விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மே 1, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மிதவைவாழிகள் அல்லது அலைவாழிகள் என்பவை நீர்நிலைகளிலோ நீர்பரப்புகளிலோ மிதந்து வாழும் உயிரினங்கள் ஆகும். இந்நீர்பரப்புகள் கடல்நீர், நன்னீர்ப் பரப்புகள் இரண்டுக்கும் பொதுவானதாகும். மிதவைவாழிகள் என வரையறுக்கப்படுவது அது வாழும் சூழ்நிலையை ஒத்து வரையறுக்கப்படுகின்றது. இவ்வரையரைக்கும் அதன் குணத்திற்கும் சம்பந்தமில்லை. இவை பெரும்பாலும் நீர்வாழ் பேருயிர்களுக்கு உணவாக பயன்படுகின்றன. இவற்றில் சிறிய பாக்டீரியாக்கள் முதல் பெரியதான சொறிமுட்டை வரை அடங்கியுள்ளன. மிதவைவாழிகள் பற்றற்று நீர்போன போக்கில் நகர்ந்துகொண்டே வாழக்கூடியது. இவைகளில் சில தனக்கு கொடுக்கப்பட்ட நகருறுப்புக்களை வைத்து நீரோட்டத்திற்கு செங்குத்தாக நகர்வதும் உண்டு. இவ்வாறு நீந்தும் உயிரானது சில நேரங்களில் பல தொலைவுகள் ஆழமாக நகரக்கூடியதாகவும் உள்ளது. இவைகளை மூன்றாக வகைப்படுத்துகின்றனர். மிதவைவாழியாக வாழும் காலத்தை வைத்தும், அதில் உள்ள உயிர்களின் தன்மைகளை வைத்தும் மற்றும் அதன் அளவுகளை வைத்தும் வரையறுக்கப்பட்டுள்ளன. இவை பெரும்பாலான மீன்களிற்கு உணவு ஆதலால் இவைகளைப் பயன்படுத்துவதால் மீன்வளர்ப்பில் அதிக லாபம் காண முடியும். மேலும்..


மாஞ்சேரி நாராயணன் நம்பியார் (1919-2008) கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். கேரள மாநிலம் பிரித்தானிய இந்தியாவின் மலபார் மாவட்டத்தில் பெருவமூர் என்ற ஊரில் கேளு நம்பியார் என்பவருக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார். நம்பியாரின் எட்டாவது வயதில் தந்தை இறக்கவே தமையனார் வசித்து வந்த உதகமண்டலத்துக்குக் குடி பெயர்ந்து 13 வயதிலேயே சென்னை நவாப் ராசமாணிக்கம் நாடகக் குழுவில் சேர்ந்து சேலம், மைசூர் எனச் சுற்றினார். ஆனாலும் நாடகங்களில் நடிக்க சந்தர்ப்பம் வரவில்லை. நாடகக் கம்பனியின் சமையலறையில் உதவியாளராகவே இருந்தார். நவாப் கம்பனியின் ராம்தாஸ் என்ற நாடகத்தை 1935 இல் பக்த ராம்தாஸ் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். இதன் படப்பிடிப்புக்காக பம்பாய் சென்றார்கள். நம்பியாரும் கூடவே சென்றார். இப்படத்தில் மாதண்ணா என்ற நகைச்சுவை வேடத்தில் நம்பியார் நடித்தார். இதுவே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். பல இடங்களிலும் சுற்றிவிட்டு தஞ்சாவூர் வந்தது நவாப்பின் நாடகக் குழு. 1944 இல் நவாப்பின் குழுவில் இருந்து விலகி டி. கே. கிருஷ்ணசாமியின் நாடகக் குழுவில் சேர்ந்து கவியின் கனவு நாடகத்தில் ராஜகுருவாக நடித்தார் நம்பியார். இதனையடுத்து ஜுபிட்டர் பிக்சர்சின் நான்கு படங்களுக்கு நம்பியார் ஒப்பந்தம் செய்யப்பட்டார். மேலும்..