பயனர்:ஃபெய்ரி/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அறிவழகன் கைவல்யம் (அக்டோபர் 21, 1974). தமிழ் எழுத்தாளர். சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை தமிழில் எழுதி வருகிறார்.

பிறப்பு[தொகு]

கை. அறிவழகன் 1974-ம் ஆண்டு காரைக்குடி அருகே சிறாவயல் மருதங்குடி என்னும் ஊரில் ச.கைவல்யம் - கலாவதி இணையருக்கு மகனாய்ப் பிறந்தார்.

கல்வி[தொகு]

தமிழ்நாடு, காரைக்குடியில் உள்ள சிறுமலர் ஆர். சி. நடுநிலைப்பள்ளியிலும், அழகப்பா மாதிரி மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்துள்ளார். காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி புவியமைப்பியல் துறையில் இளங்கலைப் பட்டமும், சென்னையில் உள்ள தொழில்நுட்ப இயக்குநரகத்தில் ‘அலுவலகக் கட்டமைப்பு மற்றும் மேலாண்மை’ துறையில் பட்டயக் கல்வியும் பெற்றுள்ளார். மேலும், மும்பை பல்கலைக்கழகத்தில் மனிதவளத்துறையில் பட்டயக் கல்வி பெற்றுள்ளார்.

தனி வாழ்க்கை[தொகு]

கை. அறிவழகன் மார்ச் 26, 2002-ல் சுமதி யை திருமணம் செய்தார். மகள் நிறைமொழி அறிவழகன் இருபது ஆண்டுகள் மனிதவளத்துறையில் பணியாற்றியுள்ளார். வெவ்வேறு பணிகளினிமித்தம் பல்வேறு நகரங்களில் வசித்துவந்தவரின் தற்போதைய வாழ்விடம் சென்னை.

பொது வாழ்க்கை[தொகு]

கை.அறிவழகன் பள்ளிக்காலத்தில் திராவிடர் கழகத்தின் மாணவரணியில் இணைந்து செயலாற்றினார். பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் அடிப்படை உறுப்பினராக இணைந்தார். சமுகப் பிரச்சனைகள் குறித்தும், ஈழப்போர் குறித்தும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை ஒருங்கிணைத்தார். விவாதங்களையும் முன்னெடுத்தார்.

அறிவழகன் பொதுவுடைமைச் சித்தாந்தம் மற்றும் பேரண்ட அறிவியல் இயக்கத்திலும் ஈடுபாடு கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை[தொகு]

கை. அறிவழகன், 2010-ம் ஆண்டு தன்னுடைய முதல் சிறுகதையை எழுதினார். அந்தச் சிறுகதை 2011-ல் பிரசுரம் கண்டது. இவரது வலைப்பூவிலும், இலக்கிய இதழ்களிலும், ஆனந்த விகடன் உள்ளிட்ட அச்சு இதழ்களிலும் கை.அறிவழகனின் கதைகள் வெளிவந்திருக்கின்றன.

'மனித இனக்குழு வரலாறும், ஆரியமும்' என்கிற ஆய்வுத் தொகுப்பும், 'வடகிழக்கில் வசிக்கும் சூரியன்' என்கிற பயணக் கட்டுரைகளின் தொகுப்பும் வெளியாகியுள்ளன.

கை.அறிவழகன் கவிதைகள் வலைப்பூவில் எழுதப்பட்டன. அவை அச்சு வடிவம் பெறவில்லை. திரைப்படங்களில் பாடலாசிரியரகவும் பங்களித்துள்ளார்.

ஆன்டன் செகாவ், கலைஞர் மு. கருணாநிதி, ஜெயமோகன், பாப்லோ நெரூடா, எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயகாந்தன், சாரு நிவேதிதா, இமையம், எர்னஸ்ட் ஹெமிங்வே, மோ யென், மாயா ஏஞ்சலோ, மீனா கந்தசாமி ஆகியோரைத் தன் இலக்கிய ஆக்கங்களில் பாதிப்பு செலுத்திய முன்னோடிகளாக குறிப்பிடுகிறார்.

விருதுகள்[தொகு]

  • புதுமைப்பித்தன் இளம் படைப்பாளர் விருது
  • பெரியார் சாக்ரட்டீஸ் விருது

இலக்கிய இடம்[தொகு]

கை. அறிவழகனின் சிறுகதைகள், எளிய மனிதர்களின் துயரமும் களிப்பும் கொண்ட வாழ்க்கையை பேசும் யதார்த்தவாதச் சிறுகதைகள். திராவிட இயக்கச் சார்பும் முற்போக்கு அழகியலும் கொண்டவை. கை.அறிவழகன் தமிழில் கலை- பண்பாட்டுப் பிரச்சினைகளை விவாதிப்பவராகவும் அறியப்படுகிறார்.

படைப்புகள்[தொகு]

  • முற்றத்து மரங்கள் (சிறுகதைத் தொகுப்பு, தகிதா பதிப்பகம் - 2011)
  • கூலிக்காரப் பயலுக (சிறுகதைத் தொகுப்பு, புது எழுத்து பதிப்பகம் - 2021)
  • மனித இனக்குழு வரலாறும், ஆரியமும் (ஆய்வுக் கட்டுரைகள், திராவிடன் குரல் பதிப்பகம் - 2022
  • வடகிழக்கில் வசிக்கும் சூரியன் (பயணக் கட்டுரை, விஸ்டம் கார்ட் பதிப்பகம் - 2024)