலும்  அவரது நிறுவனத்தை விட பெரிய நிறுவனங்களாக இருந்த தேசபிரகாஷ், ஜாய் மற்றும் க்வாலிட்டி ஐஸ் போன்றவைகள் கடும் போட்டியை தந்தது. தயாரிப்பை பற்றி நன்றாக தெரிந்த அவருக்கு தயாரித்த பொருட்களை எப்படியல்லாம் விளம்பரங்கள் மூலம் விற்பனையை முன்னேற்றலாம் என்பதில் தெளிவு இல்லை. அதனால் சபரி கல்லூரியில் விற்பனை மேலாண்மை, ஏற்றுமதி மேலாண்மை மற்றும் தனிநபர் மேலாண்மை சம்பந்தபட்ட படிப்பை படித்தார். தனது நிறுவனத்தில் தயாரிக்கப்படும் பொருட்களை மேம்படுத்தியதோடு தன்னையும் இவ்வாறு மேம்படுத்திக்கொன்டார். இதன்படியே “அர்ஜூன் அம்மா யாரு?” என்ற வித்தியாசமான விளம்பரத்தை பயன்படுத்தி அடுத்த தயாரிப்பான  ஆரோக்கியா பாலினை மக்களிடம் கொண்டு சேர்த்தது ஹட்சன் நிறுவனம்.[3]

தொடர்ந்து 1986-ல் இந்நிறுவனம் Hatsun Foods Private Ltd என பெயர் மாற்றப்பட்டது. 1991 ல் 3 கோடி வருமானத்தை ஈட்டியது. ஐஸ் கிரீம் செய்வதற்கு பாலை கொள்முதல் செய்யவேண்டும் என்பதால் பாலையும் விற்கலாம் என்று தோன்றவே, 1995 ல் ஆரோக்கிய பால் தொடங்கப்பட்டது.  இன்று ஆரோக்கியா பால் மட்டும் வருடத்திற்கு ரூ.2000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுகிறது. பால் மட்டுமல்ல மோர், தயிர்,வெண்ணெய், நெய் மற்றும் பிற பால் பொருட்களையும் உற்பத்தி செய்கிறது ஹட்சன் நிறுவனம்.

2012 ம் ஆண்டில் Hatsun நிறுவனம் தனது மற்றொரு ஐஸ் கிரீம் பிராண்டான ஐபாகோ(Ibaco) ஐ தொடங்கி நடத்தி வருகிறது.

பால் கொள்முதல்[தொகு]

கிட்டத்தட்ட 13500 கிராமங்களில் இருக்கும் மூன்று லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகளிடம் இருந்து பாலை நேரடியாகக் கொள்முதல் செய்கிறது இந்த நிறுவனம். இப்படிக் கொள்முதல் செய்யப்பட்ட பாலைக் குளிர்விப்பதற்காக 400க்கும் மேற்பட்ட இடங்களில் அதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது. பாலை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்ல கிட்டத்தட்ண 10000 ஒப்பந்த வாகனங்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். தமிழ்நாட்டில் பத்து மாவட்டங்களிலும், கர்நாடகாவில் மூன்று மாவட்டங்களிலும் பால் ஷெட்களை கொண்டுள்ளது இந்த நிறுவனம். இது தவிர, விவசாயிகளுக்கு பால் உற்பத்தியில் உதவும் வண்ணம் சேவைகளை வழங்கிவரும் இந்த நிறுவனம், 1,110 கால்நடை மருத்துவர்களை பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நன்கு பராமாிக்கத் தேவையான உதவிகளை செய்கிறது. இதுவும் தவிர, கால்நடைகளை வாங்குவதற்கு வங்கிக் கடன்களை விவசாயிகள் பெறத் தேவையான உதவிகளையும் இந்த நிறுவனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.[4]

பதப்படுத்தல் மற்றும் பால் நிரப்புதல்[தொகு]

பல்வேறு இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாலை தமிழ்நாட்டில் சேலம், காஞ்சிபுரம், மதுரை, பாலக்கோடு, தலைவாசல், கரூர்,தர்மபுரி, பழனி மற்றும் திருநெல்வேலிஆகிய இடங்களிலும்,  கர்நாடகாவில் ஹொன்னாலி மற்றும் பெல்காம் ஆகிய இடங்களிலும் ஆந்திராவில் சித்தூர் மற்றும் தெலுங்கானாவில் ஹைதராபாத்திலும் பால் பதப்படுத்துதல் கிடங்குகளைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த பால் பதப்படுத்துதல் கிடங்குகளில் உலகத்தரம் வாய்ந்த இயந்திரங்களையும், நல்ல அனுபவமிக்க பணியாளர்களையும் கொண்டு, பால் பதப்படுத்துதல் மற்றும் நிலைப்படுத்தல் போன்றவற்றை சுத்தமாகவும் மக்களின் ஆரோக்கியம் காக்கும் வகையிலும் செய்து வருகிறது இந்த நிறுவனம். பால் சம்பந்தப்பட்ட இடுபொருட்களை (Ingredients) அமெரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் இருக்கும் 38 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துவருகிறது இந்த நிறுவனம். [5]

விநியோகம் மற்றும் விற்பனை[தொகு]

