வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயன்பாடு‎[தொகு]

வரலாறு சிறப்புக் கட்டுரை துனைப் பக்கத்தின் வடிவமைப்பு - வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/வடிவமைப்பு.

சிறப்புக் கட்டுரைகள் வரிசை[தொகு]

வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/1
சிறப்புக் கட்டுரை



map of Indus vally

சிந்துவெளி நாகரிகம், எகிப்து, மெசொப்பொத்தேமியா, சீனா போன்ற இடங்களில் தழைத்தோங்கியிருந்த, உலகின் மிகப் பழைய நாகரிகங்களையொத்த தொன்மையான ஒரு நாகரிகமாகும். இன்றைய பாகிஸ்தானிலுள்ள சிந்து நதியை அண்டித் தழைத்தோங்கியிருந்த இந்த நாகரிகம் மிகப் பரந்ததொரு பிரதேசத்தில் செல்வாக்குச் செலுத்திவந்தது. கி.மு 3000 க்கும் கி.மு 2500 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் உச்ச நிலையிலிருந்த இந்த நாகரிகம், இன்னும் தெளிவாக அறியப்படாத ஏதோவொரு காரணத்தினால் சடுதியாக அழிந்து போய்விட்டது. இங்கு வாழ்ந்த மக்களினம் பற்றியோ, அவர்கள் பேசிய மொழிகள் பற்றியோ ஆய்வாளர்களிடையே கருத்தொற்றுமை கிடையாது. தொல்லியல் ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான முத்திரைகள் காணப்படுகின்ற, அவர்களுடைய மொழியை எழுதப்பயன்படுத்திய குறியீடுகளையும் எவரும் இன்றும் வாசித்தறிய முடியவில்லை. சிந்துவெளிப் பகுதியில் கி.மு 6000 ஆண்டளவிலேயே மக்கள் குடியேற்றங்களும், சிறிய நகரங்களும் இருந்தததாகக் கூறப்படுகின்றது. பலுச்சிஸ்தானிலுள்ள மெஹெர்கர் பகுதி, ஹரப்பாவின் அடியிலுள்ள படைகள் என்பன இக்கூற்றுக்கான சான்றுகளாகும். எனினும் இவை சிறிய நகரங்களாகவும், சுதந்திரமான நிர்வாகம் மற்றும் தன்நிறைவுப் பொருளாதாரம் ஆகியவற்றைக் கொண்ட நகர அரசுகளாகவே இருந்தன.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/2
சிறப்புக் கட்டுரை



1030-ல் சோழ மண்டலம்

சோழர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இரு குலங்கள் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர், பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13 ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/3
சிறப்புக் கட்டுரை



பண்டையத் தமிழர் அளவை முறைகள் மிகவும் ஆய்ந்து நோக்கத்தக்கவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று சிலரும் சிறந்த அளவை முறைகளைப் பயன்படுத்தினர் என்றும் பல ஆய்வாவாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாவாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள்.பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளியினாலான உழக்குகளும் படி என்ற அளவைக்கருவியும் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/4
சிறப்புக் கட்டுரை



சாளுவன்குப்பம் சுப்பிரமணியர் கோவில் மாமல்லபுர கடற்கரையில் சில ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட கற்றளியாகும். இந்தக் கோவில் 2005 ஆம் ஆண்டில் தோண்டி எடுக்கப்பட்டது. இக்கோவில் கட்டுமானம் இரண்டு விதமாக அமைந்துள்ளதாக அகழ்வாய்வாளர்கள் நம்புகின்றனர். முதலாவது சங்க காலத்திய (கிமு 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டு வரை) செங்கல் கட்டுமானம் என்றும் இரண்டாவது இச்செங்கல் கட்டுமானத்திற்கு மேல் கட்டப்பட்ட பல்லவ காலத்திய (கிபி 8 ஆம் நூற்றாண்டுக்குப் பின்) கருங்கல் கட்டுமானம் என்றும் அவர்கள் கருதுகின்றனர். இவ்வகழ்வாய்வை மேற்கொண்ட இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் தமிழ்நாட்டில் அகழ்வாய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட இவ்வகையைச் சேர்ந்த கட்டிடங்களிலேயே மிகவும் பழமையானது இச்செங்கல் கட்டுமானம்தான் என்கின்றனர்.பெரும்பாலான இந்துக் கோவில்களைப் போல் அல்லாமல் இக்கோவில் வடக்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோவில்தான் முருகக் கடவுளுக்குரிய கோவில்களிலேயே பழமையானது.இந்தியப் பெருங்கடல் சுனாமியால் வெளிப்பட்ட ஒரு பாறையில் காணப்பட்டக் கல்வெட்டுக் குறிப்புகளால் இந்தியத் தொல்லியல் ஆய்வக ஆய்வாளர்கள் இக்கோவிலைக் கண்டுபிடித்தனர்.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/5
சிறப்புக் கட்டுரை



