வி. வி. வைரமுத்து
நடிகமணி வி. வி. வைரமுத்து | |
---|---|
பிறப்பு | காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் | 11 பெப்ரவரி 1924
இறப்பு | சூலை 8, 1989 கொழும்பு, இலங்கை | (அகவை 65)
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | இசை நாடக நடிகர் |
பெற்றோர் | வேலப்பா ஆச்சிக்குட்டி |
வாழ்க்கைத் துணை | இரத்தினம் சின்னையா (1944) |
பிள்ளைகள் | வசந்தா, லலிதா, ,வனிதா, சாரங்கன், மணிமேகலை |
வி. வி. வைரமுத்து (பெப்ரவரி 11, 1924 - சூலை 8, 1989) இலங்கையின் மிகச்சிறந்த இசை நாடகக் கலைஞராகக் கருதப்படுபவர். இவர் அரிச்சந்திரனாகத் தோன்றி நடித்த 'மயான காண்டம்' எண்ணற்ற தடவைகள் மேடையேற்றப்பட்ட இசை நாடகமாகும். தனது இனிய குரல் வளத்தால் பாடி, உருக்கமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.
வாழ்க்கைச் சுருக்கம்
[தொகு]யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறையைச் சேர்ந்த வேலப்பா, ஆச்சிக்குட்டி தம்பதியினருக்கு மகனாக வைரமுத்து பிறந்தார். காங்கேசன்துறை சைவ வித்தியாலயத்தில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்தார். 1932 இல் கரவெட்டி தேவரையாளி இந்துக் கல்லூரியில் 3 ஆம் வகுப்பில் சேர்ந்தார். பாடசாலைக் காலத்தில் அப்பூதியடிகள் என்ற இசை நாடகத்தில் அப்பூதியடிகளாக நடித்தார். 1938 ஆம் ஆண்டு தனது 14 ஆம் வயதில் சங்கீத கோவலன் என்னும் இசை நாடகத்துக்கு முதன் முதலாக ஆர்மோனியம் வாசித்துள்ளார். இசையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் 1941 தொடக்கம் 1942 வரை தமிழகம் சென்று மதுரையில் வித்துவான் செல்லப்பா பிள்ளையிடம் கருநாடக இசை பயின்றார். இரண்டு ஆண்டுகளில் சங்கீத வித்துவானாகவும், ஒரு நடிகனாகவும் நாடு திரும்பினார். 1944 இல் அண்ணாவியார் சின்னய்யாவின் மகள் இரத்தினம் என்பவரைத் திருமணம் புரிந்தார்.
கலைப்பணி
[தொகு]இலங்கை திரும்பியவருக்கு இரத்தினபுரியில் ஆசிரியப் பணி கிடைத்தது. நாடகக் கலையில் ஆர்வமுள்ள வைரமுத்து, அடிக்கடி விடுமுறை எடுத்து யாழ்ப்பாணம் வந்து மேடை நாடகங்களில் நடிப்பார். இதனால் இவரின் ஆசிரியர் வேலை பறி போனது. கலைப்பணி மீது கொண்ட பற்றால் ‘வசந்தகான சபா” என்னும் நாடக மன்றத்தை ஆரம்பித்துச் சரித்திர புராண இதிகாச நாடகங்களை நடித்து மக்கள் மனங்களில் பதியவைத்திருந்தார். மேடை நாடகங்களில் பெண் பாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பே வைரமுத்துவுக்கு முதலில் கிடைத்தது. சத்தயவான் சாவித்திரி நாடகத்தில் சாவித்திரியாக நடித்துப் பலரின் கவனத்தையும் ஈர்த்தார். சம்பூரண அரிச்சந்திரா நாடகத்தில் சந்திரமதியாகவும், ஸ்ரீவள்ளி நாடகத்தில் வள்ளியாகவும், நல்லதங்காள் நாடகத்தில் நல்லதங்காளகவும் பெண் பாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்.
1950 ஆம் ஆண்டு முல்லைத்தீவில் மேடையேற்றப்பட்ட சம்பூர்ண அரிச்சந்திரா நாடகத்திலேயே வைரமுத்து முதன் முதலாக அரிச்சிந்திரனாக நடித்தார். வைரமுத்துவின் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது மயான காண்டம் என்னும் இசை நாடகம். இது இலங்கை முழுவதும் 3000 இற்கும் அதிகமான தடவைகள் மேடையேற்றப்பட்டது.
