மாண்டே மொழிகள்
மாண்டே மேற்கு சூடானியம்
| ||
---|---|---|
இனம் | மாண்டே மக்கள் | |
புவியியல் பரம்பல்: |
மேற்கு ஆப்பிரிக்கா | |
மொழி வகைப்பாடு: | நைகர்-கொங்கோ? மாண்டே | |
துணைப்பிரிவு: |
மாண்டிங்-இக்பேல்லே (நடு, தென்மேற்கு)
சமோகோ–சோனின்கே (வடமேற்கு)
டான்–பூசா (கிழக்கு)
| |
ISO 639-5: | dmn |
மாண்டே மொழிகள் என்பது, மேற்கு ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் பேசப்படும் பல்வேறு மொழிகளை ஒருங்கே குறிக்கிறது. மான்டின்கா, சோனின்கே, பம்பாரா, தியோவுலா, போசொ, மென்டே, சுசு, வாய் போன்ற பல்வேறு இனக்குழுக்களை உள்ளடக்கிய மாண்டே இனக்குழுக் குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். புர்க்கினா பாசோ, மாலி, செனகல், கம்பியா, கினியா, கினி-பிசாவு, சியேரா லியோனி, லைபீரியா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் இம்மொழிகளைப் பேசுவோர் மில்லியன் கணக்கில் உள்ளனர். மாண்டே மொழிகள், நைகர்-கொங்கோ மொழிக்குடும்பத்தின் ஒரு கிளை எனவே கருதப்பட்டு வருகிறது. எனினும் இவ்வகைப்பாடு எப்போதும் சர்ச்சைக்கு உரியதாகவே இருந்து வருகிறது.
வரலாறு
[தொகு]மாண்டே மொழிகளின் வயது குறித்துப் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. மாண்டே மொழிகள் நைகர்-கொங்கோ மொழி குடும்பத்தின் ஒரு கிளை எனும் கருத்துக்கொண்ட கிரீன்பர்க் என்பவர், தற்காலத்துக்கு முன் 7000 காலப்பகுதியிலேயே மாண்டே மொழிகள், பிரியத் தொடங்கிவிட்டதாகக் கூறுகிறார். இம்மொழியைப் பேசியோர் புதிய கற்காலப் பண்பாட்டுக்கு உரியவர்களாக இருந்தனர். "பசு", "ஆடு", "பயிர்" செய்தல் போன்றவற்றுக்குரிய மாண்டேச் சொற்கள் இதனைக் குறித்துக் காட்டுகின்றன.[1]
வகைப்பாடு
[தொகு]பெரும்பாலான நைகர்-கொங்கோ மொழிகளுடைய உருபனியல் இயல்புகள் சில மாண்டே மொழிகளில் காணப்படவில்லை. இவ்வாறான இயல்புகள் உருவாவதற்கு முந்திய காலத்திலேயே மாண்டே மொழிகள் பிரிந்து விட்டதாலேயே இவ்வாறு ஏற்பட்டிருக்கக்கூடும் என பிளெஞ்ச் என்பவர் விளக்குகிறார். துவ்யர் என்பார், மாண்டே மொழிகளைப் பிற நைகர்-கொங்கோ கிளைகளுடன் ஒப்பிட்டு, மாண்டே மொழிகள் கூடிய அளவுக்குப் பிற கிளைகளிலிருந்து விலகிக் காணப்பட்டாலும், அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையே என்கிறார். டிம்மென்டால் என்பவர், மாண்டே மொழிகள், நைகர்-கொங்கோவின் கிளையாக இருப்பதற்குரிய சான்றுகள் மிகக் குறைவே எனக் கூறுவதுடன், இதை ஒரு தனிக் குடும்பமாகக் கொள்வதே பொருத்தம் என்கிறார்.[2]