உள்ளடக்கத்துக்குச் செல்

பால் கேரஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பால் கேரச்சு
Paul Carus
பிறப்புசூலை 18, 1852
இல்சென்பேர்க், செருமனி
இறப்புபெப்ரவரி 11, 1919(1919-02-11) (அகவை 66)
ஐக்கிய அமெரிக்கா
தேசியம்அமெரிக்கர்
பணிஎழுத்தாளர்
பதிப்பாளர்
அறியப்படுவதுநடைமுறைவாதம்
இறைமறுப்பு
சமயம்பௌத்தம்
வாழ்க்கைத்
துணை
மேரி ஹெகெலெர்

பால் கேரஸ் (Paul Carus, சூலை 18, 1852 - பெப்ரவரி 11, 1919) ஒரு செருமானிய அமெரிக்க எழுத்தாளர், மெய்யியல் பேராசிரியர் மற்றும் உலக மதங்களின் ஒப்பீட்டியல் துறையின் மாணவர் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

கேரஸ் ஒரு கட்டுக்கோப்பான கிறித்தவச் சீர்திருத்தக் குடும்பத்தில் செருமனியில் உள்ள இல்சென்பேர்க் எனும் ஊரில் பிறந்தார். பின்னர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்பேர்க் பல்கலைக்கழகத்திலும், செருமனி-துபிஞ்சேன் பல்கலைக்கழகத்திலும் பயின்றார். 1876 ஆம் ஆண்டு துபிஞ்சேன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற பின்பு ராணுவத்தில் சிறிது காலம் பணிபுரிந்தார், அதன் பின்பு பள்ளியிலும் சிறிது காலம் ஆசிரியராக பணிபுரிந்தார். ஒரு கட்டுக்கோப்பான சீர்திருத்தவாதியாகவே வளர்ந்தாலும் பின்னர் அவர் அந்த நம்பிக்கைகளிலிருந்து நழுவிச் சென்றார்.

அமெரிக்காவுக்குப் புலம்பெயர்வு

[தொகு]

பரந்த பார்வை கொண்ட இவருக்கு பிஸ்மார்க்கின் ஜெர்மனி பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி 1884 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்றார். அங்கு சிகாகோ, லா செல்லே (இலினொய்) ஆகிய ஊர்களில் வசித்தார். எட்வர்ட் ஹெகெலெரின் மகள் மேரியை மணந்தார். பின்னர் மேரியின் தந்தையின் வீட்டுக்குக் குடிபெயர்ந்தனர். அவர்களுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன.

அமெரிக்காவில் செருமானிய மொழியில் வெளிவரும் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்தார். மேலும் இன்டெக்ஸ் போன்ற பல்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகள் எழுதினார்.

1887 ஆம் ஆண்டு அவரது மாமனாரால் தொடங்கப்பட்ட "ஓபன் கோர்ட் பப்ளிஷிங்" குழுமத்திற்கு நிர்வாக ஆசிரியரானார். இதன் நோக்கம் என்னவென்றால், மதங்கள், தத்துவங்கள், அறிவியலைப் பற்றிய விரிவான விவாதங்களுக்கு ஒரு தளத்தை ஏற்படுத்தி கொடுத்தல், மேலும் முக்கியமான தத்துவ நூலை விலை குறைப்பதன் மூலம் பரவலாக அனைவருக்கும் கொண்டு சேர்த்தல்.

இதே நிறுவனம் வெளியிட்ட வேறு இரு காலாந்திர பத்திரிக்கைகளுக்கும் (தி ஓபன் கோர்ட், தி மோநிஸ்ட்) ஆசிரியராக பணிபுரிந்தார்.

பின்னர் நீதிபதி பிரான்சிஸ் சி. ரசல் அவரை அமெரிக்க நடைமுறைவாதக் கொள்கைகளை உருவாக்கிய சார்ல்ஸ் சாண்டர்ஸ் பியேர்ஸ் என்பவருக்கு அறிமுகம் செய்தார். அவருடன் இணைந்து பல கட்டுரைகளைப் பதிந்தார். அவர் வாழ்நாளில் தத்துவம், அறிவியல், மதம், சமூகவியல், வரலாறு, அரசியல், தர்க்கம், மானுடவியல் போன்ற பல்வேறு துறைகளைத் தொட்டு சுமார் 75 புத்தகங்களும், 1500 கட்டுரைகளையும் எழுதினர். இது மட்டும் அல்லாது 19-ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த மிக சிறந்த மனங்களோடு கடிதத் தொடர்பில் இருந்தார். லேவ் தோல்ஸ்தாய், நிக்கோலஸ் டெஸ்லா, எடிசன், ஜான் டூவி, ஏர்ன்ஸ்ட் ஹேக்கல், பூக்கர் டி. வாசிங்டன், ஏர்ன்ஸ்ட் மாக் போன்றவர்கள் அதில் சிலர்.