இலங்கை வானொலியில் பல இசை நாடகங்களை வழங்கினார். மிருதங்கம், ஆர்மோனியம், வயலின், ஜலதங்கரம் போன்ற இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்ததோடு இலங்கை வானொலியில் கர்நாடக இசைக் கச்சேரிகளும் செய்திருக்கின்றார்.இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தனது பவளவிழாவின் போது இவர் பாடி நடித்த 'நந்தனார்' இசை நாடகத்தை ஒலிப்பதிவு செய்து இறுவட்டாக வெளியிட்டார்கள். இலங்கை வானொலியில் முதல் முதலாக வெளிவந்த நாட்டுக்கூத்து நாடகம் இதுவாகும்.
திரைப்படத்தில்
[தொகு]கலைஞர் ஏ. ரகுநாதன் தயாரித்த நிர்மலா திரைப்படத்தில் இவரது 'மயானகாண்டம்' இசை நாடகத்தின் பகுதியும் இணைக்கப்பட்டது.
இவர்பற்றிய ஆய்வு
[தொகு]முனைவர் காரை சுந்தரம்பிள்ளை இவர்பற்றிய ஆய்வு நூலாக ' நடிகமணி வி.வி. வைரமுத்து வாழ்வும் அரங்கும்' என்ற நூலை எழுதியுள்ளார்.
விருதுகள்
[தொகு]- கலையரசு சொர்ணலிங்கம் இவருக்கு நடிகமணி என்னும் பட்டத்தை 1960 ஆம் ஆண்டில் வழங்கிக் கௌரவித்தார்.
- 1964 ஆம் ஆண்டு அமைச்சர் எஸ். தொண்டமான் நாடகச் சக்கரவர்த்தி என்னும் பட்டம் வழங்கினார்.
- 1970 ஆம் ஆண்டு தந்தை செல்வா நடிப்பிசை மன்னன் எனும் பட்டத்தை வழங்கினார்.
- பேராசிரியர் கா. சிவத்தம்பி "நாடக தீபம்" என்னும் வி.வி வைரமுத்துவின் நினைவு நூலில் தமிழ் நாடகத்தின் மரணிக்காத குரல் என்று வைரமுத்து அவர்களுக்குப் புகழாரம் சூட்டியிருக்கின்றார்.
- பேராசிரியர் சு. வித்தியானந்தன் கலைக் கோமான் என்னும் விருதையும் பேராசிரியர் க. கைலாசபதி நவரச திலகம் என்னும் விருதையும், தென்னிந்திய தமிழ் மூதறிஞர் ம. பொ. சிவஞானம் நாடக வேந்தன் என்னும் விருதினையும், முன்னாள் வட்டுக்கோட்டைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசு அவர்கள் நடிப்பிசைச் சக்கரவர்த்தி என்னும் விருதினையும் பாசையூர் சென்றோக் படிப்பகத்தினர் முத்தமிழ் வித்தகர் என்னும் விருதினையும் வழங்கிக் கௌரவப் படுத்தியிருக்கின்றார்கள்.
- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 2004 ஆம் ஆண்டில் இவருக்கு “கலாநிதி” பட்டத்தை வழங்கிக் கௌரவித்திருந்தது.[1][2]
மறைவு
[தொகு]வைரமுத்து வானொலி நாடக ஒலிப்பதிவுக்காகக் கொழும்பு சென்ற போது மாரடைப்பால் 1989 சூலை 8 அன்று அன்று காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]வெளியிணைப்புகள்
[தொகு]- தமிழ் இசைநாடகக் கலைஞர் வி.வி.வைரமுத்து, அஸ்வின், யாழ்மண்
- இசை நாடகங்கள் பற்றிய குறிப்பு - சந்திரவதனா செல்வகுமாரன்
- நடிகமணி வி.வி.வைரமுத்து 20 ஆம் ஆண்டு நினைவு இன்று, கானா பிரபா, சூலை 8, 2009
- கவிஞர் முருகையன் & நடிகமணி வி.வி.வைரமுத்து நினைவுப் பகிர்வுகள்
- நடிகமணி வைரமுத்துவின் அரிச்சந்திர மயானகாண்டம், ஒலிக்கோப்பு
- வைரமுத்துவின் அரைச்சந்திர மயானகாண்டம், இசை நாடகம், காணொளியில்