பிரான்சிஸ்கோ கோயா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சிஸ்கோ கோயா
Francisco Goya
கோயா தன்னைத்தானே வரைந்தது.
தேசியம்ஸ்பானியர்
அறியப்படுவதுஓவியம், அச்சாக்கம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்La maja desnuda, 1800
La maja vestida, 1803

The Second of May 1808, 1814
The Third of May 1808, 1814

La familia de Carlos IV, 1798
பிரான்சிசுக்கோ கோயா வரைந்த எண்ணெய் ஓவியம்-1794

பிரான்சிசுகோ யோசு டி கோயா ஒய் லூசியெண்டசு சுருக்கமாக பிரான்சிசுகோ கோயா (Francisco Goya,) என்றழைக்கப்படுகிறார். மார்ச் 30, 1746 - ஏப்ரல் 16, 1828 வரையிலான காலத்தில் இவர் எசுபானியாவின் கலை இலக்கிய அறிவுசார் இலக்கியத்தின் ஓவியராகவும், அச்சு மூலம் ஓவியத்தை உருவாக்கும் அச்சோவியராகவும் இருந்தார். இவர் 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த மிக முக்கியமான எசுப்பானியக் கலைஞராகக் கருதப்படுகிறார், மேலும், வாழ்க்கை முழுவதும் ஒரு வர்ணனையாளராகவும் வரலாற்றாளராகவும் நீண்ட காலத்திற்கு இருந்தார். தனது வாழ்நாளில் மிகப்பல வெற்றிகளைப் பெற்ற கோயா பழைய தலைமுறை ஓவியர்களில் கடைசியானவராகக் கருதப்பட்ட அதே வேளை நவீன ஓவியர் தலைமுறையின் முன்னோடிகளுள் ஒருவராகவும் கருதப்படுகிறார். இவருடைய ஓவியங்களில் காணப்பட்ட மறைமுக, தற்சார்புத் தன்மை (subjective) கொண்ட கூறுகளும், நிறப்பூச்சுக்களை இவர் துணிவுடன் கையாண்ட விதமும் இவருக்குப் பின்வந்த தலைமுறை ஓவியர்களுக்கு எடுத்துக் காட்டுகளாக அமைந்தன. அவர் நவீன காலத்தின் மிகச்சிறந்த உருவப்படம் வரைபவர்களில் ஒருவராகவும் இருந்தார் [1].

1746 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள அரகோன் பகுதியில் உள்ள பியூவண்டெடொடோசு நகராட்சியில் ஒரு சிறிய குடும்பத்தில் கோயா பிறந்தார். அவர் யோசு லுசான் ஒய் மார்டினெசிடன் 14 வயதில் இருந்து ஓவியம் வரையக் கற்றுக் கொண்டார். பின்னர் அன்டன் ரபேல் மெங்சுவிடன் பயில்வதற்காக மாட்ரிட்டிற்கு சென்றார். 1773 இல் யோசபா பேயுவை கோயா மணந்தார்; இருவரது வாழ்விலும் கிட்டத்தட்ட தொடர்ச்சியான கருத்தரிப்புகள் மற்றும் கருச்சிதைவுகள் நிகழ்ந்தன. கோயா 1786 ஆம் ஆண்டில் எசுபானிய அரசவையில் ஓர் அரச ஓவியராக ஆனார். அவரது தொழில் வாழ்க்கையின் இந்த ஆரம்ப பகுதியில் எசுபானிய பிரபுத்துவம் மற்றும் அரசகுடும்ப ஓவியங்கள் வரையப்பட்டன. மற்றும் ராக்கோகோ பாணியிலான படங்கள் அரண்மனைக்காக உருவாக்கப்பட்டன.

