வாக்காளர் குழு (ஐக்கிய அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2008 அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவுகளைக் காட்டும் வாக்காளர் குழு வரைபடம். மக்களாட்சி வேட்பாளர் பராக் ஒபாமா 28 மாநிலங்களிலும் வாசிங்டன், டி. சி.யிலும் (நீலத்தில் காட்டப்பட்டுள்ளது) வென்று 365 வாக்காளர் வாக்குகளைப் பெற்றார். குடியரசு வேட்பாளர் ஜான் மக்கெய்ன் 22 மாநிலங்களில் வென்று (சிவப்பில் காட்டப்பட்டுள்ளது) 173 வாக்காளர் வாக்குகளைப் பெற்றார். நெப்ராஸ்கா மாநிலத்தின் வாக்காளர் வாக்குப் பிரிந்து நெப்ராஸ்காவின் மாநில அளவிலான இரண்டு வாக்குகள் ஒபாமாவிற்கும் மற்ற நான்கு வாக்குகளும் மக்கெய்னுக்கும் கிடைத்தன.

ஐக்கிய அமெரிக்காவின் வாக்காளர் குழு (Electoral College) ஒவ்வொரு மாநிலத்தாலும் தேர்ந்தெடுக்கப்படும் வாக்காளர்கள் ஆகும்்; இவர்களே முறையாக குடியரசுத் தலைவரையும் துணைக் குடியரசுத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார்கள். 1964 முதல் ஒவ்வொரு குடியரசுத் தலைவர் தேர்தலிலும் 538 வாக்காளர்கள் பங்கேற்றுள்ளனர். [1] அமெரிக்க அரசியலமைப்பின் பகுதி இரண்டு, விதி இரண்டில் வாக்காளர்களை தேர்ந்தெடுக்கும் முறை விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ள வாக்காளர்களின் எண்ணிக்கையை அரசியலைப்பு விவரிக்கிறது. இருப்பினும் இவர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மாநில சட்டமன்றங்களே தீர்மானிக்கின்றன. அமெரிக்க ஆட்சிப்பகுதிகளுக்கு இந்த வாக்காளர் குழுவில் உறுப்புமை இல்லை. வாக்காளர் குழு மறைமுகத் தேர்தலுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். இதற்கு எதிராக கீழவை உறுப்பினர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

பெரும்பாலான மாநிலங்களில் எந்தக் கட்சி கூடுதலான வாக்குகளைப் பெறுகிறதோ அதற்கே அம்மாநிலத்தின் அனைத்து வாக்குகளும் வழங்கப்படுகின்றன. ஆனால் மேய்னும் நெப்ராஸ்காவும் மட்டும் வேறுபட்டு மாநில அளவில் வென்ற கட்சிக்கு இரண்டு வாக்குகளும் ஒவ்வொரு சட்டமன்ற மாவட்டத்திற்கும் ஒரு வாக்கும் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் மாநிலத் தலைநகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட வாக்காளர்கள் திசம்பரில் இரண்டாவது புதன்கிழமைக்கு அடுத்த திங்கட்கிழமையில் கூடி குடியரசுத் தலைவருக்கும் துணை குடியரசுத் தலைவருக்கும் தனித்தனியே வாக்குகளைப் பதிகின்றனர். அமெரிக்க அரசியலமைப்பின்படி வாக்காளர் குழு உறுப்பினர்கள் எவருக்கும் வாக்களிக்கலாம் என்றபோதும் 24 மாநிலங்களில் தேர்தலில் தாங்கள் உறுதியளித்த வேட்பாளருக்கன்றி துரோகம் இழைக்கும் வாக்காளர்களை தண்டிப்பதற்கான சட்டங்கள் உள்ளன.[2]

சனவரியின் துவக்கத்தில் அனைத்து வாக்காளர் குழு வாக்குகளின் எண்ணிக்கையை மேலவையின் அவைத்தலைவர் என்ற பொறுப்பில் அமர்வு துணைக் குடியரசுத் தலைவர் வெளிப்படுத்தி (குடியரசுத் தலைவர் தேர்தலுடனேயே நடந்த கீழவை தேர்தல்களில் வென்ற உறுப்பினர்களுடன் புதியதாக அமைந்த) கீழவை மற்றும் மேலவை இணைந்த சட்டமன்றக் கூட்டு அமர்வில் அறிவிக்கிறார்.

எந்தவொரு வேட்பாளருமே பெரும்பான்மை பெறாவிடில், (தற்போது குறைந்தது 270), அரசியலமைப்பின் பன்னிரெண்டாவது திருத்தத்தின்படி அமைந்த விதிகளுக்கிணங்க குடியரசுத் தலைவர் தீர்மானிக்கப்படுகிறார். குறிப்பாக, கீழவை உறுப்பினர்களால் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு வாக்கே உண்டு. துணைக் குடியரசுத் தலைவர் மேலவை (செனட்) உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். இங்கும் ஒவ்வொரு செனட்டருக்கும் ஒரு வாக்கு. இந்த முறையில் காங்கிரசு இருமுறை குடியரசுத் தலைவரை, 1800இலும் 1824இலும், தேர்ந்தெடுத்துள்ளது.

துவக்கநாளன்னியில் குடியரசுத் தலைவர் தீர்மானிக்கப்படாவிடின் துணைக் குடியரசுத் தலைவர் பொறுப்பு வகிப்பார். இருவருமே தேர்ந்தெடுப்பப்படாத நிலையில் காங்கிரசு யார் பொறுப்பேற்க வேண்டும் என்று இருபதாம் அரசியலமைப்பு சட்டத்திருத்தத்தின்படி தீர்மானிக்கும்.

துரோகமிழைக்கும் வாக்காளர் குழுவினர், பிணக்குகள், மற்றும் பிற சிக்கல்கள் எழாத நிலையில் மேற்கூறிய திசம்பர், சனவரி நிகழ்வுகள் பெரும்பாலும் முறையான செயல்களே; வெற்றியாளர் மாநிலத்திற்கு மாநிலம் பெறும் மக்களின் வாக்குகளைக் கொண்டே தீர்மானிக்கலாம்.

மேற்கோள்கள்[தொகு]

  1. வாக்காளர்களின் மொத்த எண்ணிக்கை வாக்களிக்கக் கூடிய காங்கிரசின் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் (கீழவையில் 435 உறுப்பினர்கள், மேலவையில் 100 உறுப்பினர்கள்) வாசிங்டன், டி. சி.க்கான மூன்றும் சேர்ந்தது. மேலும் பார்க்க: Article Two of the United States Constitution#Clause 2: Method of choosing electors and the Twenty-third Amendment to the United States Constitution
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2008-09-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080906231513/http://www.fairvote.org/e_college/faithless.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]