வரருசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரருசி (தேவநாகரி: वररुचि) என்பது பண்டைய இந்தியாவின் சமஸ்கிருத மொழி இலக்கியம், அறிவியல் நூல்கள் மற்றும் பல்வேறு புராணக்கதைகளுடன் தொடர்புடையவர். கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர் வரருசி[1] பெரும்பாலும் காத்தியாயனருடன் அடையாளம் காணப்படுகிறார்.[2]

பிராகிருத மொழியின் இலக்கணத்தைப் பற்றிய மிகப் பழமையான நூலான பிராகிருத பிரகாசத்தின் ஆசிரியர் வரருசி என்று நம்பப்படுகிறது.[2] பேரரசர் விக்ரமாதித்தியன் அவையில் இருந்த ஒன்பது புலவர்களில் (நவரத்னங்கள்) வரருசியும் ஒருவர் ஆவார்.[3]சோமதேவர் என்ற சைவப் பிராமணரால் சொல்லப்பட்ட 11ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்திய இதிகாசங்கள், விசித்திரக் கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பான கதாசரிதசாகரம் நூலில் ஒரு முக்கிய பாத்திரமாக வரருசி தோன்றுகிறார். மன்னர் விக்ரமாதித்தியன், அவனது அமைச்சர் பட்டி மற்றும் பத்ருஹரி ஆகியோர் வரருசியின் சகோதரர்கள் எனக் கதாசரிதசாகரம் நூல் கூறுகிறது.

கேரளாவின் புராணக்கதையில் வரருசி, சந்திரவாக்கியங்களின் (சந்திர வாக்கியங்கள்) ஆசிரியராக நம்பப்படும் ஒரு புத்திசாலித்தனமான வானியலாளர் ஆவார். இது வெவ்வேறு கால இடைவெளிகளில் சந்திரனின் தீர்க்கரேகைகளைக் குறிப்பிடும் எண்களின் தொகுப்பாகும்.[4] இந்த எண்கள் கட்டப்பயாடி எண்முறையில் (Katapayadi system) குறியிடப்பட்டுள்ளன. மேலும் வரருசியே இந்த எண்முறை முறையைக் கண்டுபிடித்தவர் என்று நம்பப்படுகிறது. கேரள புராணத்தின் வரருசியின் மூத்த மகன் மேழத்தோல் அக்னிஹோத்ரி என்று அழைக்கப்படுகிறார். மேலும் அவர் கிபி 343 மற்றும் 378 இடையில் வாழ்ந்ததாகக் கருதப்படுகிறது.[5] வரருசி என்ற பெயர் சமஸ்கிருதத்தில் பத்துக்கும் மேற்பட்ட படைப்புகளுடன் தொடர்புடையது. மேலும் காத்தியாயானர் என்ற பெயர் பதினாறு படைப்புகளுடன் தொடர்புடையது. வரருசியின் பெயருடன் தொடர்புடைய வானியல் மற்றும் கணிதத்துடன் தொடர்புடைய சுமார் பத்து படைப்புகள் உள்ளன.[6]

வரருசி, இலக்கண அறிஞர்[தொகு]

பண்டைய இந்தியாவில் அனைத்து அறிவியல்களிலும் முதன்மையானது மற்றும் மிக முக்கியமானது இலக்கணம் ஆகும். ஒருவர் முதலில் இலக்கணத்தைப் படித்த பிறகே ​ வேறு எந்த அறிவியலையும் முடியும்.[7]இந்த மனப்பான்மை இந்தியாவின் பண்டைய இலக்கண அறிஞர்களான பாணினி மற்றும் பதஞ்சலி ஆகியோருக்குக் கூறப்பட்ட பெரும் மரியாதையையும் கௌரவத்தையும் நியாயப்படுத்துகிறது. கிமு 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணினி காந்தாரத்தின் புஷ்கலாவதியைச் சேர்ந்த ஒரு பண்டைய இந்திய சமஸ்கிருத இலக்கண அறிஞர் ஆவார். இவர் இயற்றிய அட்டாத்தியாயி எனும் இலக்கண நூல் பெரும் புகழ் பெற்றது. பாணினிக்குப் பின்னர் பதஞ்சலி இயற்றிய யோக சூத்திரங்களுக்கு மகாபாஷ்யம் (பெரிய வர்ணனை) எனப்பெயராகும். கிமு 3-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காத்தியாயானர் சமஸ்கிருத இலக்கணம், கணிதம், இலக்கிய அறிஞர் மற்றும் வேத கால குரு ஆவார். வரருசி, பாணினி எழுதிய அட்டாத்தியாயி எனும் இலக்கண நூலுக்கு வரருசி உரை எழுதினார்.

