மீனியல்
விலங்கியல் |
விலங்கியலின் கிளைகள் |
மானிடவியல் · |
குறிப்பிடத்தக்க விலங்கியலாளர் |
ஜார்ஜஸ் கவியர் · சார்லசு டார்வின் |
வரலாறு |
மீனியல் (Ichthyology) விலங்கியலின் ஒரு கிளைத்துறை ஆகும். இது மீன்களைப் பற்றி ஆய்வு செய்கின்றது. பெரும்பாலான மீனினங்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டு இருந்தாலும், ஆண்டுதோறும் புதிதாக விவரிக்கப்படுகின்றன. "ஃபிஷ் பேஸ்" அமைப்பின் தகவலின்படி, ஏப்ரல் 2009 வரை, 31,200 இனங்கள் விவரிக்கப்பட்டுள்ளன,[1] முதுகுநாணிகள், பாலூட்டிகள், ஈரூடகவாழிகள், ஊர்வன, பறவைகள் ஆகிய அனைத்தையும் சேர்த்தால் கிடைக்கும் எண்ணிக்கையிலும், மீனினங்கள் கூடிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
மீனியலானது, கடல்சார் உயிரியல், ஏரியியல், மீன்பிடி அறிவியல் போன்ற துறைகளோடு தொடர்புடையது.
வரலாறு
[தொகு]மீன்கள் பற்றிய ஆய்வு, மேல் பழையகற்காலத்திலேயே தொடங்கிவிட்டது. மீனியல் என்னும் அறிவியல், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பல காலகட்டங்களின் ஊடாக வளர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறுபட்ட குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
மீனியல் தொடர்பான முதலாவது அறிவியல் அடிப்படையிலான கவனிப்புகளைச் செய்தவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பியரி பெலோன் என்பவராவார். இவருடன் இதே நூற்றாண்டைச் சேர்ந்த இப்போலிட்டோ சல்வியானா, குலீல்மசு ரொன்டலே ஆகியோரும் இதுபோன்ற கவனிப்புக்களைச் செய்து நூல்களை எழுதியுள்ளனர். 17 ஆம் நூற்றாண்டில் குலீல்மசு பிசோ, சார்ச் மர்க்கிராவ், பிரின்சு மாரிட்சு ஆகியோரும் பிரேசிலில் கள ஆய்வுகளைச் செய்து மீன்கள் பற்றிய அறிவியல் சார்ந்த தகவல்களைத் திடட்டினர். இந் நூற்றாண்டில் சான் ரே, பிரான்சிசு விலீக்பி ஆகியோரும் மீனியல் தொடர்பில் பங்களிப்புக்களைச் செய்துள்ளனர். இக் காலத்தில் மீனியல் துறை சிறந்து விளங்கியது.
18 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவரான பீட்டர் ஆர்ட்டெடி என்பாருடைய ஆய்வுகள் மீனியல் துறையில் மிகவும் முக்கியமானவை. இதனால் சிலர் இவரை மீனியலின் தந்தை எனவும் அழைப்பதுண்டு. இவரும் அறிவியல் வகைப்பாட்டின் தந்தை எனப்படுபவரான கார்ல் லின்னேயசும், 1728 ஆம் ஆண்டு உப்சலா பல்கலைக் கழகத்தில் சந்தித்து நண்பர்களாயினர். 1735 ஆம் ஆண்டில் ஆர்ட்டேடி இறந்த பின்னர், அவர் எழுதிய ஆக்கங்களை லின்னேயசு பதிப்பித்தார். இவ்விருவரும் மீனியல் துறைக்குச் செய்த பங்களிப்புக்களைத் தொடர்ந்து, ஓட்டோ ஃபப்ரிகசு, பெட்ரசு ஃபோர்சுக்கால், பெட்ரசு பல்லாசு, அன்டியன் ரிசோ, தாமசு பெனான்ட், நில்கெல்ம் ஜி. திலேசியசு, சார்ச் வில்கெல்ம் இசுட்டெல்லர் போன்ற பலர் மீனியல் துறையின் வளர்ச்சிக்குத் தமது பங்களிப்புக்களை வழங்கியுள்ளனர்.
குறிப்புகள்
[தொகு]- ↑ ஃபிஷ் பேஸ் April 2009 Update. Retrieved 23 May 2009.
வெளியிணைப்புக்கள்
[தொகு]- பிரையன் கோட்டின் மீனியல் அகரமுதலி
- மீனியல் தொடர்பிலான இணைய வளங்கள் பரணிடப்பட்டது 2006-07-13 at the வந்தவழி இயந்திரம்
- மீனியலாளர் பட்டியல் பரணிடப்பட்டது 2012-02-26 at the வந்தவழி இயந்திரம்