வசந்த ஹப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வசந்த ஹப்பா( கன்னடம்: ವಸಂತ ಹಬ್ಬ ), கன்னட மொழியில் வசந்த விழா என்று பொருள்படும், இவ்விழா இந்தியாவின் பெங்களூர் நகரத்தில் உள்ள நிருத்யகிராம் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட நடன கலாச்சார விழாவாகும். உலக அளவில் மிகவும் பிரபலமான உட்ஸ்டாக் இசை மற்றும் கலை கண்காட்சிக்கு இணையான இந்தியாவின் பாரம்பரிய உட்ஸ்டாக் என்று அழைக்கப்படுகிறது. நிருத்யகிராமத்தை நிறுவிய ப்ரோதிமா பேடியின் சிந்தனையில் உருவான இந்த விழா, முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு நடைபெற்றது.[1] பெங்களூரின் புறநகரில் உள்ள ஹெசராகட்டாவில் உள்ள நிருத்யகிராம வளாகத்தில் நடைபெறும் இந்த விழா, இந்தியா முழுவதும் உள்ள சிறந்த இசைக்கலைஞர்கள், நடனக் கலைஞர்கள் மற்றும் கலாச்சார கலைஞர்களின் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது\.[2] அதன் முதல் பதிப்பில் சுமார் மூவாயிரம் பார்வையாளர்களிடமிருந்து தொடங்கி, 2004ம் ஆண்டு நடைபெற்ற பதிப்பில் நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் வரை கலந்து கொண்டனர். 2005 ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது.

திருவிழா[தொகு]

ஓரிரவு மட்டுமே நடைபெற்ற இந்த கலை விழா முதல் நாள் மாலையில் ஆரம்பித்து மறுநாள் அதிகாலை வரை நீடிக்கும். பெங்களூரு நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமமான ஹெசரகஹட்டாவில் உள்ள நிருத்யகிராமத்தின் வளாகத்தில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் இந்த  நடைபெற்றது. நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்றாலும், முதலில் வருபவர்களுக்கே இருக்கைகள் கிடைக்கும். இதனால் மதியம் முதலே இருக்கைகள் நிரம்பி வழிகின்றன.[1] நாட்டுப்புறக் கலைஞர்கள் மற்றும் பிற குழுக்களை நியமித்து, பெங்களூரின் சாலைகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் விழாவிற்கான விளம்பரம் தனித்துவமான முறையில் நகரமெங்கும் பரப்பப்படுகிறது, இது நிகழ்வை விளம்பரப்படுத்துவதோடு திருவிழா ஆரம்பிக்கப்போவதை அறிவிக்கிறது. இந்நிகழ்ச்சி பெங்களூரு நகரிலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த தன்னார்வலர்களின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பல கலையார்வம், நாட்டுப்புற நிகழ்ச்சிகளில் ஒத்த எண்ணம் கொண்டவர்கள் இந்நிகழ்வில் பங்களிக்கிறார்கள்,[1] கலையரங்கத்திற்குள் ஐயாயிரம் இருக்கைகளே அடங்கும் என்பதால், இவ்விழாவிற்கு வருபவர்கள்  இருக்கையைப் பெற குறைந்தபட்சம் இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே அந்த இடத்தை வந்தடைய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஐயாயிரம் பேருக்கடுத்த நபர்கள் முழு இரவும் வெளியிலே அமைக்கப்பட்டுள்ள திரைகளில் தான் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.

காலவரிசை[தொகு]

2002[தொகு]

பிப்ரவரி 2, 2002 அன்று, அருணா சாய்ராம் (கர்நாடகக் குரல்), வார்சி சகோதரர்கள், அதீக் ஹுசைன் கான் ( கவ்வாலி ) மற்றும் சுமா சுதீந்திரா (தரங்கிணி வீணையை அறிமுகப்படுத்தியவர்) ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்ட நட்சத்திர கலைஞர்கள். இந்த நிகழ்வு தூர்தர்ஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது மேலும் மற்ற தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் பெரும்பான்மையாக பார்க்கப்பட்டது.

2003[தொகு]

வசந்த ஹப்பாவின் இந்த பதிப்பில் கிராமி விருது பெற்ற பண்டிட் விஸ்வ மோகன் பட்டின் மோகன் வீணையில் கச்சேரியும், ஷுபா முத்கலின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல், தௌஃபிக் குவேரிஷியின் ஃப்யூஷன் இசை மற்றும் அதீக் ஹுசைன் கான் வார்சி சகோதரர்களின் கவாலி ஆகிய நிகழ்ச்சிகள் முத்திரையாக அமைந்தது. இந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட நாற்பதாயிரம் நபர்களுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

2004[தொகு]

2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்த பதிப்பில் புகழ்பெற்ற சாக்ஸபோன் கலைஞர் கத்ரி கோபால்நாத் மற்றும் கர்நாடக இசை விரிவுரையாளர் பாம்பே ஜெயஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டனர்.

தற்போதைய சூழ்நிலை[தொகு]

துரதிர்ஷ்டவசமாக, 2005ல் இருந்து வசந்தஹப்பா நடத்தப்படவில்லை. டிசம்பர் 2004 இல் ஏற்பட்ட இந்தியப் பெருங்கடல் சுனாமியின் பின்பதாக நிகழ்ச்சி நடத்துவதற்கான விளம்பரதாரர்கள் கிடைக்காத காரணத்தினால் ஏற்பட்ட நிதி நெருக்கடியின் காரணமாக நிருத்யகிராம் அமைப்பினால் இந்த திருவிழா நல்லபடியாகக் கைவிடப்பட்டதாகக் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Sonira Gulhati (2003-02-06). "A habba in Vasantha". தி இந்து. Archived from the original on 2007-09-30. பார்க்கப்பட்ட நாள் 2007-08-12.
  2. Kavita Mandana. "A spring in their step". Online Edition of The Deccan Herald, dated 2004-01-17. The Printers (Mysore) Private Ltd. பார்க்கப்பட்ட நாள் 2007-08-12.
  3. B. V. Shiva Shankar (2007-03-03). "Waiting for their spring". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2007-06-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070626104949/http://www.hindu.com/mp/2007/03/03/stories/2007030301100300.htm. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வசந்த_ஹப்பா&oldid=3741890" இலிருந்து மீள்விக்கப்பட்டது