உள்ளடக்கத்துக்குச் செல்

வீ கிம் வீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வீ கிம் வீ
சிங்கப்பூரின் நான்காவது அதிபர்
பதவியில்
2 செப்டம்பர் 1985 – 1 செப்டம்பர் 1993
பிரதமர்லீ குவான் யூ (1959-1990)
கோ சோ தோங்கு (1990-2004)
முன்னையவர்தேவன் நாயர்
பின்னவர்ஓங்கு தெங்கு சியாங்கு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1915-11-04)நவம்பர் 4, 1915
சிங்கப்பூர்
இறப்பு2 மே 2005(2005-05-02) (அகவை 89)
சிகுலப், சிங்கப்பூர்
இளைப்பாறுமிடம்மண்டாய் மாடம்
தேசியம்சிங்கப்பூரர்
துணைவர்கோ சோக் இயாங்கு
முன்னாள் கல்லூரிஔட்டுரம் பள்ளி
வேலைஇதழாளர்; தூதர்; அரசியலாளர்

வீ கிம் வீ (Wee Kim Wee, 4 நவம்பர் 1915 – 2 மே 2005), சிங்கப்பூரின் நான்காவது அதிபராக 1985 முதல் 1993 வரை பதவி வகித்தவர். குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே விட்டு பின்னர் பெருமைக்குரிய முனைவர் பட்டம் பெற்றவர். சிங்கப்பூரர்களால் 'மக்கள் அதிபர்' என்று அன்போடு அழைக்கப்பட்டவர்.[1]

இளமை[தொகு]

1915ஆம் ஆண்டு நவம்பர் நான்காம் தேதி. சிங்கப்பூரில் ஒரு சராசரி குடும்பத்தில் நான்காவதும் கடைசிப் பிள்ளையுமாகp பிறந்தார் கிம் வீ. இவரது தந்தை பெயர் வீ சூங் லாய் (Wee Choong Lay) ஓர் அலுவலகப்பணியாளர். தாயார் சூ லாய் ஹூ (Chua Lay Hua). மிக எளிமையான சூழலில் வறுமையில் வளர்ந்த வீ தனது தொடக்கக் கல்வியை 'பெர்ல்ஸ் ஹில்' தொடக்கப்பள்ளியில் பயின்றார். அவருக்கு எட்டு வயதானபோது அவரது தந்தை தொண்டைப் புற்று நோயால் காலமானார். மிகுந்த இன்னல்களுக்கிடையே ராஃபிள்ஸ் கல்விக் கழகத்தில் உயர்நிலை படிப்பை மேற்கொண்டார். ஆனால் குடும்ப வறுமை காரணமாக இரண்டு ஆண்டுகள் மட்டுமே தனது கல்வியைத் தொடர முடிந்தது. வீ கிம் வீ 1936 ஆம் ஆண்டு கோ சாக் இயாங்கு என்பவரை மணந்து கொண்டார். அவர்களுக்கு ஒரு ஆண், ஆறு பெண்கள் என ஏழு பிள்ளைகள் பிறந்தனர்.

பணிகள்[தொகு]

1930 ஆம் ஆண்டில் அவர் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் இதழில் அலுவலக உதவியாளராகவும் பின்னர் கடுமையாக உழைத்து விளம்பரப் பிரிவில் சேர்ந்தார். பின்னர் நிருபராகப் பதவி உயர்வு கிட்டியது. 1941இல் அவர் 'யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷன் (யு. பி .ஏ)' எனப்படும் அமெரிக்க செய்தி நிறுவனத்தில் சேர்ந்தார். சப்பானிய ஆட்சிக் காலத்தின் போது அந்த வேலையை அவரால் தொடர முடியவில்லை. சப்பானிய இராணுவ அமைப்பில் எழுத்தராக வேலை செய்தார். 1945ஆம் ஆண்டு சப்பானிய ஆட்சியில் இருந்து சிங்கப்பூர் விடுபட்டபோது அவர் மீண்டும் யுனைட்டேட் பிரஸ் அசோஸியேஷனில் சேர்ந்தார். அதில் நல்ல இதழியல் அறிவு கிடைத்ததால் மீண்டும் 1959ஆம் ஆண்டில் ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸில் சேர்ந்தார். இம்முறை அவருக்கு உதவி ஆசிரியர் பணி கிடைத்தது.[2].

அந்தக் காலகட்டத்தில் ஒரு நிருபராக இருந்து பல முக்கிய நிகழ்வுகளை சிங்கப்பூரர்களுக்கு கொண்டு வரும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. குறிப்பாக, 1966ஆம் ஆண்டு இந்தோனோசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே நிலவிய பதற்றமான அரசியல் சூழ்நிலையின் போது துணிவுடன் சகார்தாவுக்கு சென்று இந்தோனோசியாவின் முன்னாள் அதிபர் சுகார்த்தோவை நேரடியாகப் பேட்டி கண்டார். அடுத்த நாளே மூன்றாண்டு பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வர இந்தோனோசியா விரும்புகிறது என்ற தலைப்புச் செய்தியை உலகுக்குத் தந்தார்.

1973 ஆம் ஆண்டு வீ கிம் வீ பதவி ஓய்வு பெற இரண்டு ஆண்டுகளே இருந்தபோது அவரை மலேசியாவிற்கான தூதராக நியமித்தது சிங்கப்பூர் அரசாங்கம். மூன்று ஆண்டுகள் மட்டுமே நீடிக்க வேண்டிய அந்த பதவியில் வீ ஏழு ஆண்டுகள் நீடித்தார். அந்த ஏழு ஆண்டுகளில் இணக்கமான சிங்கப்பூர், மலேசிய உறவுகளுக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.

அந்தப்பணி முடிந்து 1980 ஆம் ஆண்டில் சப்பானுக்கான தூதராகவும், அதற்கு அடுத்த ஆண்டு கூடுதலாக கொரியாவுக்கான தூதராகவும் நியமிக்கப்பட்டார். அவருடைய தூதுப் பணி 1984ல் முடிவடைந்ததும் முன்னைய சிங்கப்பூர் ஒளிபரப்புக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். 1985 ஆகஸ்ட் 30ந்தேதி, சிங்கப்பூரின் நான்காவது அதிபராக நாடாளுமன்றம் அவரை தேர்ந்தெடுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://urssimbu.blogspot.com/2011/11/dr-wee-kim-wee-historical-legends.html#ixzz222DrtJs1
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2012-07-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வீ_கிம்_வீ&oldid=3850534" இலிருந்து மீள்விக்கப்பட்டது