பாலிவைனைல் குளோரைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பாலி(1-குளோரோயீத்தேன்)[1]
| |
வேறு பெயர்கள்
பாலிகுளோரோயெத்திலீன்
| |
இனங்காட்டிகள் | |
9002-86-2 | |
Abbreviations | பிவிசி |
ChEBI | CHEBI:53243 |
ChemSpider | ஏதுமில்லை |
KEGG | C19508 |
ம.பா.த | பாலிவினைல்+குளோரைடு |
பண்புகள் | |
(C2H3Cl)n[2] | |
−10.71×10−6 (SI, 22°C) [3] | |
திணிவு | 1380 kg/m3 |
யாங்கின் விகிதம் (E) | 2900-3400 MPa |
நீட்சி வலு(σt) | 50-80 MPa |
அறும்பொழுது நீட்சி | 20-40% |
நாட்சு சோதனை | 2-5 kJ/m2 |
கண்ணாடிநிலை வெப்பம் | 87 °C |
உருகுநிலை | 212 °C |
விக்காட் B (Vicat B)1 | 85 °C |
வெப்பமாற்றுக் குணகம் (λ) | 0.16 W/மீ.K |
வெப்ப நீட்சிக் குணகம் (α) | 8 10-5 /K |
சூடேறு திறன் (c) | 0.9 kJ/(kg·K) |
ஈரம் பற்றுமை (ASTM) | 0.04-0.4 |
விலை | 0.5-1.25 €/கிலோ கிராம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தேறலியம் அல்லது பாலிவினைல் குளோரைடு (Polyvinyl chloride) [4] என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு நெகிழியாகும். இதை பாலிவைனைல் குளோரைடு, வினைல்[5] அல்லது பொதுவாக பி.வி.சி என்ற பெயர்களாலும் அழைப்பர். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது வேதித் தொழில்துறையின்பெறுமதிப்பு மிக்க வேதிப் பொருள்களுள் ஒன்றாகும். பாலியெத்திலீன் மற்றும் பாலிபுரோப்பைலீனுக்கு அடுத்ததாக செயற்கை முறையில் பரவலாக நெகிழி பலபடியாக உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது[6].
நெகிழிகள் இரண்டு அடிப்படை வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. கடின நெகிழி, இளகும் நெகிழி என்பன அவ்விரண்டு வகைகளாகும். கடின நெகிழியை சிலநேரங்களில் சுருக்கமாக ஆர்.பி.வி.சி என்று சுருக்கி அழைப்பார்கள். நீர் வழங்கும் அல்லது கழிவகற்றும் குழாய்கள் கட்டுமானம், கதவுகள் மற்றும் சன்னல்கள், கிராமப்போன் தட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் பயன்பாடுகளில் கடின நெகிழி பயன்படுத்தப்படுகிறது.மேலும் இது புட்டிகள் எனப்படும் பாட்டில்கள், உணவு அல்லாத பொருட்களை சிப்பமாக்கல் அட்டைகள் தயாரித்தல் (வங்கி அல்லது உறுப்பினர் அட்டைகள் போன்றவை) போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெகிழியாக்கிகளை கூடுதலாக கடினநெகிழிகளுடன் சேர்க்கும் போது மேலும் மென்மையான நெகிழ்வான தன்மை கொண்டதாக உருவாக்க முடியும். தாலேட்டுகள் எனப்படும் நெகிழியாக்கி மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இளகு குழாய்கள், மின் கம்பிகளுக்கான காப்பு உறைகள், மழை ஆடைகள், சாயல் தோல், விளம்பர வடிவங்கள், வரைவி பதிவேடுகள் [7] போன்றவற்றைத் தயாரிக்க இளகும் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஊதுபொருட்கள் மற்றும் பல பயன்பாடுகளில் நெகிழிகள் இரப்பருக்கு மாற்றாக வந்துள்ளன [8].
தூய பாலிவினைல் குளோரைடு வெள்ளை நிறம் கொண்டதாகும். உடையக்கூடியதும் திடமானதுமாகவும் காணப்படுகிறது. ஆல்ககாலில் இது கரையும் ஆனால் டெட்ராஐதரோபியூரானில் சற்றே கரையும்.
