மினாஸ் ஜெரைஸ் (Minas Gerais, போர்ச்சுகீசிய உச்சரிப்பு : [ˈminɐz ʒeˈɾajs]) பிரேசிலின் 26 மாநிலங்களில் ஒன்றாகும். மக்கட்தொகைப்படி நாட்டின் இரண்டாவது மாநிலமாகவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றாவதாகவும் பரப்பளவில் நான்காவதாகவும் விளங்குகிறது. இதன் தலைநகரமும் பெரிய நகரமுமான பெலோ அரிசாஞ்ச் இலத்தீன் அமெரிக்காவிலேயே முதன்மையான ஊரக மற்றும் நிதிய மையமாக விளங்குகிறது. மேலும் இந்நகரம் சாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ, சவ்வாதோர், பிரசிலியா மற்றும் போர்த்தலேசாவை அடுத்து ஆறாவது மிகப்பெரிய ஊரககுடியிருப்புத் தொகுதியாக உள்ளது. 5,500,000 மக்கள் வாழும் பெருநகர் பகுதிசாவோ பாவுலோ, இரியோ டி செனீரோ நகரங்களை அடுத்து மூன்றாவதாக உள்ளது.[2] பெலோ அரிசாஞ்ச்சில் பிறந்த பிரேசிலின் தற்போதைய தலைவர் டில்மா ரூசெஃப் உட்பட பிரேசிலின் பெரும்பாலான குடியரசுத் தலைவர்கள் இந்த மாநிலத்தில் இருந்து தான் வந்துள்ளனர்.
586,528 சதுர கிலோமீட்டர்கள் (226,460 sq mi) பரப்பளவுள்ள இந்த மாநிலம் பிரேசிலின் நான்காவது பெரிய மாநிலபாக உள்ளது. காப்பி மற்றும் பால் (பானம்) தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் மரபார்ந்த கட்டிடக்கலை மற்றும் குடியேற்றவாதகலைகளின் உறைவிடமான பல வரலாற்றுச் சிறப்பு மிக்க நகரங்கள் இம்மாநிலத்தில் அமைந்துள்ளன.