வுக்கிர் கோவில்
குனுங் உகிர் கோயில் (Gunung Wukir) அல்லது கங்கல் கோயில், அல்லது சிவலிங்கம் என்றும் அழைக்கப்படுகின்ற கோயில் ஒரு சிவன் இந்து கோயிலாகும். இக்கோயில் 8 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்டதாகும். இது இந்தோனேசியாவில் மத்திய ஜாவாவில் மாகேலாங் ரீஜென்சி, சலாம் துணைப்பிரிவு, கடிலுவி கிராமம், காங்கல் குக்கிராமத்தில் அமைந்துள்ளது.[1] இந்தக் கோயில் 732 ஆம் ஆண்டுக்கு முந்தையது, இது பண்டைய மாதரம் இராச்சியத்தின் முதல் கட்டட அமைப்பாகும், பண்டைய மாதரம் இராச்சியம் மத்திய ஜாவாவை 732 ஆம் ஆண்டு முதல் பத்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை ஆட்சி செய்தது.[2]
அமைவிடம்[தொகு]
ஒப்பீட்டளவில் நோக்கும்போது இந்த இடம் மிகவும் தொலைவான தூரத்தில் இருப்பதால், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பயணங்களில் இந்தக் கோயிலுக்குச் செல்வதான திட்டம் மிகவும் அரிதாகவே உள்ளது எனலாம். ஆனால் மத்திய ஜாவானிய மாதரம் இராச்சியம் உருவானது தொடர்பான நிகழ்வுகளுக்கு இது சில வரலாற்று முக்கியத்துவங்களைக் கொண்டு அமைந்துள்ளது.[2] இக்கோயில் உள்ளூர் குனுங் உகிர், உகிர் மலை அல்லது செதுக்கப்பட்ட மலை என்றவாறு பலவாறான பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. இது மவுண்ட் மெராபி எரிமலையின் மேற்கு சரிவுகளில் அமைந்துள்ளது. முண்டிலன் நகரிலிருந்து தென்கிழக்கே சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இந்த மலை அமைந்துள்ளது. யோக்யகர்த்தா-மாகேலாங் பிரதான சாலையில், செமன் சந்திப்பிலிருந்து மேற்கு நோக்கித் திரும்புவதன் மூலம் நங்லுவார் துணைப்பிரிவினை அடையலாம். அங்கிருந்து குனுங் உகிர் கோயிலை அடையலாம். காங்கலில் உள்ள கடிலுவி குக்கிராமம் நக்லுவார் சாலையுடன் இணைக்கப்பட்டுள்ள கிராமம் ஆகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 300 மீட்டர் உயரத்தில் உள்ள மலை பீடபூமிக்கு இங்கிருந்து நடந்து செல்ல முடியும்.
வரலாறு[தொகு]
தெற்கு மத்திய ஜாவாவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கோயில்களில் இந்தக் கோயில் மிகவும் பழமையானதாகக் கருதப்படுகிறது. இந்தக் கோயில் 1879 ஆம் ஆண்டில் கோயில் இடிபாடுகளுக்குள் கண்டுபிடிக்கப்பட்ட சங்கல் கல்வெட்டுடுடன் தொடர்புடையது ஆகும்.[2] கல்வெட்டின் படி, மாதரம் இராச்சியத்தைச் சேர்ந்த சஞ்சய மன்னனின் காலத்தில் 654 சாகாவில் (பொ.ச. 732) இந்த கோயில் நிறுவப்பட்டது.[1] இந்த கல்வெட்டில் மேடாங் இராச்சியம் அல்லது இந்து மாதரம் தொடர்பான ஏராளமான தகவல்கள் உள்ளன. இந்த கல்வெட்டின் அடிப்படையில், குனுங் உகிர் கோயில் முதலில் சிவலிங்கம் அல்லது குஞ்சாரகுஞ்சா என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று அறிய முடிகிறது.
கட்டிடக்கலை[தொகு]
கோயில் கட்டுமானம் 50 மீட்டர் x 50 மீட்டர் வளாகத்தில் அமைந்துள்ளது. கோயில் கட்டிடம் அன்டிசைட் கல்லால் ஆனது. இக்கோயில் ஒரு முதன்மைக் கோயிலைக் கொண்டுள்ளது. மேலும் மூன்று பெர்வார கோயில் எனப்படுகின்ற காப்பாளர் கோயில் அல்லது சிறிய துணைக் கோயில்களைக் கொண்டு அமைந்துள்ளது. கல்வெட்டு மட்டுமன்றி இக்கோயில் வளாகத்திற்குள் யோனி பீடம் மற்றும் புனித பசுவான, சிவனின் வாகனமாகக் கருதப்படுகின்ற நந்தியின் சிலை ஆகியவையும், மேலும் பல தொல்பொருள் கலைப்பொருட்களும் உள்ளன. கல்வெட்டின் படி, இந்த யோனி சிற்பமானது சிவபெருமானின் சின்னமான லிங்கத்தோடு இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க முடிகிறது. இருப்பினும் தற்போது அதனைக் காண முடியவில்லை.[1]
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "Candi Gunung Wukir". Balai Pelestarian Cagar Budaya Jawa Tengah (Indonesian). 13 பிப்ரவரி 2016 அன்று மூலம் பரணிடப்பட்டது. 22 October 2015 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
- ↑ 2.0 2.1 2.2 "Candi Gunung Wukir". Southeast Asian Kingdoms. 22 October 2015 அன்று பார்க்கப்பட்டது.
வெளி இணைப்புகள்[தொகு]
- கேண்டி குனுங் உகிர் பரணிடப்பட்டது 2016-02-13 at the வந்தவழி இயந்திரம் பாலாய் பெலெஸ்டேரியன் காகர் புடயா ஜாவா தெங்கா (in Indonesian)