கேரஸ் தன்னை தத்துவ ஞானி என்பதை காட்டிலும் இறையியலாளர் என்றே முன்வைத்தார். தான் கடவுளை நேசிக்கும் ஒரு நாத்திகவாதி என்றே அவர் கூறினார்.

கேரஸ் மதநல்லிணக்க முயற்சிகளின் முன்னோடி என்று கருதலாம். அறிவியலுக்கும் மதத்திற்கும் உள்ள தொடர்பினை அவர் ஆராய்ந்தார். கிழக்கு தேசிய மதங்களை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்திய பலரில் அவரும் முக்கியமானவர் ஆவார். குறிப்பாக பௌத்தத்தை மேற்குலகிற்கு அறிமுகம் செய்தது, டீ. டி. சுசுக்கியின் பௌத்த நூல்களின் மொழி பெயர்ப்புக்கு உதவியது, பௌத்த குரு சொயன் ஷாகுவுடன் இறுதி வரை நல்ல நட்புறவுடன் இருந்தது என்று அவரது பங்கு பலவகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது.

கிழக்குலக மதங்களின் மேலான ஈடுபாடு அவர் உலக மத கூட்டமைப்பில் (1893) கலந்துகொண்ட பின்னர் வெகுவாக தீவிரமடைந்தது. இறுதிவரை அவர் பௌத்தத்தின் மீது ஆர்வம் கொண்டவராகவே இருந்தார், ஆயினும் அதில் அவர் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. அவரது கோட்பாடுகளான "அறிவியல் மதத்தை" அவர் மீண்டும் மீண்டும் தொடர்ந்து வலியுறித்தினார். மதங்கள் பரிணாமம் அடையும் என்பது அவரது ஆழ்ந்த நம்பிக்கை. இறுதியில் இந்த தொன்ம மதங்களின் எச்சங்களிலிருந்து உண்மையை சாரமாக கொண்ட ஒரு இறுதியான உலக மதம் பிறக்கும் என்று அவர் ஆழ்ந்து நம்பினார்.

அறிவியல் மதம்

[தொகு]

கேரஸ் டச்சு தத்துவ ஞானியான பெனெடிக்ட் டி சௌசா அவர்களின் வழிவந்தவர் என்று கருதலாம். மேற்குலகம் முதன்முதலாக அதன் தத்துவத்தில் இருமையை தேர்ந்தெடுத்தது மிக பெரிய தவறு என்று அவர் எண்ணினார். உடல்-மனம், பொருள்-கருத்து என்று அதன் தொடக்கத்திலயே இருமை பார்வை நிறைந்து இருப்பதை சுட்டி காட்டினார். அவர் அறிவியலின் துணை கொண்டு இந்த இருமையை நிராகரித்தார், அதற்கு மாற்றாக ஒற்றை அறிவை நிறுவ முயன்றார். இந்த தத்துவத்தின் பெயர் தான் மொநிசம்.

இவரது கோட்பாடு கடவுளை ஒரு மனிதராகவோ, உருவமாகவோ கருதவில்லை, இயற்கையின் ஒட்டு மொத்த இயக்கம், அதன் ஒத்திசைவு அதற்குள் இருக்கும் ஒழுங்கு இதையே அவர் கடவுள் என்று கருதினார். இயேசுவை அவர் மீட்பராக ஏற்றுகொண்டாலும் அவர் ஒருவரே மீட்பர் என்று அவர் நம்பவில்லை, இவ்வாறு ஒவ்வொரு மதத்திலும் இருக்கிறார்கள் என்றே அவர் நம்பினார்.

அவரது கோட்பாடுகள் பொருள்முதல்வாதத்திற்கும் மெட்டாபிசிக்ஸ் க்கும் இடையே நடுவாந்திரமான தனி பாதை கொண்டது. உவமைகளை அப்படியே ஏற்றுகொள்வதால் மெட்டாபிசிக்ஸையும் வடிவத்தை மறுதலிப்பதால் பொருள்முதல்வாதத்தயும் அவர் எதிர்த்தார். பேருண்மை என்பது காலம், கர்மம், மனித இச்சை ஆகியவற்றைக் கடந்தது என்கிறார். அறிவியல் என்பது மனிதன் உருவாக்கியது அல்ல, அவன் கண்டுகொண்டது என்கிறார். அறிவியல், இயற்கையின் பெரும் ஒத்திசைவின் ஒரு வெளிப்பாடகவே வெளிவருகிறது. அதனாலே அதற்குள் ஒரு சமநிலை புதைந்துள்ளது என்று கூறுகிறார்.

இவரை கீழ்திசைவாதிகளும், தத்துவவியலாளர்களும் மொத்தமாக நிராகரித்தனர். இவர் நிலைப்பாடு எதிலும் சேராமல் இருந்ததே அதற்கு காரணம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்_கேரஸ்&oldid=2571749" இலிருந்து மீள்விக்கப்பட்டது