விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 23, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டு உலோகத் திருமேனிகள் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்காலம் வரை தமிழ் நாட்டுக் கோயில் தேவைகளுக்காக உலோகங்களினால் உருவாக்கப்பட்ட கடவுட் சிலைகள் ஆகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட திருமேனிகளில் பல பல்வேறு படையெடுப்புக்களின்போது அழிந்து போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன. மேலும் பல, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களில் இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சில இந்தியாவின் பல அருங்காட்சியகங்களிலும், ஏனையவை தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள கோயில்களிலும் உள்ளன. உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன.


வாசிங்டன், டி. சி. (Washington, D.C.), முழுப்பெயர் வாசிங்டன், கொலம்பியா மாவட்டம் ஐக்கிய அமெரிக்காவின் தலைநகரமாகும். இப் பெயர் அந்நாட்டில் ஏற்பட்ட அமெரிக்கப் புரட்சியைத் தலைமையேற்று நடத்திய ராணுவத் தலைவர் ஜார்ஜ் வாசிங்டன் நினைவாக இடப்பட்டது. 2008ல் கொலம்பியா மாவட்டத்தில் 591,833 மக்கள் இருப்பதாக அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை கணித்துள்ளது. அருகிலுள்ள மேரிலாந்து, வர்ஜீனியா கவுண்டிகளை இணைத்த வாசிங்டன் பெருநகர பகுதியின் மக்கள் தொகை ஐந்து மில்லியனுக்கும் அதிகமாகும், இது ஐக்கிய அமெரிக்காவில் ஒன்பதாவது பெரியதாகும். 2007ல் மக்கள்தொகையில் 55.6% கறுப்பு இன மக்களும், 36.3% வெள்ளை இன மக்களும், 8.3% எசுப்பானிய (எல்லா இனமும்) மக்களும், 5% மற்றவர்களும் (அமெரிக்க பூர்வகுடிகள், அலாசுக்கா மக்கள், அவாய் மக்கள், பசிபிக் தீவு மக்கள் இதில் அடங்குவர்) 3.1% ஆசிய இன மக்களும், 1.6% கலப்பு இன மக்களும் வாழ்வதாக கணக்கிடப்பட்டனர்.