வண்டி வேடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீமன் வேடமணிந்தவர்- வண்டி வேடிக்கை நிகழ்வில் ஒரு காட்சி

வண்டி வேடிக்கை என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் குகை பகுதியில் நடைபெறும் ஒரு வழிபாட்டு நிகழ்வாகும். சேலம் மாவட்டத்தில் ஆடிமாதத்தில் பல்வேறு கோவில்களில் ஆடித்திருவிழா நடைபெறும். ஆடித்திருவிழாவின் போது, சேலம் குகை ஸ்ரீமாரியம்மன், காளியம்மன் கோயிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சி 100 வருடங்களுக்கு மேலாக மக்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கி வருகிறது.[1] கண்ணைக் கவரும் வண்ண மின் விளக்குகளால், அலங்கரிக்கப்பட்ட தேர்களில் விண்ணுலக கடவுளர்களின் வேடமணிந்தவர்கள், மக்கள் கூட்டத்தில் வலம் வந்து ஆசி வழங்குவது தான், வண்டி வேடிக்கை விழாவின் சிறப்பம்சம். திருவிழாவின் போது பக்தர்கள் நோன்பு இருந்து கடவுள் உருவங்களைத் தரித்து, வண்ண வண்ண வண்டிகளில் வலம் வருவர். பெரும்பாலும் புராணக் கதைகளில் வரும் நிகழ்வுகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும். பெண்கள் இந்நிகழ்வில் பங்குபெறுவதில்லை. ஆண்களே பெண்வேடமிட்டு வருவர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 5 முதல் 20 வரையான வண்டிகள் தயார் செய்யப்பட்டும். அவ்வண்டிகளில் மின் விளக்குகளால் அலங்கரித்து ஒளி, ஒலி அமைப்புகள் செய்யப்படும். அலங்கார வண்டிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குகை கோவிலை மூன்று முறை சுற்றி செல்லும். குகை மாரியம்மன் கோவிலில் நடக்கும் வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை காண தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருவார்கள். வேண்டியது நிறைவேறியதும் பக்தர்கள் வண்டி வேடிக்கையில் கடவுள் வேடத்தில் வந்து அம்மனை வணங்கி செல்வார்கள். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் வண்டிகளில் பக்தர்கள் வேடமிட்டு வந்து அம்மனை வணங்கி செல்வார்கள்.[2]

பக்தர்கள், சிவன், பார்வதி, லட்சுமி, பிள்ளையார், முருகன் ஆகியோர் கைலசாத்தில் அமர்ந்திருப்பதை போலவும், ரதி மன்மதன் வேடம், பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி, கருடாழ்வார் வேடம் அணிந்தும், வண்டியில் ஊர்வலமாக செல்வர். மேலும், அர்ச்சுனன் வில் வித்தை அரங்கேற்றம், கிருஷ்ணன், நரசிம்மன் இரணியனை வதம் செய்தது. மதுரை மீனாட்சி, காஞ்சி காமாட்சி, காசி விசாலட்சி , வள்ளி, தெய்வானை வேடம் ஆகியவை மிகவும் நேர்த்தியாகப் புணையப்படும்.[3] மாலை 4.30 மணியில் இருந்து இரவு 10.30 மணி வரை இந்நிகழ்வு நடைபெறும். சேலம் மாநகரின் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை, குழந்தைகளுடன் கண்டு களிப்பர்.

படிமங்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டி_வேடிக்கை&oldid=1523445" இருந்து மீள்விக்கப்பட்டது