விக்கிபாசா
விக்கிபாசா இயக்க எடுத்துக்காட்டு | |
உருவாக்குனர் | மைக்ரோசாஃப்ட் |
---|---|
தொடக்க வெளியீடு | 18.10.2010 |
அண்மை வெளியீடு | 1.0.1 / அக்டோபர் 25, 2010 |
மொழி | ஜாவா, பி.எச்.பி |
இயக்கு முறைமை | விண்டோசு, லினக்சு |
உரிமம் | அப்பாச்சே 2 உரிமம் பெற்றது. மேலும் பகுதி GPL V2 |
இணையத்தளம் | www.WikiBhasha.org |
விக்கிபாசா (ஆங்கிலம்: Wikibhasha ; கிரந்தம்: விக்கிபாஷா) என்பது நிகழ்நிலைக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவிற்கானப் பன்மொழித் தகவற்சேர்ப்புக் கருவியாகும். இது ஏற்கனவே உள்ள விக்கிப்பீடியா கட்டுரைகளைப் பிற மொழிகளில் மொழிபெயர்க்க உதவும் ஒரு கருவியாகும். இதன் இடைமுகமானது மொழிபெயர்க்கப் படவேண்டிய கட்டுரையை இடப்பக்கமும் மொழிபெயர்க்கப்படப் போகும் மொழியின் கட்டுரை இடப்பக்கமும் காட்டப்படும். இதன் பின்னர் இயந்திர மொழிபெயர்ப்பு தொடங்கப்படும். மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு இலக்கு மொழிக்குக் கட்டுரையைப் பதிவேற்றலாம். புதிய கட்டுரையைப் பதிவேற்றுவது மட்டுமின்றி ஏற்கனவே உள்ள கட்டுரைகளையும் மேம்படுத்தலாம்.[1][2]
விக்கிபாசா 30க்கும் மேற்பட்ட மொழிகளில் தகவல்களை உருவாக்கப் பயன்படுகிறது; குறைந்த உள்ளடக்கம் கொண்ட விக்கிப்பீடியாக்களுக்கு அதிக அளவில் கட்டுரைகளைக் கொண்டு சேர்க்க உதவலாம் என கருதப்படுகிறது. ஒரு தகவலின் படி மைக்ரோசாஃப்ட் ஆய்வகமும் விக்கிமீடியா நிறுவனமும் இணைந்து விக்கிப்பீடியா பயனர் சமூகம் பயனடைய இதனை அரபி, இடாய்ச்சு, இந்தி, சப்பானிய மொழி, போர்த்துக்கீசியம், எசுப்பானியம் போன்ற மொழிகளில் அறிமுகப்படுத்தின. பாசா (பாஷா) எனும் சொல் வட இந்திய மொழிகளில் மொழி எனும் பொருள் தருவதாகும்.
இக்கருவி தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்ட கூகுள் தமிழாக்கக் கருவியைப் போன்றதேயாகும். விக்கிபாசா விக்கிப்பீடியா இடைமுகப்பிலேயே மொழிபெயர்ப்புப் பணியைச் செய்கிறது. அதே வேளையில் கூகுள் தமிழாக்கக் கருவி தனியாக ஒரு இடைமுகப்பிற்கு நம்மை இட்டுச் சென்று அங்கு மொழிபெயர்ப்புப் பணியைச் செய்ய வைக்கிறது. இதற்கு கூகுள் கணக்கு தேவைப்படுகிறது.
இயக்கம்
[தொகு]இதனை விக்கிப்பீடியா பயனர்நிரலாக விக்கிப்பயனர்கள் "என் விருப்பத்தேர்வுகள்" மூலம் இணைத்துக்கொள்ளலாம். மாற்றாக உலாவியில் விக்கிபாசா இணையதளத்திலிருந்து புத்தகக்குறிநிரலாக இறக்கிக் கொள்ளலாம்.தற்போது ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்கு மட்டுமே மொழிமாற்றம் செய்யவியலும். இடைமுகம் ஆங்கிலத்தில் உள்ளது. இருப்பினும் இந்தக் கட்டற்ற பொதி இரு மொழிகளில் தன்மயமாக்கப்பட்டுள்ளது.