உலக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்ற பிவிசியின் 50% கட்டுமானத் தொழிலிலேயே பயன்படுகின்றது. பிவிசியினால் உருவாக்கப்படும் கட்டிடப்பொருட்கள் விலை குறைந்தவை என்பதுடன் சுலபமாகப் பொருத்தப்படக்கூடியவை. அண்மைக்காலங்களில் பிவிசி, பாரம்பரியமான கட்டிடப்பொருட்களான மரம், காங்கிறீற்று, உலோகம், களிமண் போன்ற பொருட்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. பல வழிகளிலும் சிறப்பானதாகத் தோன்றும் இப்பொருளால் சூழலுக்கும், மனிதர்களின் உடல் நலத்துக்கும் ஏற்படக்கூடிய தீங்குகள் பற்றிக் கேள்விகள் எழுந்துள்ளன. இதனால், சூழல் பாதுகாப்பையும், மக்கள் நலனையும் முன்னிறுத்தி இயங்கிவரும் பல நிறுவனங்கள், பிவிசியின் பயன்பாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்து வருகின்றன.
கண்டுபிடிப்பு
[தொகு]செருமன் வேதியியலாளர் இயுகென் பௌமான் 1872 ஆம் ஆண்டில் தற்செயலாக இதைத் தயாரித்தார் [9]. வினைல் குளோரைடு குவளையின் உள்ளே ஒரு வெண்மையான திண்மமாக இந்த பலபடி தோன்றியது, அதை சூரிய ஒளியின் வெளிச்சத்தில் படுமாறு வைக்கப்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உருசிய வேதியியலாளர் இவான் ஓசுட்ரோமிலன்சுக்கி மற்றும் செருமனிய இரசாயன நிறுவனமான கிரெசெய்ம்-எலக்ட்ரான் நிறுவனத்தைச் சேர்ந்த பிரிட்சு கிளாட்டி என்ற இருவரும் வணிகப் பொருட்கள் தயாரிப்பில் நெகிழியைப் பயன்படுத்த முயற்சித்தனர், ஆனால் கடினத்தன்மையை செயலாக்குவதில் அவர்களுக்கு இடர்பாடுகள் தோன்றின. சில சமயங்களில் உடையும் பலபடி அவர்களின் முயற்சியை முறியடித்தது. 1926 ஆம் ஆண்டில் வால்டோ செமன் மற்றும் பி.எப்.காட்ரிட்சு நிறுவனம் நெகிழியாக்கியைச் சேர்த்து இளக்கும் ஒரு புது முறையை உருவாக்கியது. இதனைத் தொடர்ந்து நெகிழிப் பயன்பாடு பரவலாக்கப்பட்டது.
உற்பத்தி
[தொகு]தேறலியப் பாசிகம், அதாவது வினைல் குளோரைடை பலபடியாக்குவதன் மூலம் பலபடியத் தேறலியப் பாசிகம் (பாலிவினைல் குளோரைடு) உற்பத்தி செய்யப்படுகிறது[10].
கிட்டத்தட்ட 80% நெகிழி தொங்கல் பலபடியாக்கல் முறையில் தயாரிக்கப்படுகிறது. பால்மப் பலபடியாக்கல் முறையில் 12% நெகிழியும், பருமப் பலபடியாக்கலில் 8% நெகிழியும் தயாரிக்கப்படுகின்றன. பலபடியாக்கல் வினையை பல்லுறுப்பாக்கல் வினை என்றும் அழைக்கலாம். தொங்கல் பலபடியாக்கலில் கிடைக்கும் நெகிழிகளில் உள்ள துகள்கள் சராசரியாக 100–180 μமீ அளவில் காணப்படுகின்ற்ன.பால்மப் பலபடியாக்கலில் இதைவிடச் சிறிய துகள்கள் 0.2 μமீ அளவில் காணப்படுகின்றன. வினைல் குளோரைடு ஒருமமும் தண்ணீரும் பலபடியாக்க வினை முடுக்கிகள் மற்றும் இதரக் கூட்டுசேர் பொருட்கள் உள்ள உலையில் சேர்க்கப்படுகின்றன. வினைநிகழும் உலையில் உள்ள வினைப்பொருட்கள் அழுத்தத்திற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக ஒருமத்தையும் நீரையும் கலந்து தொங்கல் பராமரிக்கப்படுகிறது. பாலிவினைல் குளோரைடு பிசினில் உள்ள துகள்களின் அளவு ஒரே சீரான அளவாக இருப்பது உறுதிபடுத்திக் கொள்ளப்படுகிறது. வினையானது வெப்ப உமிழ் வினையாகும் என்பதால் இங்கு குளிரூட்டல் அவசியமாகும். வினையின்போது கன அளவு குறையுமென்பதால் வினைக் கலவையுடன் தொடர்ச்சியாக நீர் சேர்க்கப்பட்டு தொங்கல் பராமரிக்கப்படுகிறது [6].
