விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/நவம்பர் 13, 2011

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்பது சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில் இருந்த மேலவையைக் குறிக்கும். பிரித்தானிய அரசு, இந்தியக் கவுன்சில் சட்டம் (1861) ஐ இயற்றியதன் மூலம் இந்த அவையை 1861இல் உருவாக்கியது. ஆரம்பத்தில் சென்னை ஆளுனருக்குப் பரிந்துரை வழங்கும் அவையாகவே இது இருந்து வந்தது. 1920-1937இல் சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை வழக்கில் இருந்தபோது மாகாணத்தின் ஓரங்க சட்டமன்றமாக இது செயல்பட்டது. 1937இல் மாநிலத் தன்னாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்டு, சட்டமன்றம் ஈரங்க அவையாக மாறிய போது அதன் மேலவையாகச் செயல்பட்டது. 1950இல் இந்தியா குடியரசாகிய போது உருவான சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திலும் இது மேலவையாகவே தொடர்ந்தது. 1986இல் எம். ஜி. இராமச்சந்திரனின் ஆட்சியில் இந்த அவை நீக்கப்பட்டு தமிழ்நாடு சட்டமன்றம் ஓரங்க அவையாக மாறியது. 2010இல் இந்த அவையை மீண்டும் தோற்றுவிக்க இந்திய நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டு அதற்கான திட்டங்கள் முடுக்கி விடப்பட்டன. ஆனாலும் 2011ல் இம்மீட்டுருவாக்க முயற்சி தற்போதைய ஜெ. ஜெயலலிதா அரசால் கைவிடப்பட்டது. மேலும்..


கரோலஸ் லின்னேயஸ் (1707-1778) சுவீடன் நாட்டைச் சேர்ந்த, உயிரினங்களைப் பற்றி ஆய்வு செய்த முன்னோடி அறிவியலாளர். இவர் தாவரவியலாளராகவும், விலங்கியலாளராகவும், மருத்துவராகவும் திகழ்ந்தார். புதிய, தற்கால அறிவியல் வகைப்பாட்டு முறைக்கும், பெயர்முறைக்கும் அடிப்படையை உருவாக்கியவர் இவரே. தற்கால சூழிணக்கவியல் அல்லது சூழிசைவு இயலின் முன்னோடிகளில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். திணை, வகுப்பு, வரிசை, பேரினம், இனம் என படிநிலைகள் இவரது வகைப்பாட்டில் அமைந்திருந்தன. திணைகள் மேலும் தாவரங்கள்), விலங்குகள் என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன. மேலும்...