கோயா பாதுகாக்கப்பட்ட ஒரு நபராக இருந்தார், இவருடைய கடிதங்களும் எழுத்துக்களும் காப்பாற்றப்பட்டாலும் இவருடைய எண்ணங்களைப் பற்றி அதிகம் அறியப்படவில்லை. அவர் 1793 ஆம் ஆண்டில் கடுமையான மற்றும் நோய் அறிகுறியற்ற ஒரு நோயால் பாதிக்கப்பட்டார், அதனால் அவருடைய காதுகள் பாதிக்கப்பட்டு முற்றிலும் கேட்கும் சக்தியை இழந்தார். 1793 க்குப் பிறகு அவரது ஓவியங்களில் இருண்மையும் அவநம்பிக்கைக்கும் ஆளானது. கோயாவின் பிற்கால வரைபட ஒவியங்கள், சுவர் ஓவியங்கள், அச்சோவியங்கள் யாவும் தனிப்பட்ட, சமூக மற்றும் அரசியல் மட்டங்களில் ஒரு இருண்ட பார்வையை பிரதிபலித்தன. மாறாக அவரது சமூகநிலையின் ஏற்றம் வேறுபட்டது. பிரான்சுடன் மானுவல் கோடாய் ஒரு சாதகமற்ற ஒப்பந்தத்தை செய்த ஆண்டான 1795 ஆம் ஆண்டில் ராயல் அகாடமியின் இயக்குநராக கோயா நியமிக்கப்பட்டார், 1799 இல் கோயா எசுபானியாவின் மிகவுயர்ந்த அரசவை ஓவியர் விருதைப் பெற்றார். 1790 களின் பிற்பகுதியில், கோடாய் ஆணையிட்டதைத் தொடர்ந்து மிகச்சிறந்த ஓவியமான தனது லா மயா டென்நூடாவை வரைந்து முடித்தார். 1801 இல் எசுபானியாவின் நான்காம் சார்லசு மற்றும் அவரது குடும்பத்தை ஓவியமாகத் தீட்டினார்.

1807 ஆம் ஆண்டில் நெப்போலியன் பிரெஞ்சு இராணுவத்தை எசுபானியாவுக்குள் கொண்டு வந்தார். தீபகற்ப போரின் போது கோயா மாட்ரிட்டில் இருந்தார், இது அவரை ஆழமாக பாதித்திருப்பதாக தோன்றுகிறது. பொதுமக்களிடம் தனது எண்ணங்களை கோயா பேசவில்லை என்றாலும், அவரது இறப்புக்குப் பின் 35 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட போர் பேரழிவுகள் வரிசையில் அவரது 1814 ஓவியங்கள் தி செகண்டு ஆப் மே 1808 மற்றும் தி தேர்டு ஆம் மே 1808 போன்ற ஓவியங்களிலிருந்து உய்த்துணரலாம். காப்ரிச்சோசு மற்றும் லாஸ் டிசுபெரேட்சு செதுக்கல் தொடர்கள் மற்றும் பித்துநிலை, மனநலக் காப்பகங்கள், மந்திரவாதிகள், அற்புதமான உயிரினங்கள் மற்றும் சமய மற்றும் அரசியல் ஊழல்கள் ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட பலவிதமான ஓவியங்கள் போன்ற கோயாவின் இடைக்காலப் படைப்புகள் நாட்டின் விதி மற்றும் அவரது சொந்த மன மற்றும் உடல் ஆரோக்கியம் ஆகியவை குறித்து கவலை கொண்டன.

1819-1823 ஆம் ஆண்டுகளில் கருப்பு ஓவியங்கள் என்ற பெயரில் கோயா வரைந்த 14 ஓவியங்கள் இவரை உச்சத்திற்கு கொண்டு சென்றன. செவிட்டு மனிதனின் வீடு என்ற பொருள் கொண்ட "குய்ன்டா டெல் சர்டோவின் சுவர்களில் எண்ணெய் ஓவியங்களாக இவை வரையப்பட்டன. எசுபானியாவின் அரசியல் மற்றும் சமூக முன்னேற்ற மாயைகளிலிருந்து விடுபட்டு இங்கு அவர் தனிமையில் வாழ்ந்தார். இறுதியில் கோயா 1824 ஆம் ஆண்டில் எசுபானியாவின் போர்ட்டோக்சு நகரத்திற்கு தனது இளைய வேலைக்காரியும் தோழியுமான லியோக்கியா வெயிசுடன் ஓய்வு பெற்றார். இவர் கோயாவின் காதலியாகவும் இருக்கலாம். அங்கு அவர் தனது "லா டாரோமோகியா" தொடர் ஓவியங்களையும் மற்றும் பல முக்கிய ஓவியங்களையும் வரைந்தார். பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட கோயாவுக்கு உடலின் வலது பக்கம் முடங்கிப் போனது. பார்வையும் மங்கிப் போனது. ஓவியம் தீட்டும் பொருட்களை பார்க்கவும் அவற்றைப் பயன்படுத்தவும் இயலாமல் போயிற்று. 82 வயதில் கோயா 1628 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 அன்று இறந்தார்.