பிரெஞ்சுப் புரட்சி (1789–1799) என்பது பிரான்சு மற்றும் பிற ஐரோப்பியப் பகுதிகளில் பண்பாடு மற்றும் அரசியல் களங்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களைக் குறிக்கிறது. இதன் விளைவாக பிரான்சில் பல நூற்றாண்டுகளாக நீடித்திருந்த முழு மன்னராட்சி முறை வீழ்ந்தது. நிலமானிய, நிலபிரப்புத்துவ, கிறித்தவத் திருச்சபை அதிகார முறைமைகளின் ஆதிக்கம் சரிந்து, பிரெஞ்சு சமூகத்தில் மாபெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. பல நூற்றாண்டுகளாக வழக்கிலிருந்த அதிகாரக் கட்டமைப்புகளும் கருத்துகளும் தகர்க்கப்பட்டு அறிவொளிக்கால கருத்துகளான குடியுரிமை, மாற்றவியலாத உரிமைகள் போன்றவை பரவின. இடதுசாரி அரசியல் அமைப்புகளும், வீதியில் இறங்கிப் போராடிய சாதாரண மக்களும் இம்மாற்றங்களுக்குக் காரணமாக இருந்தனர். 1789 இல் பிரெஞ்சு நாடாளுமன்றம் கூட்டப்பட்டதுடன் பிரெஞ்சு புரட்சி துவங்கியது. பெரும் வன்முறைச் செயல்கள், படுகொலைகள், கும்பலாட்சி, அயல்நாட்டுப் படையெடுப்புகள், ஆட்சி மாற்றங்கள் என பிரான்சில் பெரும் குழப்பம் நிலவியது. செப்டம்பர் 1792 இல் பிரான்சு குடியரசாக அறிவிக்கப்பட்டது. பிரெஞ்சு அரசர் பதினாறாம் லூயியும் அவரது மனைவி மரீ அண்டோனெட்டும் மரண தண்டனை விதிக்கப்பட்டு கில்லோட்டின் தலைவெட்டு எந்திரம் மூலம் கொல்லப்பட்டனர்


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/6
சிறப்புக் கட்டுரை



தெர்னாத்தே சுல்தானகம் என்பது இந்தோனேசியாவின் ஆகப் பழைய முஸ்லிம் அரசுகளில் ஒன்றாகும். இது பாப் மசூர் மலாமோ என்பவரால் 1257 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. சுல்தான் பாபுல்லாஹ் (1570–1583) என்பவரின் ஆட்சிக் காலமே இவ்வரசின் பொற்காலமாகத் திகழ்ந்தது. அக்காலத்தில் தெர்னாத்தே சுல்தானகம் இந்தோனேசியத் தீவுகளின் கிழக்குப் பகுதியின் பெரும் பாகத்தையும் பிலிப்பீன்சின் தென்பகுதியையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தெர்னாத்தே சுல்தானகம் அக்காலத்தில் உலகிலேயே ஆகக் கூடியளவு கிராம்பு உற்பத்தி செய்யும் இடமாகத் திகழ்ந்ததுடன், 15 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டு வரையான காலப் பகுதியில் பிராந்திய வல்லரசாகவும் திகழ்ந்தது. தொடக்கத்தில் இவ்வரசின் பெயர் காப்பி இராச்சியம் என்றே இருந்தது. பின்னர் இதன் தலைநகரமான தெர்னாத்தே நகரின் பெயரால் பெயர் மாற்றம் பெற்றது. தெர்னாத்தே சுல்தானகமும் இதன் அண்டைய அரசாகிய திடோரே சுல்தானகமும் இணைந்த பகுதியே உலகின் மிக முக்கியமான கிராம்பு உற்பத்திப் பகுதிகளாக இருந்தன. அதன் காரணமாக, இவ்விரு அரசுகளின் ஆட்சியாளர்களே இந்தோனேசியத் தீவுகளிலேயே செல்வம் மிக்கோராயும் வல்லமை பொருந்தியோராயும் விளங்கினர். எனினும் இவ்விரு அரசுகளினதும் செல்வத்திற் பெரும் பகுதி ஒன்றுக்கொன்று போரிடுவதிலேயே வீணாகியது.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/7
சிறப்புக் கட்டுரை



