வசவசமுத்திரம் தொல்லியல் களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசவசமுத்திரம் தொல்லியல் களம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுகுன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வசுவசமுத்திரம் ஊராட்சியில், பாலாற்றின் கரை அருகே அமைந்துள்ளது. இத்தொல்லியல் களம் மாமல்லபுரத்திற்கு தெற்கில் 18 கிமீ தொலைவில் உள்ளது.

பிற்கால பல்லவ மன்னன் ராஜசிம்மனின் (கிபி 700 - 728) கல்வெட்டு ஒன்று, வசவசமுத்திரம் அருகில் உள்ள வயலூரில் உள்ளது. இந்தக் கல்வெட்டில், பல்லவ மன்னர்களின் வம்சாவழிகள் குறித்து, துவக்கம் முதல் இராசசிம்மன் வரை குறிப்பிடப்பட்டுள்ளன.

தற்கால வசவசமுத்திரம், பண்டைய காலத்தில் வயலூரின் பகுதியாகவும், பின்னர் விசயநகர மன்னர்கள் காலத்தில்தான் வசவசமுத்திரம் எனப் பெயர் மாற்றம் பெற்றதாக கருதப்படுகிறது.

தொல்லியல் பொருட்கள்[தொகு]

வசவசமுத்திர கிராமப் பகுதிகள்இன் அகழாய்வில் கண்டெடுத்த கிபி 1 - 2ஆம் நூற்றாண்டு காலத்திய தொல்லியல் பொருட்கள்: 1. உரோமானிய நாட்டு மதுக்குடுவைகள் மற்றும் கருப்பு – சிவப்பு மட்கலன்கள். 2. உறை கிணறுகள். 3. கால்வாய்ப் பகுதி. 4. அரிய கல்மணிகள்

வசவசமுத்திரத்தில் தோண்டப்பட்ட அகழ்வுக்குழிகள் 4.25 மீட்டர் ஆழம் வரை தோண்டப்பட்டது. இவற்றில் இரண்டு உறை கிணறுகள் கண்டெடுக்கப்பட்டது. உறை கிணறுகளுக்கு அருகில் வாய்க்காலும், நீர் நிரப்பும் தொட்டியும் காணப்படுவதால், இவை நெசவுத் தொழிலுக்காகப் பயன்படுத்தப்பட்ட சாயத் தொட்டிகளாக இருந்திருக்க வேண்டும். ஏனெனில், இதேபோன்ற அமைப்பில்தான் அரிக்கமேடு அகழாய்விலும் சாயத்தொட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. [1]

அவற்றில் ஒரு உறை கிணற்றின் 11 உறைகளையும், மற்றொன்று 5 உறைகளையும் கொண்டுள்ளது. இவற்றின் விட்டம், கீழே செல்லச் செல்ல அதிகரிக்கிறது. இவ்வாறு இருந்தால், இது குடிநீர்க் கிணறாகத்தான் இருக்க வேண்டும் என தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இங்கு கிடைத்த தொல்பொருட்களில் ஒன்று, இரண்டு கைப்பிடிகளுடன் உரோமானிய ஆம்போரா மதுக் குடுவையாகும்.[2]

தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் ஆய்வாளர்களான ஆர். நாகசாமி மற்றும் நடன காசிநாதன் ஆகியோர், 1969 – 1970ம் ஆண்டில் வசவசமுத்திரம் தொல்லியல் களத்தை அகழாய்வு செய்தனர்.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://210.212.62.26/pdf_files/books/Vasavasamudram%20part%20001.pdf[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Vasavasamudram". Archived from the original on 2017-09-03. பார்க்கப்பட்ட நாள் 2017-12-04.

வெளி இணைப்புகள்[தொகு]