வினைல் குளோரைடு ஒருமத்தின் பலபடியாக்கல் வினை வினைமுடுக்கிகள் எனப்படும் சேர்மங்களின் நீர்த்துளிகளால் துவக்கப்படுகிறது. இச்சேர்மங்கள் உடைந்து தனியுறுப்பு சங்கிலி வினைகளைத் தொடங்குகின்றன. டையாக்டனோயில் பெராக்சைடு மற்றும் டைசீட்டைல் பெராக்சி டைகார்பனேட்டு போன்ற சேர்மங்கள் குறிப்பிட்ட சில வினை முடுக்கிகளாகும். சில வினைமுடுக்கிகள் வினையை விரைவாகத் தொடங்குகின்றன ஆனால் விரைவில் சிதைவடைகின்றன. சில வினைமுடுக்கிகள் இதற்கு தலைகீழாக செயல்படுகின்றன. பலபடியாக்கம் ஒரு சீரான விகிதத்தில் நிகழ இரு வேறுபட்ட வினை முடுக்கிகளின் கலவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றது. பலபடி சுமார் 10 மடங்காக வளர்ந்த பின்னர் குறுகிய பலபடி வினைல் குளோரைடு ஒருமத்திற்குள் வீழ்படிவாகின்றது. இவ்விழ்படிவில் பலபடியாக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. வர்த்தக பலபடிகளின் எடைச் சராசரி மூலக்கூற்று எடை 100,000 முதல் 200,000 வரையாக இருக்கும். எண்ணிக்கைச் சராசரி மூலக்கூற்று எடை 45,000 முதல் 64,000 ஆகவும் இருக்கும். வினையின் பாதை ஒரு முறை தொடங்கியவுடன் உருவாகும் பாலிவினைல் குளோரைடு குழம்பிலிருந்து வாயு நீக்கப்படுகிறது. அதிகப்படியாக உள்ள வினைல் குளோரைடு ஒருமம் தனியே பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்குப் பயன்படுத்தப்படுகிறது. உருவான பலபடியிலுள்ள தண்ணீரை அகற்றுவதற்காக அது மையவிலக்கு அமைப்பின் வழியாகச் செலுத்தப்படுகிறது. பின்னர் இக்குழம்பு காற்றுப் படுக்கையில் உலர்த்தப்படுகிறது. இப்போது கிடைக்கும் தூளை சிறுசிறு உருண்டைகளாக்குவதற்கு முன்னர் நன்றாகச் சலித்துக் கொள்ளப்படுகிறது. பொதுவாக இவ்வாறு கிடைக்கின்ற பாலிவினைல் குளோரைடில் வினைல் குளோரைடு ஒருமம் மில்லியனுக்கு ஒரு பகுதி அளவிற்கே காணப்படும்.
மேற்கோள்
[தொகு]- ↑ "poly(vinyl chloride) (CHEBI:53243)". CHEBI. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
- ↑ "Substance Details CAS Registry Number: 9002-86-2". Commonchemistry. CAS. பார்க்கப்பட்ட நாள் 12 July 2012.
- ↑ Wapler, M. C.; Leupold, J.; Dragonu, I.; von Elverfeldt, D.; Zaitsev, M.; Wallrabe, U. (2014). "Magnetic properties of materials for MR engineering, micro-MR and beyond". JMR 242: 233–242. doi:10.1016/j.jmr.2014.02.005. https://arxiv.org/pdf/1403.4760.
- ↑ https://www.oxfordlearnersdictionaries.com/pronunciation/american_english/polyvinyl-chloride
- ↑ What is PVC பரணிடப்பட்டது 2017-07-18 at the வந்தவழி இயந்திரம்- Retrieved 2017-07-11
- ↑ 6.0 6.1 M. W. Allsopp, G. Vianello, "Poly(Vinyl Chloride)" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2012, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.a21_717.
- ↑ Barton, F.C. (1932 [1931]). Victrolac Motion Picture Records. Journal of the Society of Motion Picture Engineers, April 1932 18(4):452–460 (accessed at archive.org on 5 August 2011)
- ↑ W. V. Titow (31 December 1984). PVC technology. Springer. pp. 6–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85334-249-6. பார்க்கப்பட்ட நாள் 6 October 2011.
- ↑ Baumann, E. (1872) "Ueber einige Vinylverbindungen" (On some vinyl compounds), Annalen der Chemie und Pharmacie, 163 : 308–322.
- ↑ Chanda, Manas; Roy, Salil K. (2006). Plastics technology handbook. CRC Press. pp. 1–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-7039-7.