பாண்டியர் செப்பேடுகள் என்பது பாண்டிய வேந்தர்கள் கொடுத்த நில தானங்களையும், தன் முன்னோர் நில தானங்களை ஆவணப்படுத்தவும் உருவாக்கப்பட்ட பட்டயங்களாகும். பாண்டியர் செப்பேடுகளில் இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்கள் காலத்தில் கொடுக்கப்பட்ட ஏழு செப்புப்பட்டயங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாய் அமைந்தன. இவை கிடைக்காமல் போயிருந்தால் களப்பிரர் ஆட்சியை தமிழ்நாட்டில் வேரறுத்த பாண்டியர் வேந்தன் கடுங்கோன் பற்றி வரலாறு அறியாமலேயே போயிருக்கும். இடைக்கால மற்றும் பிற்கால பாண்டியர்களின் காலங்களை கணிப்பதற்கும், முறைப்படுத்துவதற்கும் வகையில்லாமல் போயிருக்கும். இந்த செப்பேடுகளில் பாண்டியர் சந்திரனிலிருந்து தோன்றியவர்கள் என்றும் அகத்தியரை குல குருவாக கொண்டனர் எனவும் இந்துக் கடவுளான இந்திரனை பலமுறை தோற்கடித்தனர் என்றும் ஆழ்கடலே வற்றும் அளவில் வேல் எறிந்தனர் என்றும் தொன்மக்கதைகள் கூறப்பட்டுள்ளன.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/8
சிறப்புக் கட்டுரை



தமிழகத்தில் கற்காலம் என்பது சுமார் கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி. மு 1,000 வரை நீடித்த காலமாகும். தமிழகத்தில் தொல்லியல் ஆய்வுகள் சுமார் 130 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. தமிழ்கத்தில் கற்கால ஆய்வை முதலில் தொடங்கி வைத்தவர் இராபர்ட் புருசு ஃபூட் ஆவார். இதுவரை செய்யப்பட்ட அகழாய்வுகள், மேற்பரப்பாய்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்காலக்கட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் பழங்கற்காலம் (கி.மு. 15,10,000 ஆண்டுகளுக்கு முன் தொடங்கி கி. மு 10,000 வரை) இருந்த போது மானிடர் நாடோடி வாழ்க்கை வாழ்ந்ததாகவே தெரிகிறது. இடைக்கற்காலத்திலேயே தமிழக மாந்தர்கள் நிரந்தரக் குடியிருப்புகளை அமைத்துக் கொண்டனர். கற்காலத்தின் கடைசிக்கட்டமான புதிய கற்காலம் தமிழகத்தில் கி.மு.2000 வரை நிலவியது. அதன் பிறகு பெருங்கற்சமூகம், உலோகக் கருவிகள் போன்றவை அதிகம் வழக்கில் வந்தவுடன் கற்காலம் தமிழகத்தில் வழக்கிழந்தது. தமிழகத்தில் பழங்கற்காலத்தின் ஆரம்ப காலம் எப்போது என இன்னும் சரியாக கணிக்க முடியவில்லை.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/9
சிறப்புக் கட்டுரை



தென்காசிப் பாண்டியர்கள் எனப்படுவர் தென்காசி நகரைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்ட பாண்டிய மன்னர்கள் ஆவர். பதினைந்தாம் நூற்றாண்டில் தமிழகத்தில் ஏற்பட்ட முகலாயர் மற்றும் நாயக்கர் படையெடுப்புகளால் பாண்டியர் தங்கள் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்து, தென்காசி, திருநெல்வேலி போன்ற தென்தமிழக நகரங்களில் சிற்றரசர்களாக வாழத் தலைப்பட்டனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் (படம்) முதல் அவனின் அடுத்த தலைமுறையில் வந்த அனைத்துப் பாண்டியரும் தென்காசியையேத் தலைநகராகக் கொண்டு தென்காசி பெரியகோயிலில் உள்ள சிவந்தபாதவூரருடைய ஆதீன மடத்தில் முடி சூட்டிக் கொண்டனர். அதே காலத்தில் சில பாண்டியர் நெல்லையையும் தலைநகரமாக கொண்டு ஆண்டு வந்தனர். கயத்தார், வள்ளியூர், உக்கிரன் கோட்டை போன்ற நகரங்களும் இவர்களின் முக்கிய நகரங்களாகும். தென்காசி பெரியகோயில், பிரம்மதேசம், சேரன்மாதேவி, அம்பாசமுத்திரம், களக்காடு, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் இவர்களைப் பற்றிய கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளும் காணப்படுகின்றன.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/10
சிறப்புக் கட்டுரை



