விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/மார்ச் 13, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1987 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளின் உலகக் கிண்ணத்துக்கான நான்காவது போட்டியாகும். இப்போட்டிகள் இந்தியா, பாக்கித்தான் ஆகிய நாடுகளில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 8 முதல் நவம்பர் 8 வரை நடைபெற்றது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு வெளியில் உலகக் கிண்ணத்தை நடத்திய முதல் நாடுகளாக இவை பதிவாயின. இதில் அணிக்கு 60 ஓவர்கள் என்ற வழக்கமான விதி மாற்றப்பட்டு அணிக்கு 50 ஓவர்களாக குறைக்கப்பட்டன. இங்கிலாந்தைப் போலன்றி துணைக் கண்ட நாடுகளில் பகல் வேளை நீண்ட நேரம் நீடிக்காமை காரணமாகவே இந்த விதி மாற்றப்பட்டது. அத்துடன் 1983 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்ற 8 அணிகளும் இந்த போட்டித் தொடரிலும் விளையாடின. இதில் போட்டியை நடத்தும் இந்தியா, பாகித்தான் ஆகியன அரையிறுதி வரை முன்னேறினாலும் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற முடியாமல் போயின. கொல்கத்தா, ஈடன் கார்டன்ஸ் அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவுத்திரேலியா 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டி முதல் முறையாக உலகக் கிண்ணத்தை கைப்பற்றியது. மேலும்..


சு. தியடோர் பாஸ்கரன் தமிழக எழுத்தாளரும், தமிழ்த் திரைப்பட வரலாற்றாளர் மற்றும் சூழலியல் ஆர்வலரும் ஆவார். பாஸ்கரன் தாராபுரத்தில் பிறந்தவர். பாளையங்கோட்டை புனித ஜான் கல்லூரியில் இடைநிலை வகுப்புப் படித்து பின்னர் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியில் முதுகலை (வரலாறு) பட்டம் பெற்றார். 1964ல் இந்திய அஞ்சல் துறையில் சேர்ந்தார். அஞ்சல் துறையில் பணிபுரிந்து கொண்டே திரைப்பட வரலாற்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார். இந்தியத் திரைப்படத் தணிக்கை முறை பற்றி அவர் எழுதிய கட்டுரையை 1977ம் ஆண்டு அலிகாரில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயத்தில் வாசிக்கும் வாய்ப்பு அவருக்கு கிட்டியது. இக்கட்டுரையும் வேறு சிலவும் சேர்ந்து 1981ல் தி மெசேஜ் பியரர்ஸ் என்ற பெயரில் புத்தகமாக வெளிவந்தன. அதுவரை பயன்படுத்தப் பட்டிராத பல தரவுகளையும், ஆதாரங்களையும் பயன்படுத்தி தேசிய இயக்கத்தில் தமிழ்த் திரைப்பட மற்றும் நாடகத் துறையினரின் பங்கினை விவரித்த இந்த நூல் தமிழ்த் திரைப்பட வரலாற்றுத் துறையில் முன்னோடித் தன்மை வாய்ந்ததாக மதிக்கப்படுகிறது. அவருடைய இரண்டாவது நூல் தி ஐ ஆஃப் தி செர்பன்ட் 1996ல் வெளியானது. தமிழ்த் திரைப்படத் துறையைப் பற்றிய அறிமுக நூலான இதற்கு சிறந்த திரைப்படத்துறை புத்தகத்திற்கான தங்கத் தாமரை விருது வழங்கப்பட்டது. மேலும்..