விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/செப்டம்பர் 26, 2010

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதுருப் போர் (கிபி 624) இசுலாமிய வரலாற்றில் முஸ்லிம்கள் இசுலாத்தின் விரோதிகளை இராணுவ ரீதியாக எதிர்த்துப் போராடிய முதலாவது போர் ஆகும். இந்தப் போர் தெற்கு அரேபியாவின் (இன்றைய சவுதி அரேபியா) எச்சாஸ் பகுதியில் இசுலாமிய நாட்காட்டியின் படி 2-ஆம் ஆண்டு ரமழான் பிறை 17-ல் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. மெக்காவில் இசுலாத்தை எதிர்த்த குறைசியர்களுடன் இடம்பெற்ற இப்போர் முகம்மது நபி அவர்களுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்கள் பதுருப் போரில் மிகக் குறைந்த எண்ணிக்கையோடும் குறைந்த ஆயுதப் பலத்தோடும் வெற்றி பெற்றமைக்கான அடிப்படைக் காரணம் அவர்களிடம் காணப்பட்ட ஈமானிய பலமும் இறைவனின் உதவியுமே என இசுலாமிய வரலாற்றில் குறிக்கப்பட்டுள்ளது. குர்ஆனில் விவரிக்கப்பட்ட ஒரு சில சமர்களில் இதுவும் ஒன்றாகும். முகம்மதுவின் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட படையினர் மெக்காவின் படையினரை ஊடறுத்து பல குறைசித் தலைவர்களைக் கொன்றனர். மெக்காவில் உள்ள எதிரிகளை அழிப்பதற்கு இப்போரை அன்றைய முஸ்லிம்கள் ஒரு திருப்புமுனையாகக் கண்டனர். மேலும்..


1876-78 ஆம் ஆண்டுகளில் பிரித்தானிய இந்தியாவின் ஒரு பகுதியாகிய சென்னை மாகாணத்தை கடும் பஞ்சம் பீடித்தது. இப்பஞ்சம் சென்னை மாகாணப் பெரும் பஞ்சம் என்று அழைக்கப்படுகிறது. இரு ஆண்டுகள் நீடித்த இப்பஞ்சம், முதலாண்டில் தென்னிந்தியப் பகுதிகளைத் (சென்னை, மைசூர், பம்பாய், ஐதராபாத்) தாக்கியது. இரண்டாம் ஆண்டில் வட இந்தியாவில் ஐக்கிய, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளுக்கும் பரவியது. இரு ஆண்டுகளில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். இப்பஞ்சத்தின் விளைவாக பிரித்தானிய அரசு பஞ்சக் குழுமத்தைத் தோற்றுவித்து பஞ்ச விதிகளை வகுத்தது. நிவாரணம் பெறுவோர் கடுமையான விதிகளுக்குட்படுத்தப் பட்டனர். முதியோர், உடல் ஊனமுற்றோர், குழந்தைகளுக்கு மட்டும் இலவச உணவு வழங்கப் பட்டது. ஏனையோருக்கு கடுமையான உடலுழைப்புக்கு பதிலாகவே நிவாரணமளிக்கப்பட்டது. நிவாரணக் கூலி பெற்றவர்களைக் கொண்டு பல கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை நகரின் அருகில் உள்ள பக்கிங்காம் கால்வாய் இவ்வாறு கட்டப்பட்டதே. மேலும்