பல்லவர் என்போர் தென்னிந்தியாவில் களப்பிரர்கள் வீழ்ச்சிக்குப் பிறகு கி.பி. 250 முதல் கி.பி. 850 வரை சுமார் அறுநூற்று ஐம்பது ஆண்டுகள் தமிழகத்தில் நிலைத்து ஆட்சி புரிந்தவர்கள். இவர்கள் இலங்கையை அடுத்த மணிபல்லவத் தீவிலிருந்து வந்தவர்கள்; தொண்டை மண்டலத்துப் பழங்குடிகள்; பஹலவர்கள் என்னும் பாரசீக மரபினர் என்று பல்வேறு கருத்து வேற்றுமைகள் உண்டு. அவர்களைப் பற்றிக் கிடைத்துள்ள சான்று மூலங்களைக்கொண்டு, பட்ட முறைமையை முற்றும் முறைப்படுத்தவும் முடியவில்லை. 'வின்சென்ட் ஸ்மித்' என்னும் ஆங்கில வரலாற்றாசிரியர் தமது நூலின் முடிவாகப் பல்லவர் தென்னிந்தியரே என்று வரையறுத்துள்ளார். சாதவாகனப் பேரரசில் குறுநில மன்னர்களாகவும் ஆட்சியாளர்களாகவும் செயல்பட்டு வந்த இவர்கள் சாதவாகனப் பேரரசு வலுக்குன்றியதும் கிருஷ்ணா ஆற்றிற்குத் தெற்குப் பகுதியை ஆளத் தொடங்கினர்.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/11
சிறப்புக் கட்டுரை



பாண்டியர் துறைமுகங்கள் சங்ககாலம் தொட்டே முத்துக்குளித்தலுக்கும் முத்து வணிகத்துக்கும் பெயர் பெற்றிருந்தன. அவற்றில் கொற்கை துறைமுகத்தின் முத்து வணிகச்சிறப்பை தாலமி, பெரிப்ளூசு, பிளைனி போன்ற வேற்று நாட்டவர் குறிப்புகளைக் கொண்டும் அறியலாம். இடையே களப்பிரர் ஆட்சியில் வீழ்ச்சியைத் தழுவிய பாண்டியர்களின் கடல் வணிகம் முற்கால மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் ஆட்சியின் போது உச்சநிலை அடைந்தது. இதற்கு அவர்கள் காலத்தில் புதிதாக உருவாகிய 25க்கும் மேற்பட்ட துறைமுகப்பட்டினங்களே சான்று. இப்பட்டினங்களால் சங்ககாலப் பாண்டியர் துறைமுகங்களான கொற்கை, மருங்கூர், அழகன்குளம் போன்றவற்றின் புகழ் மங்கத் தொடங்கியது. அதே நேரம் காயல்பட்டினம், குலசேகரபட்டினம், சுந்தரபாண்டியன் பட்டினம் போன்றவை மேன்மை அடைந்தன. குலசேகர பாண்டியனின் ஆட்சியில் பாண்டி நாடு உலகின் தலைசிறந்த செல்வச்செழிப்புள்ள நாடாக இருந்ததாக மார்க்கோ போலோ குறித்துள்ளார்.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/12
சிறப்புக் கட்டுரை



தமிழர் வரலாற்றுக் காலக்கோடு என்பது கிமு 2000 -ல் தொடங்கி இன்று வரையுள்ள தமிழர்களின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டுகின்றது. வரலாற்றுக்கு முந்திய காலம், சங்க காலம் முதல் இன்றைய இருபத்தோராம் நூற்றாண்டு வரை தமிழர்களின் ஆட்சி, அரசியல், மொழி, தமிழர்களை ஆண்டோர், இன்னல்கள் என முக்கிய நிகழ்வுகளைச் சுட்டி, தமிழகம், ஈழம், மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் புலம் பெயர் தமிழர்கள் என விரிவடைந்து முக்கிய நிகழ்வுகளைக் கோடிட்டுக் காட்டுகின்றது இக் காலக்கோடு. கல்லாயுதங்களைப் பயன்படுத்திய தமிழர்கள் முதல் கணினியைப் பயன்படுத்தும் இக்காலத் தமிழர்கள் வரை அவர்களின் இன்பங்களையும் துன்பங்களையும், வெற்றிகளையும் தோல்விகளையும், ஏற்றங்களையும் இறக்கங்களையும் அறிய தமிழர் வரலாற்றுக் காலக்கோடு பயன்படுகிறது.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/13
சிறப்புக் கட்டுரை



முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை என்பது கிபி 2ஆம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின் துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். தற்போது வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகிறது. இதில் கங்கைச் சமவெளியிலுள்ள இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய வரலாற்றில் திருப்புமுனையாய் அமைந்த இந்த உடன்படிக்கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு பண்டைய எகிப்து நாட்டு நைல் நதியை சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம்.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/14
சிறப்புக் கட்டுரை



சங்ககாலத் தமிழக வரலாற்றைக் கணிப்பதற்கும் நிறுவுவதற்கும் கல்வெட்டியலுக்கு அடுத்து சங்ககாலத் தமிழக நாணயவியலின் பங்கு மிகுதியானது. குறிப்பாக, மூவேந்தர் வழங்கி வந்த முத்திரைக் காசுகளும், அவற்றை உருவாக்க பயன்படுத்திய வார்ப்புக் கூடுகளும் பெருவழுதி நாணயம் (படம்) என்ற பாண்டிய மன்னனின் காசுகளும் சங்ககாலத் தமிழக வரலாற்று நிறுவலில் பெரும்பங்காற்றுவன. மூவேந்தர் , குறுநில மன்னர்கள் ஆகியோரின் நாணயங்கள் மூலம் தமிழக வரலாற்றையும் பொருளாதாரத்தையும், வேற்று மாநில மன்னர்களின் நாணயங்கள் தமிழகத்தில் கிடைத்ததைக் கொண்டு இந்திய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் அறியலாம். தமிழகத்தில் கிடைத்த வேற்று நாட்டு மன்னர்களின் நாணயங்களையும் கடலோடிகளின் குறிப்புகளையும் கொண்டு பண்டைய இந்தியாவின் பண்டமாற்று முறைகளையும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும் கணிக்க முடிகிறது.


வலைவாசல்:வரலாறு/சிறப்புக் கட்டுரை/15
சிறப்புக் கட்டுரை



மதுரை சுல்தானகம் (மாபார் சுல்தானகம்) பதினான்காம் நூற்றாண்டில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு செயல்பட்ட ஒரு சிற்றரசு. ஜலாலுதீன் ஆசன் கான், மதுரையின் முதல் சுல்தான் ஆவார். பாண்டிய பேரரசு வீழ்ச்சியடைந்தபின் நடைபெற்ற இசுலாமியப் படையெடுப்புகளால் தோன்றிய இந்த சுல்தானகம், பின்னர் விஜயநகரப் பேரரசின் படையெடுப்புகளால் அழிக்கப்பட்டது. இதுவே தமிழகத்தில் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்த ஒரே இசுலாமிய அரசு. முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் (1268 – 1308) இறப்பிற்குப் பிறகு, அவரது மகன்கள் சுந்தர பாண்டியனுக்கும் வீரபாண்டியனுக்கும் இடையே உள்நாட்டுப் போர் மூண்டது. இசுலாமிய வரலாற்றாளர்கள் வீரபாண்டியன் அந்தப் போரில் டெல்லி சுல்தானகத்தின் படைத் தலைவர் மாலிக் கஃபூரின் துணையை நாடினார் என்று கூறுகின்றனர். இதனால் கஃபூரின் படைகள் 1310-11ல் மதுரையைக் கைப்பற்றி சூறையாடின. இதன் பின்னால், பாண்டிய உள்நாட்டுப் போர் தொடர்ந்து இடம்பெற்றது. மேலும் இருமுறை டெல்லி சுல்தானகப் படைகள் மதுரையைச் சூறையாடின. உலூக்கான் மதுரையை டெல்லி சுல்தானகத்துடன் இணைத்தார். பாண்டிய நாடு, மாபார் என்ற பெயருடன் டெல்லி சுல்தானகத்தின் ஐந்து தென்னிந்திய பிரதேசங்களுள் (மாபார், தேவகிரி, டிலிங்க், கம்பிலி, துவாரசமுத்திரம்) ஒன்றாகியது.


முன்மொழிதல்[தொகு]

இந்த பக்கத்தில் நீங்கள் சேர்க்க விரும்பும் சிறப்புக் கட்டுரைகளின் தொடுப்பை இங்கு முன்மொழியவும்.

  1. தற்போது எதுவும் இல்லை.