லூயிசு சதுரங்கக் காய்கள்
![]() பிரித்தானிய அருங்காட்சியகத்தில் லூயிசு சதுரங்கக் காய்கள் | |
செய்பொருள் | கடற்பசுத் தந்தமும் திமிங்கிலப் பல்லும் |
---|---|
உருவாக்கம் | 12ம் நூற்றாண்டு |
கண்டுபிடிப்பு | Uig, Lewis, இசுக்காட்லாந்து, 1831 |
தற்போதைய இடம் |
லூயிசு சதுரங்கக் காய்கள் (Lewis chessmen) 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த 78 சதுரங்கக் காய்களைக் கொண்ட ஒரு தொகுதி ஆகும். இவற்றுடன் பிற விளையாட்டுகளுக்குரிய காய்கள் சிலவும் உள்ளன. இவற்றுட் பெரும்பாலானவை கடற்பசுத் தந்தத்தினால் ஆனது. இது 1831 ஆம் ஆண்டில் இசுக்கட்லாந்தில் உள்ள லூயிசுத் தீவில் கண்டுபிடிக்கப்பட்டது.[1] தப்பியிருக்கின்ற முழுமையான மிகக் குறைவான இடைக்கால சதுரங்கத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகலாம். பிரித்தானிய அருங்காட்சியகத்தில் 82 காய்களும், இசுக்காட்லாந்து தேசிய அருங்காட்சியகத்தில் 11 காய்களும் உள்ளன.
தோற்றம்[தொகு]
இது 12ம் நூற்றாண்டில், நோர்வேயில், டிரோன்டீமில் உள்ள கைப்பணியாளர்களால் உருவாக்கப்பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[2] சில ஆய்வாளர்கள் இது வேறொரு நார்டிக் நாட்டில் செய்யப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.[3] அக்காலப் பகுதியில், இது கண்டுபிடிக்கப்பட்ட பகுதி உட்பட முக்கிய இசுக்காட்டியத் தீவுகளின் கூட்டம் நோர்வேயின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.[2]
விபரங்கள்[தொகு]

மேல்: அரசன், அரசி, அமைச்சர்
நடு: குதிரை, யானை, காலாள்
கீழ்: அரசி கிட்டத் தோற்றம் (resin replicas)
இத்தொகுதியில் உள்ள காய்களுட் பெரும்பாலானவை கடற்பசுத் தந்தத்திலும், சில திமிங்கிலப் பற்களிலும் செதுக்கப்பட்டவை. இந்த 78[4] காய்களில் 8 அரசர், 8 அரசிகள், 16 அமைச்சர்கள், 15 குதிரைகள், 2 கோட்டைகள், 19 காலாட்கள் ஆகியவை அடங்குகின்றன. காலாட்காய்கள் 3.5 முதல் 5.8 சதம மீட்டர்கள் வரை உயரமானவை. ஏனையவை 7 சதம மீட்டருக்கும், 10.2 சதம மீட்டருக்கும் இடைப்பட்ட உயரம் கொண்டவை. ஒரு சதுரங்கத் தொகுதியில் 16 காலாட்கள் இருக்கும். இங்கே 19 காலாட் காய்கள் இருந்தாலும் அவை பல சதுரங்கத் தொகுதிகளுக்கு உரியவை. காய்களின் உயர வேறுபாடுகளைக் கொண்டு பார்க்கும்போது மொத்தமாக உள்ள 78 காய்களும் குறைந்தது ஐந்து தொகுதிகளைச் சேர்ந்தவை.[5] காலாட் காய்களைத் தவிர மற்ற எல்லாக் காய்களும் மனித உருவங்களாகும். காலாட் காய்கள் மட்டும் வடிவவியல் உருவங்கள். குதிரைப்படைக் காய்களில் குதிரைகள் சிறியனவாகக் காணப்படுகின்றன. அதில் அமர்ந்துள்ள பிரபுக்கள் ஈட்டிகளையும், கேடயங்களையும் தாங்கியுள்ளனர். யானை அல்லது கோட்டை எனப்படும் காய்கள் வாளும், கேடயமும் தாங்கிய வீரர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றுள் நான்கு காய்கள் போர் வெறியுடன் காணப்படும் "பர்சேர்க்கர்கள்" எனப்படும் "நோர்சு" போர்வீரர்களின் உருவங்கள்.[6] சில காய்களில் சிவப்பு நிறச் சாயத்தின் தடயங்கள் காணப்படுவதால், இவற்றில் இரண்டு பக்கங்களை வேறுபடுத்தச் சிவப்பு, வெள்ளை நிறங்கள் பயன்பட்டதாகத் தெரிகிறது.[7]
குறிப்புகள்[தொகு]
- ↑ "The enigma of the Lewis chessmen". Chessbase. 2010-11-09. http://www.chessbase.com/newsdetail.asp?newsid=6665. பார்த்த நாள்: 2013-08-15.
- ↑ 2.0 2.1 "The Lewis Chessmen". British Museum. http://www.britishmuseum.org/the_museum/news_and_press_releases/statements/the_lewis_chessmen.aspx. பார்த்த நாள்: 2013-08-15.
- ↑ Robinson, p. 14.
- ↑ 93 per BM now
- ↑ Robinson, p. 30.
- ↑ Robinson, pp. 28–29.
- ↑ McClain, Dylan Loeb (8 September 2010), Reopening History of Storied Norse Chessmen, New York Times, retrieved 14 September 2010 (appeared September 9, 2010 in the newspaper, page C2, New York Times)