பொரித்தல்
பொரித்தல் என்பது ஒரு வகைச் சமையல் முறை. எண்ணெய் அல்லது கொழுப்பைச் சூடாக்கி அதற்குள் உணவுப் பொருளை இட்டுச் சமைப்பதே பொரித்தல் எனப்படுகிறது. பல வகையான உணவுப் பொருட்களில் பொரித்தல் முக்கிய இடம் பெறுகிறது. பொரித்த உணவு வகைகள் சுவையானவை. ஆனால், எண்ணெய், கொழுப்பு என்பன, சிறப்பாகச் சூடாக்கப்பட்ட எண்ணெய், கொழுப்புப் போன்றவை உடல் நலத்துக்குக் கேடானவை என்பதால், தற்காலத்தில், பொரித்த உணவுகளைப் பலரும் குறைவாகவே உட்கொள்ளுகின்றனர். பொரித்து உணவு ஆக்கும் வழக்கம் கி.மு.2500 காலப் பகுதியிலேயே எகிப்தில் இருந்ததாகத் தெரிகிறது.[1]
பொரித்தல் முறைகள்
[தொகு]சமையலில் பல்வேறு வகையான பொரித்தல் முறைகள் உள்ளன. பொரிக்கும் பண்டம் முற்றாக எண்ணெயில் அமிழக் கூடிய வகையில் எண்ணெய் விட்டுப் பொரிப்பது ஒரு வகை. ஆழம் குறைவான பாத்திரத்தில் குறைவான எண்ணெய் விட்டுப் பொரிப்பது இன்னொரு வகை. பொரிக்கும் உணவுப் பொருளைப் பொறுத்து அடுப்பின் சுவாலையைக் குறைத்து நீண்ட நேரம் பொரிய விடுவதும், முழுச் சுவாலையில் வேகமாகப் பொரிய விடுவதும் உண்டு. பொரிக்கும் பொருள் பெரிய துண்டுகளாக இருக்கும்போதோ அல்லது வேகுவதற்கு நீண்ட நேரம் எடுக்கக்கூடியது என்றாலோ, முழுச் சுவாலையில் பொரிக்கும்போது உட்புறம் வேகு முன்பே வெளிப்புறம் தீய்ந்துவிடக்கூடிய வாய்ப்பு உள்ளது.
தமிழர் உணவில் பொரித்தல்
[தொகு]தமிழரின் முதன்மை உணவுகளில் பொரித்தல் குறைவாகவே காணப்படுகிறது. முதன்மை உணவுகளுடன் உட்கொள்ளக்கூடிய கறிகள் பலவற்றில் பொரித்தல் ஒரு பகுதியாக இடம்பெறுவது உண்டு. சிலவகைக் காய்கறிகளைப் பொரித்துக் குழம்பு சமைப்பது உண்டு. தவிரத் தமிழர் உணவில் பொரித்துச் சமைக்கப்படும் பொரியல்கள் இடம்பெறுகின்றன. அப்பளம், வாழைக்காய்ப் பொரியல், பலவகைக் கிழங்குப் பொரியல்கள் போன்றவையும், மீன் பொரியல், இறைச்சிப் பொரியல், முட்டைப் பொரியல் போன்றவையும் தமிழர் உணவில் இடம்பெறக்கூடிய பொரித்த உணவு வகைகள். அத்துடன், பல சிற்றுண்டி வகைகளில் பொரித்தல் முக்கியமானது. வடை, முறுக்கு வகைகள், அதிரசம், ஓமப்பொடி போன்றவை பொரித்த சிற்றுண்டிகள்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Tannahill, Reay. (1995). Food in History. Three Rivers Press. p. 75