- விக்கிபாசாவை ஓர் விக்கிப்பீடியா பக்கத்திலிருந்து அழைத்து விக்கிப்பீடியா பக்க உள்ளடக்கத்தை எந்த மொழியில் மொழிமாற்றம் செய்ய வேண்டும் என தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இரு பத்திகளில் காட்டப்படும் மூலத்தையும் இலக்கு (வரைவு) மொழிமாற்றப் பக்கத்தையும் ஒப்பிட்டு வேண்டிய மாற்றங்களைச் செய்யலாம். வலது பத்தியின் மேலுள்ள மொழிமாற்ற மேல்திறப்பு தேர்வினை தேர்ந்தெடுத்திருந்தால் ஒவ்வொரு வரியாக காட்டப்பட்டு அதற்கான இலக்கு மொழிமாற்ற தேர்வுகள் காட்டப்படும். இவற்றில் பொருத்தமானவொன்றைத் தேர்ந்தெடுக்கலாம்; அல்லது மாற்றங்கள் செய்யலாம். பின்னர் "அனுப்பு" பொத்தானை அழுத்தினால் மாற்றங்கள் இலக்கு வரைவுப் பக்கத்தில் சேர்க்கப்படுவதுடன் மைக்ரோசாட்டின் மொழிமாற்றப்பொறிக்கும் அனுப்பப்படும். மொழிமாற்ற மேல்திறப்பு தேர்வினை செயலிழக்கச்செய்யுமாறு தேர்ந்திருந்தால் தரவுகள் மூன்றாம்நபர் தளத்திற்குச் செல்லாது.
- இரண்டாம் நிலையில் "இயற்று" (Compose) பொத்தானை அழுத்தினால் இடது பத்தியில் முதல்நிலையில் திருத்தப்பட்ட வரைவு இலக்குப் பக்கமும் வலது பத்தியில் இலக்கு மொழி விக்கிப்பீடியாவில் ஏற்கனவே (இருப்பின்)உள்ள பக்கமும் காட்டப்படும். இதனால் முந்தைய ஆக்கங்கள் அழிக்கப்பட்டு புதிய உள்ளடக்கம் எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது. வேண்டும் இடங்களில் இடது புறத்திலிருந்து வரிகளை வலது பக்க கட்டுரைப் பக்கத்தில் இணைக்கலாம். மேலும் விக்கி வடிவமைப்பு தவறுகளையும் நீக்கலாம் (வலது பத்தியின் மேலுள்ள "விக்கிவடிவத்தைக் காட்டு" தேர்வாகியிருக்க வேண்டும்.)
- மொழிமாற்றம் மனநிறைவடைந்த நிலையில் மூன்றாம் பொத்தானை அழுத்தி விக்கிப்பீடியாவில் பதிவேற்றலாம்.
இரு பத்திகளுக்கும் மேலே உள்ள தத்தலில் இதுவரை பார்த்த பக்கங்கள் பட்டியலிடப்படுவதால் எளிதாக முன்பு செயலாற்றிய பக்கத்திற்குச் செல்லலாம். தவிர விக்கிப்பீடியாவில் தொடர்புள்ள பக்கங்களைத் தேடவும் வசதி உள்ளது.
நிரல்கள் கிடைக்குமிடம்
[தொகு]தற்போது விக்கிபாசா சோதனைப் பதிப்பானது மீடியாவிக்கி நீட்சியாக அப்பாச்சே 2 உரிமத்தின் கீழும் பகுதியாக GPL v2 உரிமத்தின் கீழும் கிடைக்கிறது.
புத்தகக்குறியாக கிடைக்குமிடம்
[தொகு]இது புத்தகக்குறியாக விக்கிபாசா தளத்தில் பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம் கிடைக்கிறது.
பயனர் கையேடு
[தொகு]விக்கிபாசாவின் பயனர் கையேடு இங்கு பரணிடப்பட்டது 2010-10-25 at the வந்தவழி இயந்திரம் கிடைக்கிறது.
குறைபாடுகள்
[தொகு]- ஆங்கிலத்திலிருந்துத் தமிழிற்குக் கட்டுரைகளை மொழிபெயர்த்துப் பதிவேற்றும் அளவுக்கு இக்கருவி இன்னும் வளரவில்லை. தற்போதைக்கு இந்திய மொழிகளில் இக்கருவி இந்தியை மட்டுமே ஆதரிக்கிறது.
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிபாசா அதிகாரப்பூர்வ இணையதளம் பரணிடப்பட்டது 2010-10-21 at the வந்தவழி இயந்திரம்