சதகர்ணி (முதலாம் சாதகர்ணி எனவும் அழைக்கப்படுகிறார்., பிராமி எழுத்துமுறை: 𑀲𑀸𑀢𑀓𑀡𑀺, சாதகணி) என்பவர் இந்தியாவின் தக்கணப் பகுதியை ஆண்ட சாதவாகன அரசர்களில் மூன்றாமவராவார். இவரது ஆட்சிக்காலம் பொதுவாக கி.மு. 70-60 எனக் கொள்ளப்பட்டாலும்,[2] சில ஆய்வாளர்கள் இவரது ஆட்சிகாலம் கி.மு. 187-177 எனக் கருதுகின்றனர்.[3] அண்மையில், இவரது ஆட்சிக்காலம் கி.மு. 88-42 என நிர்ணயிக்கப்பட்டது.[4] சாதவாகன மரபில் இரு சதகர்ணிகள் இருந்ததாகக் கருதப் படுகிறது (முதலாம் மற்றும் இரண்டாம் சதகர்ணி). எனினும், இம் மரபில் ஒரேயொரு சதகர்ணி மட்டுமே இருந்ததாக வாதிடுகிறார். முதலாம் சதகர்ணி எனக் கருதப் படுபவர் பத்து ஆண்டுகளும் இரண்டாமவர் ஐம்பது ஆண்டுகளும் ஆட்சி புரிந்ததாகக் கூறப்படுகிறது. எனினும், சதகர்ணியினால் வெளியிடப்பட்ட ஒரே எழுத்துச் சான்றான கந்தன்கேதா முத்திரை இவரது ஆட்சியின் 30ம் ஆண்டில், கிட்டத்தட்ட கி.மு. 60 அளவில் வெளியிடப்பட்டுள்ளது. இவர் கி.மு. 88-42 வரை ஆட்சிபுரிந்துள்ளார்.[5][6]
புராணங்களின் படி, சாதவாகன மன்னனான சிமுகனின் பின் அவனது தம்பியான கிருட்டிணன் (கண்கன் எனவும் அறியப் படுகிறார்) ஆட்சிப் பொறுப்பேற்றார். மத்சய புராணத்தின் படி, கிருட்டிணனின் பின் மல்லகர்ணி ஆட்சிபீடமேறியுள்ளார். எனினும், ஏனைய புராணங்கள், கண்கனின் பின் சதகர்ணி ஆட்சிப்பொறுப்பேற்றதாகக் குறிப்பிடுகின்றன. நானேகத்திலுள்ள சதகர்ணியின் கல்வெட்டில் சதகர்ணி தனது குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிட்டுள்ளார். இதில் சிமுகனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளபோதும், கண்கனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதன் அடிப்படையில், பல்வேறு வரலாற்றாய்வாளர்களும், சதகர்ணி சிமுகனின் மகனெனவும், அவன் கிருட்டிணனுக்குப் பின் அரியணையேறினானெனவும் முடிவு செய்துள்ளனர். எனினும், G. V. ராவ் அவர்கள், அக் கல்வெட்டு வேறொரு மன்னனாகிய இரண்டாம் சதகர்ணியினுடையதெனக் கருதுகிறார். மேலும், சிமுகன், சாதவாகன மரபின் நிறுவனர் என்ற வகையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எண்ணுகிறார்.[7][8]
மத்சய புராணத்தின் படி, சதகர்ணியின் ஆட்சி 56 ஆண்டுகள் நீடித்துள்ளது.[9] இவன், மேற்கு மால்வாப்[9] பகுதியை சுங்கர்களிடமிருந்து[10] கைப்பற்றியிருந்ததாகக் கருதப்படுகிறது.
நானேகத் கல்வெட்டு. கி.மு. 70-60 காலப்பகுதிக்குரிய இக்கல்வெட்டில், அப்போதைய ஆளும் மன்னனாக முதலாம் சதகர்ணியும், அவனது அரசியாக நாகனிகாவும் குறிப்பிடப்பட்டுள்ளதோடு, சிமுகன் இவனது தந்தையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது போலத் தோன்றுகிறது.[11]
நானேகத் கல்வெட்டு முதலாம் சதகர்ணியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.[12] இக் கல்வெட்டின் படி, அம்கிய (அம்பிய) குடும்பத்தின் முதல் வாரிசாகிய மகாரதி திராணகாயிரோ கலாலயவின் மகளாகிய, நாயனிகா (நாகனிகா)வை மணம் புரிந்தான்.[8] இவள் நானேகத் கல்வெட்டைஉருவாக்கியுள்ளாள். இக் கல்வெட்டில், சதகர்ணியை இவள் " தக்சிணபாதத்தின் தலைவன், சோதிக்கப்படாத இறையாண்மை எனும் ஆழியைத் தாங்கியிருப்பவன்" என விவரித்துள்ளாள்.[9] நாகனிகாவின் நானேகத் கல்வெட்டு, சதகர்ணி தனது இறையாண்மையைப் பறைசாற்றும் விதமாக இரண்டு குதிரைப் பலிச் சடங்குகளை (அசுவமேதம்) நிகழ்த்தியதாகத் தெரிவிக்கிறது.[13]
கலிங்கத்து அரசனான காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு "சதகணி" அல்லது "சதகாமினி" எனும் மன்னனைப் பற்றிக் குறிப்பிடுகிறது. இவன் சதகர்ணி என்று அடையாளப்படுத்தப்படுகிறான். இக் கல்வெட்டு, ஒரு படையெடுப்பைப் பற்றியும், "மாசிக" (மாசிகநகர), "மூசிக" (மூசிகநகர) அல்லது "ஆசிக" (ஆசிகநகர) என்று பல்வேறு விதமாக அறியப்படும் ஒரு நகரத்தின் மீது காரவேலனின் அச்சுறுத்தல் பற்றியும் விவரிக்கின்றது. NK சாகு அவர்கள் ஆசிக என்பது அசுசக சனபதத்தின் தலைநகரெனக் கருதுகிறார்.[14]:127 வரலாற்றாய்வாளர் அசய் மித்ரா சாத்திரியின் கருத்துப்படி, ஆசிக-நகர என்பது நாக்பூர் மாவட்டத்திலுள்ள இன்றைய ஆதம் ஊரில் அமைந்திருந்தது. இங்கு அசுசக எனக் குறிப்பிடப்பட்ட முத்திரை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டது.[15][16]
அத்திக்கும்பாக் கல்வெட்டில் "சதகர்ணி" எனும் குறிப்பு.
