வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/15

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறப்புக் கட்டுரை



மதுரை சுல்தானகம் (மாபார் சுல்தானகம்) பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசு. ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் ஆவார். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இசுலாமியப் படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே இசுலாமிய அரசு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268 – 1308) இறப்பிற்குப் பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இசுலாமிய வரலாற்றாளர்கள் வீரபாண்டியன் அந்தப் போரில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் என்று கூறுகின்றனர். இதனால் கஃபூரின் படைகள் 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. இதன் பின்னால், பாண்டிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து இடம்பெற்றது. மேலும் இருமுறை டெல்லி சுல்தானகப் படைகள் மதுரையைச் சூறையாடின. உலூக்கான் மதுரையை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்தார். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது.