புரோதிமா பேடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோதிமா பேடி
பிறப்புபுரோதிமா குப்தா[1]
(1948-10-12)12 அக்டோபர் 1948
இந்தியா, தில்லி
இறப்பு18 ஆகத்து 1998(1998-08-18) (அகவை 49)
இந்தியா, பித்தோராகர், மல்பா
பணிஇந்திய பாரம்பரிய நடனக் கலைஞர், உருமாதிரிக் கலைஞர்
வாழ்க்கைத்
துணை
கபீர் பேடி (m. 1969–1974)
பிள்ளைகள்பூஜா பேடி உட்பட இருவர்
வலைத்தளம்
www.nrityagram.org

புரோதிமா கௌரி பேடி (Protima Bedi) [2][3] (பிறப்பு: 1948 அக்டோபர் 12 - இறப்பு: 1998 ஆகஸ்ட் 18) [4] என்பவர் ஓர் இந்திய உருமாதிரிக் கலைஞர் மற்றும் ஒடிசி நடனக் கலைஞர் ஆவார். இவர் 1990 ஆம் ஆண்டில், பெங்களூருக்கு அருகில் "நிருத்யாகிராமம்" என்ற நடன கிராமத்தை நிறுவினார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

புரோதிமா திலியில் பிறந்தார்.[5] இவருடன் பிறந்த நான்கு உடன்பிறப்புகளில் இவர் இரண்டாவது குழந்தையாவார். இவருடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகளும், ஒரு சகோதரரும் ஆவார். இவரது தந்தை இலட்மிசந்த் குப்தா, அரியானாவின் கர்னால் மாவட்டத்தைச் சேர்ந்த அகர்வால் குடும்பத்தைச் சேர்ந்த வணிகராவார். இவரது தாய் ரெபா, ஒரு வங்காளி ஆவார். இவரது திருமணத்திற்கு வீட்டில் எதிர்ப்பு எழுந்ததால் இவரது தந்தையின் வீட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது, அதன்பிறகு, இவர் தில்லியில் வேலை செய்யத் தொடங்கினார்.

1953 இல், இவரது குடும்பம் கோவாவிற்கும், 1957 இல் பம்பாய்க்கும் சென்றது. ஒன்பது வயதில், கர்னல் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் தனது அத்தை வீட்டில் சிறிது காலம் தங்க அனுப்பப்பட்டார். அங்கு இவர் ஒரு உள்ளூர் பள்ளியில் படித்தார். திரும்பி வந்ததும், பஞ்சக்னியின் கிம்மின்ஸ் உயர்நிலைப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார், அங்கு இவர் தனது துவக்கக் கல்வியைப் பெற்றார். இவர் பம்பாயின் செயின்ட் சேவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார் (1965-67).[5]

தொழில்[தொகு]

உரு மாதிரிக் கலைஞர் தொழில்[தொகு]

1960களின் பிற்பகுதியில், இவர் ஒரு முக்கிய உரு மாதிரிக் கலைஞராக இருந்தார். 1974 ஆம் ஆண்டில், மும்பையின் ஜுஹு கடற்கரையில் பகல் நேரத்தில் இவர் நிர்வாணமாக ஓடி பரபரப்பை ஏற்படுத்தி அந்த செய்தி பாலிவுட் பத்திரிகையான சினிப்ளிட்சில் வந்தது.[6]

நடன வாழ்க்கை[தொகு]

1975 ஆகத்தில், தனது 26வது வயதில், ஒடிசி நடனக் கலை [7] இவரது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. பூலாபாய் நினைவு நிறுவனத்தில் இவர் தற்செயலாக சென்றபோது அங்கு இரண்டு இளம் நடனக் கலைஞர்கள் ஒடிசி நடன நிகழ்ச்சியை நிகழ்த்திக் கொண்டிருந்தனர். மிகவும் சிக்கலான தாளங்கள், வடிவங்கள் மற்றும் அதிநவீன கை-கண் பாவங்கள் அடங்கியதாக அது இருந்தது. இவர் இதற்கு முன்பு அறியாத இந்தக் கலை இவருக்கு ஒரு ஆர்வத்தை அளித்தது. இவர் குரு கேளுச்சரண மகோபாத்திராவின் மாணவியாக ஆனார். அவரிடமிருந்து ஒரு நாளைக்கு 12 முதல் 14 மணி நேரம் நடனக் கலையை கற்றுக் கொண்டார். மேலும் துவக்கநிலை மாணவியாக நிறைய சிரமங்களை எதிர்கொண்டார். இறுக்கமான கால்சட்டை, முதுகின் பெரும்பகுதியையும், தோள்பட்டையும் மறைக்காத மேல்சட்டையையும் அணிந்த நவநாகரீகப் பெண்ணாக இருந்த இவர், பின்னர் கௌரி அம்மா அல்லது கௌரி மா என தன் மாணவர்கள் அன்பாக அழைக்கப்படத்தக்கவாறு தன்னை மாற்றிக் கொண்டார்.[8]

நடனத்தை வாழ்க்கை முறையாக கொண்ட இவர், நன்கு கற்ற நிபுணர் என்பதை நிரூபித்தார். தனது நடனத்தை முழுமையாக்குவதற்காக, சென்னையின் குரு கலாநிதி நாராயணனிடமிருந்து அபிநயத்தின் நுணுக்கங்களை கற்கத் தொடங்கினார். அப்போதிருந்து, இவர் நாடு முழுவதும் நிகழ்ச்சிகளை வழங்கத் தொடங்கினார். அதே நேரத்தில், புரோதிமா மும்பையின் ஜூஹுவில் உள்ள பிருத்வி தியேட்டரில் தனது சொந்த நடனப் பள்ளியைத் தொடங்கினார். பின்னர் இது ஒடிசி நடன மையமாக மாறியது. 1978இல் கபீர் பேடியிலிருந்து பிரிந்த பிறகு, இவர் வாழ்கையில் ஒரு பிடிமானத்தைத் தேடிக்கொண்டிருந்தார். அதை இவர் தனது நடனத்தில் கண்டார்.

நிருத்தியாகிராமம்[தொகு]

பெங்களூரின் புறநகரில் அமைந்துள்ள நிருத்யாகிராமம், இந்தியாவின் முதல் இலவச நடன குருகுலம் ஆகும்.[9] இது பல்வேறு இந்திய செவ்வியல் நடனங்களுக்கான கிராமமாக மாறியது. இதில் ஏழு செவ்வியல் நடன பாணிகளுக்கு ஏழு குருகுலர்கள் மற்றும் இரண்டு தற்காப்பு கலை வடிவங்கள் பயிற்றுவிக்கப்பட்டன. இவற்றில் சாவ் நடனம் மற்றும் களரிப்பயிற்று ஆகியவை அடங்கும்.[10] குரு-சிஷ்ய பரம்பரையை சரியான வகையான சூழலில் புதுப்பிக்க இவர் விரும்பினார். நிருத்யாகிராமம் 1990 மே 11 அன்று அப்போதைய பிரதமர் வி. பி. சிங் அவர்களால் திறக்கப்பட்டது. இந்த நடனப் பள்ளியில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்துள்ள மாணவ சமூகம் உள்ளது. இவர்களின் ஒரு பொதுவான நோக்கமாக நடனம் உள்ளது. நிருத்யாகிராம் நடனக் குழு விரைவில் உலகம் முழுவதும் நடன நிகழ்ச்சிகளை நிகழ்த்தியது.[11] இதற்கிடையில், 1992 இல், இவர் பமீலா ரூக்ஸின் ஆங்கில திரைப்படமான மிஸ் பட்டீஸ் சில்ட்ரன் என்ற படத்தில் தோன்றினார்.

மாதிரி நடன கிராமமாக உருவாக்கப்பட்ட நிருத்யாகிராமம், சிறந்த கட்டிடக் கலைஞரான ஜெரார்ட் டா குன்ஹாவால் கட்டப்பட்டது. இது 1991 இல் சிறந்த கிராமிய கட்டிடக்கலை விருதை வென்றது. நிருத்யாகிராமத்தை நடத்துவதற்கு நிதி திரட்டுவதற்காக, குத்தேரம் என்ற சுற்றுலா விடுதி 1992 இல் கட்டப்பட்டது. 1994 ஆம் ஆண்டில் முதன்முதலில் தொடங்கப்பட்ட வசந்தா ஹப்பா (வசந்த விழா) என்ற வருடாந்திர நடன விழாவின் இடமாகவும் நிருத்யாகிராமம் உள்ளது. இது 2004 ஆம் ஆண்டில் கடைசியாக நடைபெற்றபோது 40,000 பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. 2004 ஆழிப்பேரலை சோகம் மற்றும் நிதி பற்றாக்குறை காரணங்களால் இது 2005-2007 வரை நடத்தப்படவில்லை.[12]

இறுதி ஆண்டுகள்[தொகு]

வட கரோலினாவில் படித்துக்கொண்டிருந்த புரோத்திமாவின் மகன் சித்தார்த் மனப்பித்து நோயால் பாதிக்கப்பட்டு 1997 சூலையில் தற்கொலை செய்து கொண்டார்.[13] இது இவரது வாழ்க்கையின் போக்கை தலைகீழாக புரட்டிப்போட்டது. 1998 ஆம் ஆண்டின் முற்பகுதியில், இவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து, தனது பெயரை புரோத்திமா கௌரி என்று மாற்றிக்கொண்டார். விரைவில் இவர் லேவிலிருந்து தொடங்கி இமயமலைப் பகுதியில் பயணம் செய்யத் தொடங்கினார்.[14] கும்பமேளாவின் போது 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிசிகேசில் தங்கி இருந்தபோது ஒரு செய்தித்தாள் நேர்காணலில், "நான் இமயமலைக்கு என்னை தந்துவிட முடிவு செய்துள்ளேன். மலைகளின் அழைப்புதான் என்னை அவைகளிடம் அழைத்துவந்தது. இதிலிருந்து எப்போது வெளிவருவேன் என்று யாருக்குத் தெரியும்? இது ஏதோ நல்லதாக இருக்க வேண்டும், " பின்னர், ஆகஸ்டில், புரோத்திமா கௌரி கைலாய மானசரோவருக்கு தனது பயணத்தைத் தொடங்கினார். அங்கு இமயமலையில் பித்தோராகர் அருகே,[15] மால்பா நிலச்சரிவுக்குப் பிறகு இவர் காணாமல் போனார். இவரது மிக நீடித்த சாதனையான வளர்ந்து வரும் நடன கிராமமான நிருத்யாகிராமம், இங்கு இந்தியாவின் செவ்வியல் நடனங்களை மாணவர்கள் தொடர்ந்து கற்றுவருகின்றனர். இந்தியா-நேபாள எல்லைக்கு அருகிலுள்ள மல்பா என்ற கிராமத்தில் நிலச்சரிவில் இவரது எச்சங்கள் உடமைகள் ஏழு நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டன.  

2000 ஆம் ஆண்டில் இவரது மகள் பூஜா பேடியால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட இவர் குறித்த பத்திரிகை தகவல்கள் மற்றும் கடிதங்களை அடிப்படையாகக் கொண்ட டைம்பாஸ் என்ற இவரது சுயசரிதையில், இவர் தனது அனைத்து உறவுகள், இவரது கலகத்தனமான வாழ்க்கை முறை, இவரது குடும்ப வாழ்க்கை, இவரது கனவு திட்டத்தின் தோற்றமான, நிருத்யாகிராமம், மற்றும் இவர் சன்யாசினியாக மாறியது, இவரது வாழ்க்கையின் முடிவில், இவர் பொது வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றதும், இமயமலையை ஆராய விரும்பியதும் குறிப்படப்பட்டிருந்தது.[16]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

புரோதிமா பேடி, தனது மாதிரி உருவக் கலை நாட்களில், கபீர் பேடியை சந்தித்தார். சில மாதங்களுக்குப் பிறகு, அவருடன் வாழ இவர் வீட்டை விட்டு வெளியேறினார். இது இவரது தனித்துவத்தின் வெளிப்பாட்டின் மற்றொரு அறிகுறியாகும், இது இவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. இவர் கபீரை மணந்து பூஜா பேடி மற்றும் சித்தார்த் பேடி என்ற இரண்டு பிள்ளைகளைப் பெற்றார்.  

குறிப்புகள்[தொகு]

 1. This Above All - She had a lust for life The Tribune, 5 February 2000.
 2. Obituary பரணிடப்பட்டது 2009-08-02 at the வந்தவழி இயந்திரம் India Today, 7 September 1998.
 3. Protima Gauri Bedi nrityagram.org.
 4. Dream Nrityagram.
 5. 5.0 5.1 Time Pass: The Memoirs of Protima Bedi, Introduction, pp. 1–2. Biographical info: "Early Years"
 6. Protima's interview on naked run பரணிடப்பட்டது 2006-03-06 at the வந்தவழி இயந்திரம் ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
 7. Protima Guari Interview Rediff.com, 22 August 1998.
 8. Bina Ramani Mourns...[தொடர்பிழந்த இணைப்பு] இந்தியன் எக்சுபிரசு, 22 September 1998.
 9. Nityagram profile பரணிடப்பட்டது 2008-05-16 at the வந்தவழி இயந்திரம் indoindians.com.
 10. Odissi Kala Kendra Contemporaries in Odissi.
 11. Dance in Review த நியூயார்க் டைம்ஸ், 22 June 1996.
 12. "Waiting for spring". The Hindu. 5 Mar 2007 இம் மூலத்தில் இருந்து 8 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121108051607/http://www.hindu.com/mp/2007/03/05/stories/2007030500920300.htm. 
 13. Interview Kabir Bedi பரணிடப்பட்டது 2009-06-26 at the வந்தவழி இயந்திரம் Filmfare October, 2001.
 14. Bowing Out பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம் இந்தியா டுடே, 27 April 1998.
 15. Obituary த நியூயார்க் டைம்ஸ், 30 August 1998.
 16. To Family and friends பரணிடப்பட்டது 2008-10-22 at the வந்தவழி இயந்திரம் Hindustan Times.

குறிப்புகள்[தொகு]

 • டைம் பாஸ்: பூஜா பேடி இப்ராஹிமுடன் புரோடிமா பேடியின் நினைவுகள் . புது தில்லி, பெங்குயின், 2000. ISBN 0-14-028880-5 ஐஎஸ்பிஎன்   0-14-028880-5 .

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோதிமா_பேடி&oldid=3766033" இருந்து மீள்விக்கப்பட்டது