"மேலும், இரண்டாவது ஆண்டில் (இவன்), சதகாமினியைப் பொருட்படுத்தாது, மேற்குப் பகுதிகளில், குதிரைப் படை, யானைப் படை, படைவீரர்கள் (நர) மற்றும் தேர்கள் (ரத) கொண்ட வலுவான படையை அனுப்பி கண்க-பெம்னா வரை முன்னேறினான். மூசிகர்களின் நகரைக் கலக்கத்தில் ஆழ்த்தினான்."
இக் கல்வெட்டில், ஆறு ஒன்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் ஆறு, கிருட்டிணா ஆறாகவோ அல்லது கண்கா-வயிங்கங்கா ஆறுகளின் இணைப்பு ஆறாகவோ இருக்கலாமெனக் கருதப்படுகிறது.[18]
இக் கல்வெட்டு பகுதியளவிலேயே சரியாக இருப்பதால், இக் கல்வெட்டில் காணப்படும் நிகழ்வுகள் தொடர்பில் ஆய்வாளர்கள் வெவ்வேறு விதமான கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர்.
K.P. செயசுவால் மற்றும் R. D. பானர்சி ஆகியோரின் கருத்துப்படி, காரவேலன் சதகர்ணியை எதிர்த்து ஒரு படையை அனுப்பியுள்ளான். காரவேலனின் படை கிருட்டிணா ஆறு வரையில் முன்னேறியதாகவும், கிருட்டிணா மற்றும் மூசி ஆறுகள் இணையுமிடத்துக்கருகில் (தற்கால நல்கொண்டாவுக்கருகில்) அமைந்துள்ள மூசிக நகரை அச்சுறுத்தியதாகவும் சைலேந்திர நாத் சேன் என்பவர் தெரிவிக்கிறார்.[19]
பகவான் லாலின் கருத்துப்படி, சதகர்ணி, காரவேலனால் தனது அரசு ஆக்கிரமிக்கப்படுவதைத் தவிர்க்க எண்ணியுள்ளான். எனவே, இவன் காரவேலனுக்குக் கப்பமாக குதிரைகள், யானைகள் மற்றும் வீரர்களை அனுப்பியுள்ளான். அதே ஆண்டில், மாசிக நகரை காரவேலன், குசும்ப சத்திரியர்களின் துணை கொண்டு கைப்பற்றியுள்ளான்..[20]
காரவேலனின் படை சதகர்ணிக்கு எதிராகப் படையெடுத்து முன்னேற முடியாது தோல்வியடைந்ததாகவும், எனவே அப்படை வழி திரும்பி ஆசிக (ஆசிகநகர) நகரை அச்சுறுத்தியதாகவும் சுதாகர் சட்டோபாத்தியா கருதுகிறார்.[13]
காரவேலன் சதகர்ணியுடன் நட்புப் பூண்டிருந்ததாகவும், காரவேலனின் படை எந்தப் போரும் இன்றி சதகர்ணியின் அரசுப் பகுதிகளைக் கடந்ததாகவும் அலெய்ன் தானியேலோ அவர்கள் கருதுகிறார்.[21]
இவனுக்குப் பின், இவனது இளவயது மகன்களான வேதசிறி (கந்தசிறி அல்லது இசுக்கந்தசிறி) மற்றும் சக்தி-சிறி (சதி சிறிமத) அல்லது அகு-சிறி ஆகிய இருவரும் தமது தாயாகிய நாயனிகாவை அரசப் பிரதிநிதியாகக் கொண்டு அரியணை ஏறினர்.[8]
↑Ollet, Andrew, (2017). Language of the Snakes: Prakrit, Sanskrit, and the Language Order of Premodern India, University of California Press, Okland, Table 2, (Appendix A), p. 189.
↑Ollett, Andrew, (2017). Language of the Snakes: Prakrit, Sanskrit, and the Language Order of Premodern India, University of California Press, Okland, footnote 5, p. 190 and p. 195.