விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஏப்ரல் 02, 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனடா (Canada) வட அமெரிக்க கண்டத்தில் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு ஆகும். வடக்கே ஆர்க்டிக் பெருங்கடலும், கிழக்கே அட்லாந்திக் பெருங்கடலும், தெற்கே அமெரிக்க ஒன்றியமும், மேற்கே பசிபிக் பெருங்கடலும், அமெரிக்க ஒன்றிய நாடுகளின் அலாஸ்கா மாநிலமும் எல்லைகளாக அமைகின்றன. கனடா பத்து மாகாணங்களையும் மூன்று ஆட்சி நிலப்பகுதிகளையும் கொண்ட கூட்டமைப்பு ஆகும். ஒட்டாவா கனடாவின் தலைநகரம் ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய இரண்டும் கனடாவின் ஆட்சி மொழிகளாக இருக்கின்றன. 1999 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட நுனாவுட் ஆட்சி நிலப்பகுதியில் இனுக்டிடூட் மொழியும் ஆட்சி மொழியாகும்.


யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. படத்தில் பனம் பணியாரம் காட்டப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன.