பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்
நிறுவப்பட்டது | 2016 |
---|---|
அமைவிடம் | உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தரமணி, சென்னை - 600 113 |
ஆள்கூற்று | 11°21′06″N 77°43′09″E / 11.3517°N 77.7191°E |
வகை | வாழ்வியல் அருங்காட்சியகம் |
சேகரிப்புகள் | 1500 |
உரிமையாளர் | தமிழ்நாடு அரசு |
வலைத்தளம் | www.pazhanthamizharvazhviyal.org |
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம் என்பது இந்திய நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னை, தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்பட்ட காட்சிக்கூடமாகும். இதில் பழந்தமிழர்களின் சிறப்புகளை எடுத்துக் காட்டும் வகையில், ஆறு அரங்குகளில் சங்க காலத் தமிழர்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஓவியக் கலை, மரச் சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.[1]
காட்சிப்படுத்தப்பட்டவை
[தொகு]ஒரே கல்லில் செதுக்கப்பட்ட தேர்வடச் சங்கிலி, அன்னப்பறவை, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், ஒளவையார், தமிழ்த் தாய், தொல்காப்பியர், கபிலர் உருவங்கள், பாலை நிலத்தின் தெய்வம் கொற்றவை சிலை உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் பழந்தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட நீர் மேலாண்மை, பாசன முறைகள், நெசவுத் தொழில்நுட்பங்கள், குருகுலக் கல்வி, புறநானூற்றுச் சம்பவங்கள், பாரம்பரிய விளையாட்டுகள் போன்றவற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. இவைதவிர, தமிழ் வீரர்கள் பயன்படுத்திய வாள், கேடயம், ஈட்டி உள்ளிட்ட பல்வேறு போர்க் கருவிகள் போன்றவையும் ஆயுதங்கள் தயாரிக்கும் உலைக்களம், மேற்கொண்ட தொழில்கள் ஆகியவையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
திரையரங்கம்
[தொகு]இந்தக் காட்சிக் கூடத்தையொட்டி, தமிழ்த்தாய் ஊடக அரங்கு என்ற பெயரில் 2,300 சதுர அடியில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய குளிர்சாதன வசதி கொண்ட திரையரங்கம் அமைந்துள்ளது. இதில் மொத்தம் 56 இருக்கைகள் உள்ளன. இதில் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தைப் பார்வையிடுவதற்கு வரும் பார்வையாளர்களுக்கு சங்ககாலத் தமிழர்களின் போரியல், ஆட்சித்திறன், மருத்துவ முறை, கல்வி போன்றவை தொடர்பான குறும்படங்கள் காட்டப்படுகின்றன.[2]
அரங்குகள்
[தொகு]இங்கு ஆறு அரங்குகள் தொல்காப்பியர் அரங்கு, திருவள்ளுவர் அரங்கு, கபிலர் அரங்கு, ஔவையார் அரங்கு, இளங்கோவடிகள் அரங்கு, கம்பர் அரங்கு என்ற பெயர்களில் அமைந்துள்ளன.
தொல்காப்பியர் அரங்கு
[தொகு]தொல்காப்பியர் அரங்கில் தமிழரின் கலைநுட்பங்கள் சிறப்பிடம் பெறுகின்றன. எழில்மிகு கதவு, ஒரே சிற்பத்தின் இருபுறங்களிலும் ஆடலரசியான மாதவி மற்றும் துறவறம் பூண்ட மணிமேகலையின் தோற்றங்கள், எழில்மிகு வடிவமைப்பில் அன்னம், காளை, மரத்தூண்கள், கற்றூண்கள், கற்சங்கிலி, கல்லாலான வசந்த மண்டபம், யானை-காளை இணைந்த வடிவம், உலோகத்தாலான தமிழ்த்தாய், கபிலர், ஔவையார், தொல்காப்பியர் சிலைகள், மரத்தாலான நடராசர் சிற்பம் போன்றவையும் பழந்தமிழர் வாழ்வியலைப் படம்பிடிக்கும் பல்வேறு ஓவியங்களும் இடம்பெற்றுள்ளன.
திருவள்ளுவர் அரங்கு
[தொகு]திருவள்ளுவர் அரங்கில், பழந்தமிழரின் உலோகவியல் நுட்பம், மருத்துவ நுட்பம், நெசவுத் தொழில்நுட்பம், போரியல் நுட்பம், நீர் மேலாண்மை, வேளாண் மேலாண்மை, மண்பாண்டத் தொழில்நுட்பம், பண்டைக்கால கல்விமுறை, ஆகியற்றை எடுத்தியம்பும் ஓவியங்கள், மாதிரி வடிவங்கள், நிழற்படங்கள், கற்சிற்பங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், பல்வேறு போர்க்கருவிகள் ஆகியன இடம்பெற்றுள்ளன.
