பத்திரகிரியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்திரகிரியார்

அரசனாக இருந்து பட்டினத்தாரின் சித்தருமை தெரிந்த கணமே அவருடைய சீடராகி தன் சகல செல்வ போகங்களையும் துறந்து துறவியானவர் பத்திரகிரியார். பதினெண்சித்தர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவருடைய பாடல்கள் (‘மெய்ஞானப் புலம்பல்’) மிகவும் புகழ் பெற்றவை. இவரைப் பற்றிய வரலாறாக வழங்கி வரும் கதை கீழ்க்கண்டவாறு:

உஜ்ஜைனி அரசர்[தொகு]

பட்டினத்தார் தலயாத்திரை செய்து கொண்டிருந்த காலத்தில் உஜ்ஜைனி மாகாளபுரத்திற்குச் சென்று மாகாளேசுவரரை வணங்கி விட்டு ஊருக்கு வெளியே காட்டுப் பிள்ளையார் கோவில் ஒன்றில் நிஷ்டையில் அமர்ந்திருந்தார்.

உஜ்ஜைனி அரண்மனையில் கொள்ளையிட்டு வந்த கள்வர்கள் ஒரு முத்துமாலையை அந்தக் காட்டுப் பிள்ளையாருக்குக் காணிக்கையாகத் தூக்கி எறிய அது நிஷ்டையில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது. கள்வர்களை விரட்டிக் கொண்டு வந்த வீரர்கள் முத்து மாலையுடன் இருந்த பட்டினத்தாரை, அரசன் பத்திரகிரியின் முன் சென்று நிறுத்த அவன் தீர விசாரிக்காமல் அவரைக் கழுவிலேற்ற ஆணையிட்டான்.

பட்டினத்தார் ஒருபாடல் பாட அந்தக் கழுமரம் தீப்பற்றி எரிந்தது. அந்தக் கணமே ஞானம் பெற்றான் மன்னன் பத்திரகிரி. தன் அரச போகங்களைத் துறந்து பட்டினத்தாரின் சீடனாக அவருடனேயே கிளம்பி விட்டான்.

திருவிடைமருதூர் துறவி[தொகு]

பட்டினத்தாரும் பத்திரகிரியாரும் திருவிடை மருதூரை அடைந்து அங்கே கோவில் வாசலில் துறவிகளாக அமர்ந்திருக்கத் தொடங்கினர். பத்திரகிரியார் ஊருக்குள் சென்று பிச்சை பெற்று வந்து குருவுக்குத் தந்து அதில் மிஞ்சியதைத் தானும் உண்டு வாழ்ந்து வந்தார். ஒருநாள் பத்திரகிரியார் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஒரு பெட்டைநாய் அருகே வந்து நிற்க அதற்குச் சிறிது உணவளித்தார். அன்று முதல் அது அவருடனேயே இருக்க ஆரம்பித்தது.

துறவியா குடும்பஸ்தனா[தொகு]

பத்திரகிரியாரும் பட்டினத்தாரும்

திருவிடை மருதூர் கோவிலின் கிழக்கு கோபுரவாசலில் பட்டினத்தாரும் மேற்குக் கோபுர வாசலில் பத்திரகிரியாரும் அமர்ந்திருப்பது வழக்கம். ஒருமுறை ஒரு பிச்சைக்காரன் பட்டினத்தாரிடம் பிச்சை கேட்க, அதற்கு அவர் “நான் சகலமும் துறந்த துறவி; மேற்குக் கோபுர வாசலில் ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான்; அவனிடம் போய்க் கேளுங்கள்” என்று சொல்லி அனுப்பினார். அந்த வார்த்தைகளைக் கேள்வியுற்ற பத்திரகிரியார் அதிர்ச்சி அடைந்தார். தன்னுடைய திருவோடும், உடன் இருக்கும் நாயும் தன்னைக் குடும்பி ஆக்கி விட்டனவே என்கிற அயர்வில் திருவோட்டினைத் தூக்கி எறிய அது உடைந்ததோடு அது நாயின் மீது பட்டு அதுவும் இறந்து போனது.

அந்த நாய் காசிராஜனின் மகளாகப் பிறந்தது. அவள் வளர்ந்த பின் முற்பிறவி ஞாபகம் கொண்டு திருவிடைமருதூருக்கு வந்து பத்திரகிரியாரிடம், “துறவியாகிய தங்கள் எச்சில் சோறு உண்டு வளர்ந்த நாய் தான். நான்; எனக்கு முக்தி கிடைத்திருக்க வேண்டுமே; பிறவி எப்படி வாய்க்கலாம்?” என்று முறையிட்டாள். அவர் மருதூர் இறைவனிடம் முறையிட அங்கே கிளம்பிய ஜோதியில் இருவரும் முக்தி பெற்றனர்.

மெய்ஞானப் புலம்பல்[தொகு]

துறவியாக பத்திரகிரியார் பாடிய பாடல்கள் “மெய்ஞானப் புலம்பல்” என்று அழைக்கப்படுகின்றன. மிக எளிய வார்த்தைகளையும் ஆழமான அர்த்தங்களையும் கொண்டிருக்கும் பாடல்கள் அவை.

எடுத்துக்காட்டுப் பாடல்கள்[தொகு]

ஆங்காரம் உள்ளடக்கிய ஐம்புலனைச் சுட்டறுத்துத்
தூங்காமல் தூங்கிச் சுகம் பெறுவதெக்காலம்?
வேடிக்கையும் சொகுசும் மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பதெக்காலம்?
நான் அவனாய்க் காண்பதெல்லாம் ஞானவிழியால் அறிந்து
தான் அவனாய் நின்று சரணடைவதெக்காலம்?
நான்நின்ற பாசமதில் நான் இருந்து மாளாமல்
நீநின்ற கோலமதில் நிரவிநிற்பதெக்காலம்?
உதயச் சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி
இதயத் திருநடனம் இனிக் காண்பதெக்காலம்?
பற்றற்று நீரில் படர்தாமரை இலைபோல்
சுற்றத்தை நீக்கி மனம் தூரநிற்பதெக்காலம்?

வடஇந்தியக் கதை[தொகு]

பத்திரகிரியாரின் மற்றுமோர் கதை வடஇந்தியாவின் பலபகுதிகளில் பிரபலமாக உள்ளது. அந்த கதையில் ராஜாவின் ராணி பிங்கலை மறைந்த தருணத்தில் , குரு கோரக்கநாதர் , ராணியை உயிர்மீட்டுத்தந்து , இவ்வுலகின் மாயையை ராஜாவிற்கு உணர்த்துகிறார்

இதையடுத்து ராஜா பத்திரகிரி , குரு கோரக்கநாதரின் சரண்புகுந்து துறவறம் மேற்கொள்கிறார்

குறிப்புதவி[தொகு]

  • சித்தர் பாடல்கள் "பத்திரகிரியார் சித்தர் பாடல்கள்" (in Tamil). செந்தமிழ்.ORG. {{cite web}}: Check |url= value (help)CS1 maint: unrecognized language (link)
  • சித்தர் பாடல்கள் – மணிவாசகர் பதிப்பகம்
  • சிவமயம் கண்ட சித்தர்கள் – ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்திரகிரியார்&oldid=3772538" இலிருந்து மீள்விக்கப்பட்டது