பம்பரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பம்பரம்

பம்பரம் (top,அல்லது spinning top) ஒரு சமானப்புள்ளியில் நிலைத்து, அதனைச்சுற்றிய அச்சில் சுழலும் ஒரு விளையாட்டுச் சாதனமும், அதனை வைத்து விளையாடப்படும் ஒரு விளையாட்டு் ஆகும். பம்பரத்தை அதன் தண்டைச் சுற்றி கைவிரல்கள் அல்லது கயிறு அல்லது சாட்டை கொண்டு சுழற்றி விடும்போது வளைவுந்த விசையினால் நிலைத்திருந்து சுழல முடிகிறது. சுழலும்போது காற்றுமண்டலத்துடன் ஏற்படும் உராய்வினால் இந்த விசையின் தாக்கம் குறையும்போது முதலில் அச்சு திசைமாறி கடைசியாக நிலைதடுமாறி விழுகிறது. பம்பரம் உலகின் பல பகுதிகளிலும் விளையாடப்படுகிறது.

இந்த விளையாட்டு மிகத்தொன்மையான காலம் தொட்டே உலகின் பல பண்பாடுகளிலும் விளையாடப்பட்டு வந்துள்ளது. இதற்கான சான்றுகள் பல தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்துள்ளன.[1] இவ்விளையாட்டு சூதாடவும் வருங்காலம் உரைக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பம்பரம் தயாரித்தல்[தொகு]

பம்பரம் தயாரித்தல் என்பது ஒரு குடிசைத் தொழிலாக உள்ளது. பம்பரம் பொதுவாக கொய்யா மரக்கட்டை அல்லது கருவேல மரக்கட்டையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. மரக்கட்டைகளை முதலில் மேல்பகுதி அகன்றும் கீழே வர வரக் குறுகியும் கூம்பு வடிவில் செதுக்க வேண்டும். பின்பு அத்துடன் ஆணியை இணைக்க வேண்டும். பின்னர் இதன் மேல் கண்கவரும் வகைகளில் வண்ணம் தீட்டப்படுகிறது. இதைச் சுழற்ற ஒரு மீட்டர் நீளமுள்ள சாட்டை என்றழைக்கப்படும் கயிறு பயன்படுத்தப்படுகிறது. தற்காலங்களில் உலோகம் அல்லது நெகிழிப் பொருட்களாலும் பெருமளவில் பம்பரம் தயாரிக்கப்படுகிறது.

விளையாடும் முறை[தொகு]

பம்பரம்

பம்பரக்கட்டை மற்றும் கயிறைப் பயன்படுத்தி விளையாட்டைத் துவங்க வேண்டும். இதனை ஒருவராகவோ அல்லது பலருடன் சேர்ந்தோ விளையாடலாம்.

பம்பரத்தைக் கொண்டு பல வித விளையாட்டுகள் விளையாடப்படுகின்றன. முதலில் தரையில் ஒரு வட்டமிட்டுக் கொள்ள வேண்டும், பின்பு 1, 2, 3 சொல்லி எல்லோரும் பம்பரத்தை ஒரே நேரத்தில் சுழற்ற வேண்டும். பின்பு சாட்டையை பயன்படுத்தி பம்பரக்கட்டையை மேல் எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்க முடியாதவர்களின் பம்பரங்களை வட்டத்தின் உள்ளே  வைக்க வேண்டும். வெளியே உள்ளவர்கள் வட்டத்திலிருக்கும் பம்பரத்தை, தங்கள் பம்பரத்தைப் பயன்படுத்தி வெளியே எடுக்க வேண்டும். அவ்வாறு பம்பரத்தை வட்டத்தினுள் விடும்போது, பம்பரம் இல்லாதவர் அந்தப் பம்பரத்தை பிடித்துவிட்டால் அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வந்துவிடும். சுழற்றுபவரின் பம்பரம் சுழலவில்லை எனில், அந்தப் பம்பரமும் வட்டத்தினுள் வைக்கப்படும்.  வட்டத்தில் உள்ள அனைத்துப் பம்பரங்களும் வெளியே வந்து விட்டால் மீண்டும் ஆட்டத்தைத் துவங்க வேண்டும்.

விளையாட்டைக் கற்றுக்கொள்ளுதல்[தொகு]

பம்பரம் கற்றுக்கொள்ளும் முதல்  தலைமுறைக்கான எளிய வழி வருமாறு. பம்பரக்கயிறு சுற்றிய பின், பம்பரத்தை நேராகக் கையில் பிடித்து , பம்பரக்கயிறின் ஒருமுனையை கட்டைவிரலுக்கும் தொடுவிரலுக்கும் நடுவில் வைத்துக்கொள்ள வேண்டும்; கீழே குனிந்த நிலையில் நின்று பம்பரம் உள்ள கையை முடிந்த அளவு முன்பக்கம் வேகமாகக் கொண்டு சென்று அதே வேகத்தில் கையைப் பின்பக்கம் கொண்டுவர வேண்டும்; பின்பக்கம் கையை இழுக்கும்போது பம்பரக் கயிற்றை மட்டும் கையில் வைத்துக்கொள்ள வேண்டும்; பம்பரம் தரையில் பட்டுக் கயிற்றின் மூலம் கிடைத்த விசையால் சுற்றும். தோளுக்கு மேலே ஆனால் உடலுக்கு வேளியே, கையை இழுத்து பம்பரம் உள்ள கையை சுழற்ற வேண்டும். இந்த முறையில் பம்பரத்திற்கு கொஞ்சம் கூடுதல் விசை கிடைக்கும். கீழே விழுந்த பம்பரம் சற்று கூடுதல் நேரம் சுற்றும். தலைக்கு மேலே பம்பரம் உள்ள கையைக் கொண்டு சென்று, முடிந்த அளவு வேகமாகப் பம்பரத்தை விட வேண்டும். இதன் வேகம் அதிகமாதலால், பம்பரம் 'உர்ர்ர்ர்ர்ர்ர்ர்' என்ற சத்தத்துடன் சுற்ற ஆரம்பிக்கும், பம்பரப் போட்டியில் எதிரியின் பம்பரத்தில் ஆக்கூறு அடித்து உடைக்க குத்து முறை மட்டுமே உதவும்.

