உள்ளடக்கத்துக்குச் செல்

மலபாரிக்கா சாம்பல் தலை மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலபாரிக்கா சாம்பல் தலை மைனா (அறிவியல் பெயர்: Sturnia malabarica malabarica) என்பது சாம்பல் தலை மைனாவின் துணையினம் ஆகும்.[1] இப்பறவை இந்தியா (தென்மேற்கு, வடகிழக்கு தவிர), தெற்கு நேபாளம் மற்றும் வங்கதேசம் ஆகிய பகுதிகளில் காணப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

மலபாரிக்கா சாம்பல் தலை மைனா மைனாவைவிடச் சற்று சிறியதாகவும், மெலிந்தும் சுமார் 20 செ. மீ. நீளமுள்ளதாக இருக்கும். இப்பறவையின் அலகின் அடிப்பகுதி நீலமாகவும் நடுப்பகுதி பச்சையாகவும் முனை மஞ்சளாகவும் இருக்கும். விழிப்படலம் வெளிர் நீலநிறத்திலும், கால்கள் பழுப்புத் தோய்ந்த மஞ்சள் நிறத்திலும் இருக்கும். இதன் நெற்றியும் தொண்டையும் வெண்மையாக இருக்கும். உடலின் மேற்பகுதி சாம்பல் நிறமாகவும், தலை, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றில் வெண்மையான கோடுகள் காணப்படும். இறக்கைகள் கறுப்புத் தோய்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். வால் கறுப்பாகச் செம்பழுப்பு முனையோடு இருக்கும். உடலின் அடிப்பகுதி சிவப்புத் தோய்ந்த மஞ்சள் பழுப்பாக இருக்கும். வயதான பறவைகளின் நிறம் சற்று வேறுபட்டுக் காணப்படும். பால் ஈருருமை இல்லை.[2]

பரவலும் வாழிடமும்

[தொகு]

இப்பறவைத் துணையினம் குஜராத்தின் பூஜ்ஜிலிருந்து வட கிழக்காக சண்டிகருக்குத் தெற்கேயுள்ள இந்தியாவின் பெரும்பகுதி, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து கிழக்காக நேப்பாளம் வழியாக பூட்டான், வடகிழக்கு அருணாச்சலப் பிரதேசத்தின் மிசுமி மலைகள், வடக்கு அசாம் வரை, தெற்கே ஒடிசா வரை காணப்படுகின்றது. குளிர் காலத்தில் தென்னிந்தியாவுக்கு வலசை வருகின்றன. குளிர் காலத்தில் தென்னிந்தியா முழுவதும் ஆங்காங்கே காணப்பட்டாலும் குறிப்பாக கேரளத்தில் காணப்படுகிறது.[2]

நடத்தை

[தொகு]

இப்பறவை ஐந்து முதல் இருபது வரையிலான சிறு கூட்டமாக பிற மைனாக்களோடு பெரும்பாலும் மரங்களில் உயரவே திரியக் காணலாம். இவை மைனாவைப் போல தரையில் மேய்வது இல்லை. இலந்தை லாண்டனா ஆகியவற்றின் பழங்களும் மலர்த் தேனும் இதன் முதன்மை உணவாகும். இவை வட இந்தியாவில் இனப்பெருக்கம் செய்கின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (July 2023). "Nuthatches, Wallcreeper, treecreepers, mockingbirds, starlings, oxpeckers". IOC World Bird List Version 13.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
  2. 2.0 2.1 2.2 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. p. 364.