விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/ஆகத்து 26, 2012

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும் வர்த்தகத் தலைநகரமும் ஆகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நகரங்களில் ஒன்றன்று. பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கி. பி. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. கொழும்பில் சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் அண்ணளவாகச் சம அளவில் வாழ்கின்றனர். கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற சிங்கள மொழிப் பெயரிலிருந்து மருவியதாகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பசை நினைவுகூரும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆகக் காணப்பட்டது. மேலும்...


டெங்கு காய்ச்சல் அல்லது எலும்பு முறிவுக் காய்ச்சல் என்பது மனிதர்களிடையே டெங்குத் தீ நுண்மத்தால் ஏற்படும் ஒரு அயனமண்டலத் தொற்றுநோய் ஆகும். தீ நுண்மத்தால் பாதிக்கப்பட்ட ஏடிசு வகைக் கொசுக்களால் இந்நோய் பரவுகிறது. கடும்காய்ச்சலுடன் கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, தோல் நமைச்சல் போன்ற உணர்குறிகள் இந்நோயினால் ஏற்படும். தொற்றுநோய் தீவிரமடைந்த நிலையில் உயிருக்குத் தீங்கு விளைவிக்கும் டெங்கு குருதிப்போக்குக் காய்ச்சல் மற்றும் டெங்கு அதிர்ச்சிக் கூட்டறிகுறி என்பன உண்டாகும். டெங்குத் தீநுண்மத்தைக் காவும் கொசு ஒருத்தரைக் கடிக்கும்போது அக்கொசுவின் உமிழ்நீருடன் தோற் பகுதிக்கு தீநுண்மம் செல்கின்றது. ஒருவருக்கு நான்கு முறைகள் இக்காய்ச்சல் வரக்கூடும். வடக்கு ஆர்ஜென்டினா, வடக்கு அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், பார்படோஸ், பொலிவியா, பெலிஸ், பிரேசில், கம்போடியா, கொலம்பியா, கோஷ்ட ரிக்கா, கியூபா, பிரான்ஸ், கோடேமலா, குயான, ஹைடி, இந்தியா, இந்தோனேசியா, இலங்கை. போன்ற வறண்ட, உலர் வெப்ப வலய நாடுகளில் இந்த நோய் பெரும்பாலும் பரவுகின்றது. குழந்தைகளிலும் சிறுவர்களிலும் கடுமையான நோய் உண்டாகின்றது. ஆண்களைக் காட்டிலும் கூடுதலாக பெண்கள் பாதிப்படைகின்றனர். நீரிழிவு, ஈழை நோய் போன்ற நீண்டகால நோய்கள் உள்ளவருக்கு இந்நோய் மிகவும் உயிருக்கு தீங்குவிளைவிக்கக் கூடிய பாதிப்பை உண்டாக்கும். மேலும்...