கபிலர் அரங்கு
[தொகு]கபிலர் அரங்கில், தமிழர் குடும்ப அமைப்பு முறை, பல்வேறு வகையான இல்லப் புழங்குபொருட்கள், ஐந்திணை வாழ்வியல் காட்சிகள், சுடுமண் சிற்பங்கள், இசைக் கருவிகள், தமிழர் அளவைகள், கற்சிற்பங்கள், இலக்கியப் பறவைகளின் வடிவங்கள் போன்றன காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஔவையார் அரங்கு
[தொகு]ஔவையார் அரங்கில், பண்டை அரசர்களின் அறம்-வீரம்-நீதிவழுவாமை-போர்முறை-கொடை போன்ற உயர் பண்புகளும், கோட்டை, அரண்மனை, கோயில்கள், பண்டைய நகரமைப்பு, கல்லணை போன்ற கட்டுமான நுட்பங்களும், மகளிர் வீரம், புறப்புண் நாணுதல், வஞ்சினம் மொழிதல், வடக்கிருத்தல் போன்ற பண்பாட்டுச் சிறப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன
இளங்கோவடிகள் அரங்கு
[தொகு]இளங்கோவடிகள் அரங்கில், பண்டைத் தமிழரின் வெளிநாட்டு வணிகம், வணிக வீதி அமைப்பு, கப்பல் கட்டுமான நுட்பம் போன்றவற்றின் ஓவியங்களும் கலங்கரை விளக்கம், நெசவுக் கருவிகள், நாவாய் போன்ற மாதிரி வடிவங்களும் உலோகக் கருவிகள், வேளாண்மை நுட்பம், நீர் மேலாண்மை போன்றவற்றின் நிழற்படங்களும் இடம்பெற்றுள்ளன.
கம்பர் அரங்கு
[தொகு]கம்பர் அரங்கில் பல்வேறு வகையான இசைக்கருவிகள், தமிழகப் பழங்குடிகளின் அரிதான புழங்குபொருட்கள், பல்வேறு சடங்கியில் நிகழ்வுகளின் நிழற்படங்கள், பல்வேறுவகை நாட்டுப்புறக் கலைசார் பொருட்கள், தெருக்கூத்துக் கலைப் பொருட்கள், தமிழினத்தின் தொன்மை, அறிவு நுட்பம் போன்றவற்றை உணர்த்தும் தொல்லியல் கண்டுபிடிப்புகள் போன்றன இடம்பெற்றுள்ளன.
தமிழ்த்தாய் ஊடக அரங்கு
[தொகு]பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடத்திற்கு வரும் பார்வையாளர்கள் கண்டு பயனுறும் வகையில், பழந்தமிழர் விழுமியங்கள் குறித்த ஆவணப் படங்களைத் திரையிடுவதற்கெனத் ’தமிழ்த்தாய் ஊடக அரங்கு’ ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. நவீனத் தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இவ்வரங்கம் சுமார் 100 இருக்கைகள் கொண்டது. இவ்வூடக அரங்கில் 1. பழந்தமிழர் வாழ்வியல் 2. பழந்தமிழர் ஐந்திணை வாழ்வியல் 3. பழந்தமிழர் வேளாண் மேலாண்மை 4. பழந்தமிழர் நெசவுத் தொழில்நுட்பம் 5. பழந்தமிழர் கட்டடக்கலை 6. பழந்தமிழர் நீர் மேலாண்மை 7. பழந்தமிழர் மருத்துவம் 8. பழந்தமிழர் ஆட்சித்திறன் 9. பழந்தமிழர் போரியல் 10. பழந்தமிழர் மரபுக் கலைகள் ஆகிய ஆவணப் படங்கள் திரையிடப்படுகின்றன. இப்படங்களைக் காட்சிக்கூடப் பொறுப்பாளர் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகன் அவர்கள் தயாரித்துள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ரூ.29 கோடியில் கட்டப்பட்டுள்ள மதுரை தமிழ்ச் சங்க வளாகம், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்". தி இந்து (தமிழ்). மார்ச், 2. 2016. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help) - ↑ "சங்க காலத்துக்கே அழைத்துச் செல்லும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்". தினமணி. 6 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 ஏப்ரல் 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)