தமிழ் இலக்கியங்களில் பம்பரம்[தொகு]

சப்பானிய பம்பரங்கள்

பம்பரம் பற்றிய குறிப்புகள் இராமாயணம் மற்றும் கந்தபுராணம் போன்ற நூல்களில் கொடுக்கப்பட்டுள்ளன. “பம்பரம் போலச் சுழன்றான்” என இராமாயணத்தில் குறிப்பிடப்படுகிறது.

தமிழகத்தில் பம்பர விளையாட்டின் நிலை[தொகு]

இன்று பம்பரம் விளையாடுபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகிறது.  இந்தப் பாரம்பரிய விளையாட்டை அழியாமல் காப்பாற்ற சில  தனி மனிதர்களும், அமைப்புகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

வட்டத்துக்குள் உள்ள பம்பரத்தை குத்தி வெளியேற்றும் முயற்சியில் உள்ள மதுரையை சேர்ந்த சிறுவர்கள்

விளையாட்டு வகை[தொகு]

பம்பரம் விடும் விளையாட்டு தமிழக நாட்டுப்புறங்களில் சிறுவர்களால் 1950-ஆம் ஆண்டு வரையில் பரவலாக விளையாடப்பட்டது. இது ஒரு கைத்திற விளையாட்டு. இதில் ஓயாக்கட்டை, உடைத்த-கட்டை, பம்பரக்குத்து என 3 வகை உண்டு.[2]

ஓயாக்கட்டை[தொகு]

தரையில் அல்லது உள்ளங்கையில் பம்பரத்தை யார் அதிக நேரம் சுழலச் செய்கிறார்கள் என்று பார்த்துப் பழம் சொல்வது ஓயாக்கட்டை.

உடைத்த கட்டை[தொகு]

பட்டவனின் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வட்டத்திலிருந்து அகற்றி ஓர் எல்லைவரை சுற்றிவிடும் பம்பரத்தாலேயே அகற்றிக்கொண்டு சென்று, பட்டவன் பம்பரத்தை உடைத்துவிடுவது உடைத்த கட்டை.

பம்பரக்குத்து[தொகு]

வட்டத்துக்குள் வைக்கப்பட்டிருக்கும் பம்பரத்தைச் சுற்றிவிடும் பம்பரத்தால் வெளியேற்றுவது பம்பரக்குத்து. மாங்கொட்டை அல்லது குச்சியை நடுவில் வைத்து அதனை வெளியேற்றுவர். வெளிவந்ததும் எல்லாரும் சிங்கம் தூக்குவர். கடைசியாகத் தூக்குபவர் பட்டவர். அவரது பம்பரம் வட்டத்துக்குள் வைக்கப்படும். இருவரோ, பலரோ சேர்ந்து இதனை விளையாடுவர். இந்த விளையாட்டில் 'தலையாரி ஆட்டம்' என்று 3 பாங்குகள் உண்டு.

 1. ஒரு வட்டம் போட்டு விளையாடுவது - ஒருவட்டக்குத்து,
 2. ஒன்றிற்குள் ஒன்றாக இரு-வட்டம் போட்டு விளையாடுவது - இருவட்டக்குத்து,
 3. குறிப்பிட்ட தொலைவில் இருவேறு வட்டங்கள் போட்டுக் கடத்திச் சென்று விளையாடுவது - தலையாரி ஆட்டம்

பம்பர-விளையாட்டுக் கலைச்சொற்கள்[தொகு]

 • அமுக்கு = வட்டத்துக்குள் சுற்றும் பம்பரத்தை அமுக்கி வைத்தல்
 • சாட்டையடி = சுற்றும் பம்பரத்தால் வெளியேற்றுவது
 • சிங்கம் = பம்பரம் தரையில் சுற்றும்போது கயிற்றைச் சுண்டி எடுத்து அல்லது கையால் எடுத்து, கைத்திறனால் தொடர்ந்து சுற்றும்படி தரையில் விடாமல் கையில் பிடித்துக்கொள்ளுதல் அல்லது கையிலேயே சுழலச் செய்தல்
 • பழம் = வெற்றி
 • மட்டை = பம்பரத்தைத் தலைகீழாகச் சுற்றுதல்
 • மட்டையடி = கயிற்றில் உருவிய பம்பரம் சுற்றாமல் வெளியேற்றுவது.

அடிக்குறிப்பு[தொகு]

 1. D. W. Gould (1973). The Top. NY: Clarkson Potter. ISBN 0-517-504162. 
 2. கட்டுரையாளர் செங்கைப் பொதுவன் விளையாடிய பட்டறிவு

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

Search Wikimedia Commons விக்கிமீடியா பொதுவகத்தில் பம்பரம் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பம்பரம்&oldid=2243461" இருந்து மீள்விக்கப்பட்டது