இளமைக்காலம்[தொகு]

பிரான்சிசுக்கோ கோயா பிறந்த வீடு- பியூவண்டெடொடோசு

1746 ஆம் ஆண்டில் எசுப்பானியாவிலுள்ள அரகோன் பகுதியில் உள்ள பியூவண்டெடொடோசு நகராட்சியில் ஒரு சிறிய குடும்பத்தில் கோயா பிறந்தார். யோசு பெனிட்டோ டி கோயாவும் கிரேசியா டி லூசியெண்டசும் இவருடைய பெற்றோர்களாவர். இவர் தனது இளமைக் காலத்தில் பியூவண்டெடொடோசில் உள்ள தனது தாயாரின் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். இவரது தந்தையார் தங்க முலாம் பூசும் தொழில் புரிந்து வந்தார். 1749 ஆம் ஆண்டளவில் சரகோசா என்னும் நகரில் ஒரு வீட்டை வாங்கிய இவரது குடும்பத்தினர் சில காலத்தின் பின் அங்கே குடிபுகுந்தனர். குடும்பம் இடம்பெயர்வதற்கான காரணம் ஏதும் தெரியவில்லை. ஒருவேளை அவரது தந்தையின் பணி நிமித்தமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது [2]. குறைந்த வருவாய் கொண்டஒரு நடுத்தர வர்க்கமாக அவர்கள் குடும்பம் இருந்தது. இருந்தனர். யோசு ஒரு பாசுக்கு இன வழக்கறிஞரின் மகனாக இருந்தார். அவருடைய மூதாதையர் செரைன் நகராட்சியிலிருந்து வந்தவர்களாவர் [3]. மதம் சார்ந்த அலங்கார கைவினைப் பணியில் பொருள் ஈட்டுவதே இவர்களுக்கு வாழ்க்கைக்கான ஆதாரமாகும் [4]. மிகவும் புகழ்மிக்க உரோமன் கத்தோலிக்க ஆலயங்களில் ஒன்றான சர்கோசாவின் தூண் அன்னை பசிலிக்கா [5] பேராலயம் மறுசீரமைப்பு செய்யப்பட்டபோது அலங்கார வேலைப்பாட்டின் பெரும்பகுதியை மேற்பார்வை செய்தார். பிரான்சிசுக்கோ அவருடைய பெற்றோர்களுக்கு நான்காவது குழந்தையாக பிறந்தார். அக்கா ரீட்டா 1737 ஆம் ஆண்டிலும், அண்ணன் தாமசு 1739 ஆம் ஆண்டிலும், இரண்டாவது அக்கா யசிந்தா 1743 ஆம் ஆண்டிலும் பிறந்துள்ளனர். இவ்ருக்கு அடுத்ததாக மரியானோ 1750 ஆம் ஆண்டிலும் கெமிலோ 1753 ஆம் ஆண்டிலும் பிறந்துள்ளனர் [6].

அவரது தாயின் குடும்பத்தினர் உயர்குடிப் பிரபுக்களாக இருந்தனர். அவர்களின் வீடு ஒரு சாதாரண செங்கல் குடிசையால் ஆனதாகும். சித்திர வேலைப்பாடு கொண்ட உச்சியைக் கொண்ட அவ்வீட்டை அவருடைய குடும்பத்தினர் சொந்தமாகக் கொண்டிருந்தனர் [7]. சுமார் 1749 ஆம் ஆண்டில் யோசும் கிரேசியாவும் சர்கோசாவில் ஒரு வீட்டை வாங்கி நகரத்தில் வசிக்கத் தொடங்கினர். கோயா அங்கு வாழ்ந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. அங்கே எசுக்கியுவெலாசு பியாசு என்னும் இடத்திலுள்ள இலவசப் பள்ளியில் பயின்றது காரணமாக இருக்கலாம். அவருடைய கல்வித்திறன் போதுமானதாய் இருந்த போதிலும் பிரகாசிப்பதாய் இருக்கவில்லை. வாசித்தல், எழுதுதல் மற்றும் கணக்கிடுதல் மற்றும் கொஞ்சம் இலக்கியம் பற்றிய அறிவைக் கொண்டிருந்தார். ஓவியம் செதுக்குகின்ற ஒரு தச்சர் என்ற நிலையை தாண்டி தத்துவவியலிலோ அல்லது இறையியலிலோ இந்த கலைஞனின் மனம் ஈடுபடவில்லை என்று இராபர்ட் இயூசு கருத்துத் தெரிவிக்கிறார். கோயா எந்தவிதமான கோட்பாட்டளரும் இல்லை [8]. பள்ளிக்கூடத்தில் இவர் மார்ட்டின் சப்பேட்டர் என்பவருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். இவருடன் கோயா பல ஆண்டுகளாகக் கொண்டிருந்த கடிதப் போக்குவரத்துக்கள் கோயாவின் வரலாற்றை எழுதுவதற்கான பெறுமதி மிக்க சான்றுகளாகத் திகழ்கின்றன.

