தமிழ்நாட்டு உலோகத் திருமேனிகள்
தமிழ்நாட்டு உலோகத் திருமேனிகள் ஏறத்தாழ ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்காலம் வரை தமிழ் நாட்டுக் கோயில் தேவைகளுக்காக உலோகங்களினால் உருவாக்கப்பட்ட கடவுட் சிலைகள் ஆகும். இவ்வாறு உருவாக்கப்பட்ட திருமேனிகளில் பல பல்வேறு படையெடுப்புக்களின்போது அழிந்து போய்விட்டன அல்லது காணாமல் போய்விட்டன.[1] மேலும் பல, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களில் இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டுவிட்டன. சில இந்தியாவின் பல அருங்காட்சியகங்களிலும், ஏனையவை தமிழ் நாட்டின் பல பகுதிகளிலும் அமைந்துள்ள கோயில்களிலும் உள்ளன.
இவை பல விலையுயர்ந்த உலோகங்களால் செய்யப்பட்டிருந்ததனால், இந்துக்கள் அல்லாதோர் தமிழ் நாட்டைக் கைப்பற்றிய காலங்களில், உருவச் சிலைகள் அவ்வுலோகங்களுக்காகக் கொள்ளையடிக்கப்பட்டன. சில சமயங்களில் அவை உருக்கப்பட்டு வேறு தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவுக்கு வெளியே கொண்டு செல்லப்பட்ட உலோகத் திருமேனிகள் இன்று உலகின் பல நாடுகளில் அமைந்துள்ள முக்கியமான அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் பல நூற்றுக்கணக்கான தமிழ்நாட்டுத் திருமேனிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
வரலாறு
[தொகு]சங்ககாலம் என அழைக்கப்படும் காலத்தில் உலோகங்களினால் கடவுள் சிலைகள் செய்யப்பட்டதற்கான சான்றுகள் எதுவும் கிடையா. அக்காலத்தில் மரச் சிற்பங்களும், கல்லாலான சிற்பங்களுமே பயன்பாட்டில் இருந்ததாகத் தெரிகிறது. பல்லவர் காலத்திலேயே கடவுள் சிலைகள் முதன் முதலில் உலோகத்தில் செய்யப்படன. பல்லவர் காலத்தில், முன்னர் முன்னணியில் இருந்த சமணம், புத்தம் ஆகிய மதங்களைப் புறந்தள்ளிவிட்டுச் சைவ சமயம் முன்னணிக்கு வந்தது. தமிழ் நாட்டில் பல கோயில்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலான கோயில்களில் கருவறைக்குள் வைக்கப்பட கடவுட் சிலை அல்லது இலிங்க உருவங்கள் கல்லால் ஆனவையாக இருந்தன. அரசர்களைப்போல், கடவுளரும் நகர்வலம் வருதல் போன்ற கடமைகளைச் செய்வதன் குறியீடாக, கடவுட் சிலைகளைக் கோயிலைச் சுற்றியும் நகருக்குள்ளும் ஊர்வலமாக எடுத்து வரும் வழக்கம் உருவானது. கற்சிலைகள் தூக்கிச் செல்வதற்கு வசதியாக அமையாததால், உலோகச் சிற்பங்கள் செய்யப்பட்டன.
பல்லவர் காலத்திலேயே கடவுட் திருவுருவங்களை உலோகத்தில் செய்யும் வழக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. அவர்களுக்குப் பின்னர் தமிழ் நாட்டை ஆண்ட சோழர் காலத்திலேயே தமிழ் நாட்டு உலோகப் படிமங்கள், சிறப்பின் உச்ச நிலையை எட்டின. இத்துறையில் உலகப் புகழ் பெற்ற பல அரிய கலைப் படைப்புக்கள் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டன. இக் காலத்திலேயே படிமங்கள் செய்வதற்கான முறைகளையும், அளவுகளையும், வெவ்வேறு கடவுளர்களின் உருவ இலக்கணங்களையும் விளக்கும் நூல்கள் தமிழ் நாட்டில் எழுந்தன. இவை சிலைகளுக்குரிய உறுப்புக்களின் அளவு விகிதங்கள் முதலியவற்றை விளக்கியதுடன், பல்வேறு வகையான கடவுளரின் உருவ அமைப்பு, இயல்புகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவனவாக அமைந்திருந்தன. தென்னாட்டில் தோன்றிய மானசாரம் எனும் சிற்பநூல், சிவாகமங்களுள் தலையாய காமிகாகமம் என்னும் ஆகமநூல் ஆகியவற்றில் படிமவியல் குறித்த விவரமான தகவல்கள் உள்ளன. இந்நூல்கள் விளக்கிய விதிகளின்படி செய்யப்பட்ட உருவச்சிலைகள் அழகும், எளிமையும் வாய்ந்தவையாக விளங்கின.