பிராகிருத இலக்கண அறிஞர்[தொகு]

பிராகிருதம் என்பது சமஸ்கிருதத்திலிருந்து தோன்றிய பல எளிய மொழிகளில் ஒன்றாகும். வரருசி பிராகிருத மொழியின் இலக்கண ஆசிரியர் ஆவார். வரருசி பிராகிருத பிரகாசம் எனும் இலக்கண நூலை எழுதியுள்ளார். இப்பணிக்கு வரருசி பிராகிருத மொழியிலிருந்து கிளைத்த பழைய மராத்தி மொழி, விரஜ பாஷையாக பரிணமித்த சௌரசேனி மொழி, மகதி மொழி மற்றும் பைசாசம் மொழிகளை எடுத்துக் கொண்டார். வரருசி எழுதிய பிராகிருத பிரகாசம் எனும் இலக்கண நூல் பன்னிரண்டு அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இது மொத்தம் 424 சூத்திரங்கள் கொண்டது. முதல் ஒன்பது அத்தியாயங்கள் மகாராஷ்டிரா மொழிக்கும், மீதமுள்ள மூன்று அத்தியாயங்களில் ஒவ்வொன்றும் பைசாசிக்கு 14 சூத்திரங்களும், மகதி மொழிக்கு 17 சூத்திரங்களும, சௌரசேனி மொழிக்கு 32 சூத்திரங்களும் உள்ளது. [8] பிரகிருத பிரகாசத்தின் ஆசிரியராக காத்தியாயானரும் அறியப்பட்டார்,

வரருசி சுலப சூத்திரங்கள்[தொகு]

வேதத்தின் அங்கமான யாக பீடங்களை நிறுவுவதற்கான வேத கால கணிதத்தை விளக்கும் சுல்ப சூத்திரங்களையும் வரருசியும் இயற்றினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Harold G. Coward; Karl H. Potter; K. Kunjunni Raja, eds. (1990). Encyclopedia of Indian philosophies: The philosophy of the grammarians. Delhi: Motilal Banarsidass Publishers. pp. 458–459. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0426-5.
  2. 2.0 2.1 Edwards Byles Cowell (1854). The Prākrita-prakāsa or the Prākrit grammar of Vararuci with the commentary (Manorama) of Bhāmaha. Hertford, England: Stephen Austin, Book Sellers to East India College.
  3. V. P. Ramachandra Dikshitar; V. R. Ramachandra Dikshitar (1952). The Gupta Polity. Delhi: Motilal Barasidass. pp. 37–38. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-1024-4.
  4. David Pingree (1994). Census of the exact sciences in Sanskrit. American Philosophical Society. pp. 558–559.
  5. David Edwin Pingree (1970). Census of the exact sciences in Sanskrit. American Philosophical Society. pp. 558. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87169-213-9.
  6. Mohan Lal (2006). The Encyclopaedia of Indian Literature. Vol. 5 (Sasay To Zorgot). Sahitya Akademy. pp. 4495–44497. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-260-1221-3.
  7. Maurice Winternitz; Moriz Winternitz; Subhadra Jha (1967). History of Indian literature. Vol. III. Motilal Banarsidass. p. 458. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-208-0056-7.
  8. Richard Pischel; (Translated by Subhadra Jhā) (1999). A grammar of the Prākrit languages (2 ed.). Delhi: Motilal Banarsidass Publishers. pp. 1–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1680-0.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரருசி&oldid=3937413" இலிருந்து மீள்விக்கப்பட்டது