இத்தாலிக்கு வருகை[தொகு]

14 ஆவது வயதில் கோயா, யோசு லூசான் என்னும் ஓவியரிடன் தொழில் பயிலுனராகச் சேர்ந்தார். சுயமாகப் பணியாற்றுவது என்ற எண்னம் தொன்றும் வரை நான்கு வருடங்கள் இவருடனேயே இருந்தார் என பிற்காலத்தில் இவருடைய நூலில் குறிப்பிட்டுள்ளார் [9]. இவர் பின்னர் மாட்ரிட்டுக்குச் சென்று அங்கே ஓவியம் பயின்றார். எசுபானிய அரச குடும்பத்தினரின் விருப்பத்துக்குரியவரான அன்டன் ராபேல் மெங்சு என்னும் ஓவியரும் இவருடன் ஒன்றாகப் படித்தார். கோயா தனது ஆசிரியருடன் நல்லுறவு கொண்டிருக்கவில்லை, பரீட்சையிலும் போதுமான அளவு வெற்றிபெறவில்லை. உயர் கல்விக்காக 1763 மற்றும் 1766 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பித்து அவரால் வெற்றிபெற இயலவில்லை [10].

பார்சிலோனாவில் உள்ள கோயாவின் 1771 ஒவியம்

அந்த நேரத்தில் ரோம் ஐரோப்பாவின் கலாச்சார மூலதனமாக இருந்தது மற்றும் பழங்காலக் கலைகளின் அனைத்து வகையான முன்மாதிரிகளையும் கொண்டிருந்தது, எசுபானியாவோ கடந்த காலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த காட்சி சாதனைகள் அனைத்தையும் ஒத்திசைவான கலைத்துவ திசையில் பெறாமல் இருந்தது. உதவித்தொகை பெற இயலாமல் கோயா தனது சொந்தசெலவில் ரோமுக்குப் பயணப்பட்டார். அந்த நேரத்தில் கோயா எவருக்கும் தெரியாதவராக இருந்தார், எனவே இவருடைய பதிவுகள் குறைவாகவும் நிச்சயமற்றதாகவும் உள்ளன. ஆரம்பகால வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்கள் இவர் காளைபிடி வீரர்களுடன் ரோம் நகருக்குப் பயணம் செய்ததாக குறிப்பிடுகின்றனர். அங்கு அவர் ஒரு வீதி கழைக்கூத்தாடியாக இருந்தார் என்றும் ஒரு பெண்ணுடன் காதல் கொண்டிருந்தார் எனவும் கூறப்படுகிறது[11]. 1771 ஆம் ஆண்டில் பார்மா (Parma) நகரம் ஒழுங்கு செய்த ஓவியப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்றார். அவ்வாண்டிலேயே அவர் சரகோசாவுக்குத் திரும்பினார்[12].

யோசபா பேய்யுவின் உருவப்படம்

கோயா பிரான்சிசு பேய்யுவுடன் நட்புடன் இருந்தார், இவருடைய சகோதரி யோசபாவை 1773 ஆம் ஆண்டு சூலை 25 அன்று திருமணம் செய்து கொண்டார்[13]. இவர்களின் முதல் குழந்தையான அன்டோனியோ யூவான் ரமோன் கார்லோசு 1774 ஆம் ஆண்டு ஆகத்து 29 இல் பிறந்தார்[14].

மேற்கோள்கள்[தொகு]

  1. Historical Clinicopathological Conference (2017) பரணிடப்பட்டது 2020-08-11 at the வந்தவழி இயந்திரம் University of Maryland School of Medicine, retrieved January 27, 2017.
  2. Hughes (2004), 32
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-22. பார்க்கப்பட்ட நாள் 2017-10-19.
  4. Connell (2004), 6–7
  5. "NUESTRA SEÑORA DEL PILAR (OUR LADY OF THE PILLAR)". Archived from the original on 2017-11-20. பார்க்கப்பட்ட நாள் 2017-10-19.
  6. Hughes (2004), 27
  7. Connell (2004), 6
  8. Hughes (2004), 33
  9. Connell (2004), 14
  10. Hagen & Hagen, 317
  11. Hughes (2004), 37
  12. Eitner (1997), 58
  13. Baticle (1994), 74
  14. Symmons (2004), 66

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சிஸ்கோ_கோயா&oldid=3714980" இலிருந்து மீள்விக்கப்பட்டது