சோழர் காலத்துக்குப் பின்வந்த விசயநகரப் பேரரசுக் காலத்திலும், நாயக்க மன்னர் காலத்திலும் உலோகத் திருமேனிகள் செய்யப்பட்டன ஆயினும், சோழர் காலத் திருமேனிகளைப்போல் சிறப்புடையனவாக அவை அமையவில்லை. இன்றும் உலோகத் திருமேனிகள் தமிழ்நாட்டின் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல பகுதிகளில் உருவாக்கப்படுகின்றன. இவை உள்நாட்டுக் கோயில்களின் தேவைகளை நிறைவுசெய்வதுடன், வெளிநாட்டுக் கோயில்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இத்தகைய சிலைகளைச் செய்பவர்கள் ஆகமங்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளையே கடைப்பிடித்து வருகின்றனர். இவை தவிர, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும், பிற இடங்களிலும் வைக்கக்கூடியதாகக் காட்சிப் பொருள்களாகவும் இவை உருவாக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகளிடமும் இவற்றுக்கு நல்ல மதிப்பு உண்டு.
உலோகங்கள்
[தொகு]உலோகத் திருமேனிகள், பொன், வெள்ளி, செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் போன்ற உலோகங்களினால் செய்யப்படுகின்றன. பொன் விலையுயர்ந்த உலோகமாகையால் அதனால் செய்யப்பட்ட சிலைகளும் மிகவும் குறைவு. அவ்வாறு இருந்தவையும், அவ்வப்போது நிகழ்ந்த படையெடுப்புக்களின்போது கொள்ளையிடப்பட்டன. தற்காலம் வரை தப்பியிருக்கும் பெரும்பாலான தெய்வச் சிலைகள் செம்பு, வெண்கலம், பஞ்சலோகம் ஆகிய உலோகங்களில் செய்யப்பட்டவையே. பஞ்சலோகமே தெய்வச்சிலைகள் செய்வதற்குப் பெரிதும் விரும்பப்படுகிறது.[1] பஞ்சலோகம் என்பது, தங்கம், வெள்ளி, செம்பு, ஈயம், பித்தளை ஆகிய ஐந்து உலோகங்களைக் குறிப்பிட்ட அளவுவிகிதங்களில் கலந்து உருவாக்கப்படுகின்றது.[2] கோயில் தேவைகளுக்காகச் செய்யப்படும் கடவுட் சிலைகளை விடக் காட்சிப் பொருட்களாகச் செய்யப்படும் உலோகக் கடவுட் சிலைகள் விலை மலிவான பித்தளை போன்ற உலோகங்களாலும் செய்யப்படுகின்றன. தற்காலத்தில் இரும்பை அடிப்படையாகக் கொண்ட மலிவான கலப்புலோகங்களில் சிலைகளைச் செய்து, செப்பு நிறம், பொன்னிறம் போன்ற நிறப்பூச்சுக்களைப் பூசியும் விற்பனை செய்கின்றனர். இவற்றில் பெரும்பாலானவை கலைத்தரம் கொண்டவையாக இருப்பதில்லை.
குறிப்புக்கள்
[தொகு]உசாத்துணை நூல்கள்
[தொகு]- நவரத்தினம், க.; தென்னிந்திய சிற்ப வடிவங்கள்; குமரன் புத்தக இல்லம்; கொழும்பு; 2006 (மீள் பதிப்பு); (முதற் பதிப்பு-1941).
- வைத்திலிங்கன், செ.; சிற்பக்கலை, மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்; 2003.
- வெங்கடசாமி, மயிலை. சீனி., தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்; நாம் தமிழர் பதிப்பகம்; சென்னை; 2003.