பாலை விநியோகம் செய்ய அன்றாடம் பஃப் (Puff) எனும் குளிர்விப்பு வசதி பொருத்தப்பட்ட ட்ரக்குகள் இரண்டு லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து,  தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா (சில பகுதிகள்) மற்றும் கோவாவில் பால் விநியோகத்தை செய்துவருகிறது. மிகப் பெரிய எண்ணிக்கையில் பால் குளிர்விப்பு நிலையங்களை தன்வசம் கொண்டிருப்பதால், வாடிக்கையாளர்கள் புத்தம் புதிய பாலை ஒவ்வொரு நாளும் பெறும் வகையில் ஏற்பாடுகளைச் செய்துள்ளது இந்த நிறுவனம். மேலும் ஐஸ்கிரீமை விநியோகம் செய்ய தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் 2,305 விநியோகிக்கும் இடங்களைக் கொண்டுள்ளது இந்த நிறுவனம். ஐஸ்கிரீமை சேமித்து வைப்பதற்கான 14 குளிர்பதன அறைகளுடன் கூடிய வசதிகளை இந்த நிறுவனம் கொண்டிருப்பதால்  விரைவாகவும் சுலபமாகவும் வாடிக்கையாளரிடம் தன்னுடைய தயாரிப்புகளைக் கொண்டு சேர்க்க முடிகிறது இந்த நிறுவனத்தினால். அதேபோல், ஆரோக்யா மற்றும் ஹட்சன் பிராண்டு பாலை விநியோகிக்க, 650 டீலர்களையும்  1,400 விநியோக மையங்களையும் கொண்டுள்ளது இந்த நிறுவனம். பால் கொண்டு செல்லும் வாகனங்கள் தினப்படி 200 மற்றும் 250 கிலோ மீட்டர்கள் பயணித்து பாலை வாடிக்கை யாளர்களுக்குக் கொண்டு சேர்க்கின்றன. [6]

கால்நடைகள் பராமரிப்பு மற்றும் கால்நடைப் தீவன தயாரிப்பு[தொகு]

விவசாயிகளுக்கு பால் உற்பத்தியில் உதவும் வண்ணம் பல்வேறு சேவைகளை வழங்கிவரும் இந்த நிறுவனம், 1,110ம் மேற்பட்ட கால்நடை மருத்துவர்களை பணியில் அமர்த்தி அவர்கள் மூலம் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை நன்கு பராமாிக்கத் தேவையான உதவிகளை செய்கிறது. இதுவும் தவிர, கால்நடைகளை வாங்குவதற்கு வங்கிக் கடன்களை விவசாயிகள் பெறத் தேவையான உதவிகளையும் இந்த நிறுவனம் செய்து வருகிறது. மேலும் சத்தான கால்நடை தீவன தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம் அதன்மூலம் நாளொன்றுக்கு சுமாராக 1000 டன் அளவிற்கு உற்பத்தி செய்து வருகிறது. சந்தோசா என்ற பெயரில் இதன் கால்நடை தீவனங்கள் விற்பனையாகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்தில் 100 டன் அளவில் உற்பத்தி செய்து வந்த 'மதூர் பசு ஆகார்’ என்ற கால்நடை தீவன ஆலையை கையகப்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஹட்சன் ஆலையிலிருந்துதான் மகாராஷ்டிராவு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் கால்நடை தீவனம் அனுப்பப்பட்டு வந்த நிலையில் போக்குவரத்து செலவை மிச்சப்படுத்த இது மகாராஷ்டிரா ஆலையை ஏற்றது. மேலும் கோவை மற்றும் ஒங்கோல் மாவட்டத்தில் ரூ.240 கோடி மதிப்பில் இரண்டு பசுமைத் திட்டங்கள் அமைத்து செயல்படுத்தி வருகிறது.

விருதுகள்[தொகு]

இந்நிறுவனமானது இதன் தரம் மற்றும் விற்பனை போன்ற காரணங்களால் பல்வேறு விருதுகளையும் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் பெற்றுள்ளது. மிகவேகமாக வளரும் பால்பொருள் ஆசிய நிறுவனம் என கௌரவிக்கப்பட்டது இந்நிறுவனமாகும். இந்திய அரசால் வழங்கப்படும் பால்பொருள் ஏற்றுமதிக்கான தங்க கோப்பையை பல வருடங்களாக பெற்று வருகிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சென்னை நகருக்குள் இடமாற்றம்". The Hindu Business Line. பார்க்கப்பட்ட நாள் 22 February 2015.
  2. Agro to give its dairy products a national push
  3. அர்ஜுன் அம்மா யாரு
  4. பால் கொள்முதல், archived from the original on 2019-10-18, பார்க்கப்பட்ட நாள் 2019-10-18
  5. பால் பதப்படுத்துதல், archived from the original on 2019-10-18, பார்க்கப்பட்ட நாள் 2019-10-18
  6. பால் வினியோகம், archived from the original on 2019-10-18, பார்க்கப்பட்ட நாள் 2019-10-18
  7. "Dairy product maker Hatsun Agro bags tops exporter award"
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹட்சன்_அக்ரோ_நிறுவனம்&oldid=3306202" இலிருந்து மீள்விக்கப்பட்டது